Stalin asks Is PM Modi told lie

பிரதமர் மோடி இப்படியா பொய் சொல்வது? – ஸ்டாலின் கேள்வி!

அரசியல்

மாநில அரசுக்குத் தராமல் மக்களுக்கு நேரடியாக நிதி வழங்கி வருவதாக அப்பட்டமான ஒரு பொய்யை பிரதமர் மோடி சொல்லியிருக்கிறார் என்று முதல்வர் ஸ்டாலின் இன்று (மார்ச் 6) குற்றம்சாட்டியுள்ளார்.

அரசின் நலத்திட்டங்கள் மக்களை சென்றடைகிறதா என்பதை உறுதிசெய்வதற்காக நீங்கள் நலமா? என்ற திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்து, பயனாளிகளிடம் நேரடியாக தொலைபேசியில் தொடர்புகொண்டு அரசு நலத்திட்டங்கள் குறித்து கேட்டறிந்தார்.

இந்த நிகழ்ச்சி குறித்து ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”எங்களைச் சிலர் குடும்ப ஆட்சி என்று சொல்கிறார்கள். ஆம் இது குடும்ப ஆட்சிதான். தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தையும் கை தூக்கிவிடும் ஆட்சி இது.

ஆட்சிக்கு வந்த ஓராண்டு காலத்தில் ஏராளமான மனுக்கள் என்னைத் தேடித் தேடி வழங்கப்பட்டது. அப்படி வழங்கப்பட்ட கோரிக்கைகளை நமது அரசு நிறைவேற்றிக் கொடுத்த காரணத்தால் இப்போது நான் செல்லும் பயணங்களில் மக்களின் கைகளில் மனுக்களைக் காண முடியவில்லை. மாறாக, அவர்களது முகங்களில் மகிழ்ச்சியைக் காண்கிறேன்.

இன்னும் சொல்ல வேண்டுமென்றால் அண்ணா, “ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்” என்றாரே, அதனைத்தான் இப்போது மக்களின் முகங்களில் காண்கிறேன். அந்த மகிழ்ச்சியை மேலும் உறுதிசெய்ய இப்போது துவங்கப்பட்டுள்ளதுதான், “நீங்கள் நலமா?” என்ற திட்டம்.

இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்கென உருவாக்கப்பட்ட வலைத்தளத்தை நான் இன்று தொடங்கி வைத்து ஒரு சில பயனாளிகளிடம் உரையாடி அவர்களின் கருத்துகளைக் கேட்டறிந்தபோது உளம் மகிழ்ந்தேன்.

ஒவ்வொரு குடும்பத்தினரது குரலையும் கேட்டு அவர்களது குறைகளைப் போக்கும் அரசாகக் திமுக செயல்பட்டு வருகிறது.

அரசு அதேபோல அமைச்சர்கள், உயர் அலுவலர்கள், மாவட்ட ஆட்சியர்கள் ஆகியோரும் உங்களிடம் கலந்துரையாடி நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் நலத்திட்டங்கள் குறித்துக் கருத்துகளைப் பெற்று, அதனடிப்படையில் அரசின் சேவைகளை மேம்படுத்துவதற்கான வழிவகைகள் உருவாக்கப்படும்.

தமிழ்நாடு அரசின் நலத்திட்டங்கள் குறித்து உங்களிடமிருந்து பெறப்படும் கருத்துகள் இந்த வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். கோட்டையில் உட்கார்ந்து திட்டங்கள் தீட்டி அறிவிப்பதோடு எனது கடமை முடிந்து விட்டதாக நான் எப்போதும் நினைப்பது இல்லை. ஒவ்வொரு திட்டமும் எந்த நோக்கத்துக்காக அறிவிக்கப்பட்டதோ அந்த நோக்கம் நிறைவேற்றப்பட்டு வருகிறதா என்பதுதான் எனக்கு முக்கியம்.

ஏனென்றால் ஒவ்வொரு திட்டமும் பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலானவை. கடுமையான நிதி நெருக்கடிச் சூழலில் நிறைவேற்றப்படுபவை. ஆகவே, ஒதுக்கப்படும் நிதி ஒவ்வொரு குடிமகனையும் சென்று சேர வேண்டும்; நலத்திட்டம் ஒரு ரூபாய் என்றாலும் அது உங்களிடம் வந்து சேர வேண்டும் என்று நினைத்து திட்டங்களைத் தீட்டுபவன் நான்.

அதேசமயம், மத்திய அரசின் தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய நிதி உதவிகள்  ஓரவஞ்சனையால் படிப்படியாகக் குறைக்கப்பட்டு வருவதை நான் அதிகம் விளக்கத் தேவையில்லை

சில நாட்களுக்கு முன்னால் சென்னைக்கு வந்து பேசிய பிரதமர் மோடி, மாநில அரசுக்குத் தராமல் மக்களுக்கு நேரடியாக நிதி வழங்கி வருவதாக அப்பட்டமான ஒரு பொய்யைச் சொல்லி விட்டுச் சென்றுள்ளார்கள். எந்த மக்களுக்குக் கொடுத்தார் என்பதைச் சொல்லி இருந்தால் அந்த மக்களுக்குக் கிடைத்ததா என்று கேட்கலாம்.

இரண்டு மாபெரும் இயற்கை பேரிடரை எட்டு மாவட்டத்து மக்கள் சந்தித்தார்கள். இதற்காக 37 ஆயிரம் கோடி ரூபாய் நிதி கேட்டோம். அதற்கு 1 ரூபாயையாவது ஒதுக்கி, தமிழ்நாட்டு மக்களுக்கு உதவி செய்தாரா பிரதமர்? இப்படியா பொய்களைச் சொல்வது?

மத்திய அரசிடம் இருந்து நிதி வரவில்லை என்றாலும் இந்த எட்டு மாவட்டத்துக்கு மக்களுக்காக, மாநிலப் பேரிடர் நிதி மற்றும் அரசுத் துறைகளில் இருந்து ரூ.3,406.77 கோடி ரூபாய் அளவுக்கு நிதி வழங்கியும், நிவாரணப் பணிகளைச் செய்தும் மக்கள் நலம் காத்து வரும் அரசுதான் இந்த ஸ்டாலின் அரசு.

உங்கள் ஒவ்வொருவர் நலமே எனது நலம். அந்த நலனைக் காக்கவே நான் உழைக்கிறேன் என்பதன் இந்த ‘நீங்கள் நலமா’ மற்றுமோர் அடையாளமாகத்தான் திட்டத்தைத் தொடங்கி வைத்துள்ளேன். உங்கள் அரசு என்றும் உங்கள் ஒவ்வொருவருக்காகவும் தொடர்ந்து உழைத்துக் கொண்டே இருக்கும் என்று உறுதி அளிக்கின்றேன்” என்று தெரிவித்துள்ளார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

காதலாட… காதலாட… அஜித் – ஷாலினி வைரல் போட்டோ..!

ராமர் குறித்த பேச்சு: ஆ.ராசாவுக்கு இந்தியா கூட்டணி கட்சிகள் கண்டனம்!

3+1 அதிமுகவுடன் கூட்டணியா? வைகோ கூட்டும் அவசரக் கூட்டம்!

+1
0
+1
0
+1
0
+1
4
+1
0
+1
0
+1
0

1 thought on “பிரதமர் மோடி இப்படியா பொய் சொல்வது? – ஸ்டாலின் கேள்வி!

  1. பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த திருட்டு மு க, பொய்யை பற்றி பேசுவது வேடிக்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *