கல்வியை உடனடியாக மாநிலப் பட்டியலுக்கு மாற்ற மத்திய அரசு தயாராக இருக்கிறதா? என்று முதல்வர் ஸ்டாலின் இன்று (ஜூலை 15) கேள்வி எழுப்பியுள்ளார்.
தனியார் பள்ளி மாணவர்களும் பயன்பெறும் வகையில் காலை உணவு திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று திருவள்ளூர் மாவட்டம் கீழச்சேரியில் உள்ள புனித அன்னாள் தொடக்கப்பள்ளியில் தொடங்கி வைத்தார்.
முன்னதாக காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு பள்ளியில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த காமராஜர் படத்திற்கு மரியாதை செலுத்திய ஸ்டாலின், மாணவர்களுடன் உட்கார்ந்து உணவருந்தினார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய ஸ்டாலின்,
“காலை உணவு திட்டத்தில் 20,73,000 குழந்தைகள் பயன்!
பள்ளிக்கு வரக்கூடிய குழந்தைகளுடைய பசியைப் போக்கவேண்டும் என்று முடிவு செய்து உருவாக்கிய திட்டம்தான், இந்த காலை உணவுத் திட்டம்.
சென்னையில், ஒரு பள்ளி விழாவிற்கு சென்றபோது, ஒரு குழந்தை, ““இன்னும் காலை உணவு சாப்பிடவில்லை” என்று சொன்னதை கேட்டவுடனே, ஒரு பெற்றோருக்கே உரிய பாச உணர்வுடன் நான் உருவாக்கிய திட்டம் தான் இந்த காலை உணவுத் திட்டம்.
“அரசாங்கத்திற்கு எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை, ஒரு குழந்தை கூட பசியோட ஸ்கூல்ல தவிக்க கூடாது” என்று இந்தத் திட்டத்தை தொடங்க உத்தரவிட்டேன்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால், அண்ணாவின் பிறந்தநாளில் இந்தத் திட்டத்தைத் தொடங்கினேன். இன்றைக்கு காமராசரின் பிறந்தநாளில் இந்தத் திட்டத்தை விரிவுபடுத்தியிருக்கிறேன். “அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மட்டும்தானா? எங்களுக்கு இல்லையா?” என்று அரசு உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவியர் கேட்டார்கள்.
அதனால்தான், கிட்டத்தட்ட 18 லட்சத்து 50 ஆயிரம் அரசுப் பள்ளி மாணவ மாணவியர் வயிறார சாப்பிடக் காரணமான இந்த திட்டத்தை இன்றைக்கு விரிவுபடுத்தியிருக்கிறேன்.
இனிமேல், அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த இரண்டு லட்சத்து 23 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் காலை உணவு சாப்பிட இருக்கிறார்கள்.
மொத்தமாக சொல்லவேண்டும் என்றால், நாள்தோறும் 20 லட்சத்து 73 ஆயிரத்துக்கும் அதிகமான குழந்தைகள் சத்தான சுவையான காலை உணவை சாப்பிடுகிறார்கள்.
விமர்சனங்களைப் பற்றி கவலையில்லை!
இதுபோல, நம்முடைய திராவிட மாடல் அரசு கொண்டு வருகின்ற ஒவ்வொரு திட்டத்தையும் பத்திரிக்கைகள் பாராட்டுகின்றதோ இல்லையோ, பயன்பெறுகிற மக்கள் பாராட்டிக் கொண்டுதான் இருக்கிறார்கள். இல்லாத கற்பனைக் கதைகளுக்கு வடிவம் கொடுப்பதையும், ஈரைப் பேனாக்கும் வேலையைச் செய்பவர்களுக்கும் நம்மைப் பாராட்டுவதற்கு மனமில்லை.
அதைபற்றி நமக்கு கவலையுமில்லை. எந்தவொரு சிறு பிரச்சினை நடந்தாலும் நம்முடைய அரசு உடனடியாக அதை கவனத்தில் எடுத்து, அதை தீர்த்து வைக்கின்றது. எந்த விவகாரத்திலாவது நம்முடைய அரசு செயல்படாமல் தேங்கி நின்றிருக்கிறதா? இல்லை. நாள்தோறும் மக்களுக்கான நலத்திட்டங்கள், தமிழ்நாட்டின் எதிர்கால முன்னேற்றத்திற்கு தேவையான செயல்பாடுகள் என்று நாங்கள் தொடர்ந்து செய்து கொண்டு, இயங்கிக்கொண்டு தான் இருக்கிறோம். பொய்ச் செய்திகள் மூலம் ஒரு சில கருத்துருவாக்கங்களை உருவாக்கி, அதில் குளிர் காயலாம் என்று நினைக்கின்ற அந்த மக்கள் விரோத சக்திகளுடைய அஜெண்டா எந்த காலத்திலும் நடக்காது.
திராவிட மாடல் அரசையும், என்னையும் பொருத்தவரைக்கும் நம்முடைய தமிழ்நாட்டு பசங்க படிப்பதற்கு எதுவும் தடையாக இருக்க கூடாது என்று நினைக்கிறோம்.
அது பசியாக இருந்தாலும் சரி, நீட் தேர்வாக இருந்தாலும் சரி, ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கையாக இருந்தாலும் சரி, எந்த தடை வந்தாலும் அந்த தடைகளை உடைப்பதுதான் எங்களுடைய முதல் பணி.
நீட் தேர்வை நாம் எதிர்க்க தொடங்கியபோது ஏன் எதிர்க்கிறீர்கள் என்று சிலர் எதிர்கேள்வியை கேட்டார்கள். ஆனால், இன்றைக்கு நீட் தேர்வில் நடக்கின்ற முறைகேடுகளை பார்த்து, உச்சநீதிமன்றம் கேள்வி கேட்கின்றது. மாணவர் சமுதாயம் போர்க்கொடி தூக்குகின்றது.
கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற தயாரா?
பல முதலமைச்சர்கள், தேசிய தலைவர்கள் நீட் வேண்டாம் என்று குரல் கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். ஏன்? ஒட்டுமொத்த இந்தியாவும் தமிழ்நாட்டு வழியில், நீட் தேர்வை எதிர்க்கின்றது.
ஒன்றிய பாஜக அரசு அரசியலுக்காக இப்போது, நெருக்கடி நிலையை பேசுகிறார்கள். ஆனால், நாடாளுமன்றத்தில் நாம் தொடர்ந்து அவர்களிடம் கேட்கின்ற கேள்வி நெருக்கடி நிலை காலத்தில், ஒத்திசைவுப் பட்டியலுக்கு மாற்றப்பட்ட கல்வியை உடனடியாக மாநிலப் பட்டியலுக்கு மாற்ற ஒன்றிய அரசு தயாராக இருக்கிறதா? இந்த ஆக்கபூர்வமான செயலை அவர்கள் செய்வார்களா?
நம்மை பொறுத்தவரை, நீட் தேர்வு புதிய கல்விக் கொள்கை தேவையற்றது. அதை எதிர்க்கிறோம். ஒருபக்கம் அரசியல் மற்றும் சட்டப் போராட்டங்களை நடத்துகிறோம்.
இன்னொரு பக்கம் மாணவர்களின் நலனுக்காக பள்ளிக்கல்விக்கும், கல்லூரிகளுக்கும், உயர்கல்விக்கும் ஏராளமான திட்டங்களை தீட்டுகிறோம்.
எனவே, “தடைகளை நாங்கள் உடைக்கிறோம். மாணவர்கள் கல்வியில் மட்டும் கவனம் செலுத்துங்கள். ஏனென்றால், நான் திரும்பவும் சொல்கிறேன், கல்விதான் யாராலும் திருட முடியாத சொத்து. அந்த சொத்தை தமிழ்நாட்டு மாணவர்கள் பெற்றாகவேண்டும்” என்று ஸ்டாலின் தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
காவிரி நீர்… “உச்சநீதிமன்ற உத்தரவை கர்நாடகா மதிப்பதில்லை” – துரைமுருகன் காட்டம்!
தமிழில் கதாநாயகனாக மாஸ் என்ட்ரி கொடுக்கும் சிவராஜ்குமார்