முரசொலி செல்வம் பெயரில் அறக்கட்டளை: ஸ்டாலின் அறிவிப்பு!

முரசொலி செல்வம் பெயரில் அறக்கட்டளை உருவாக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று (அக்டோபர் 21) சென்னை, அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில், முரசொலி நாளேட்டின் முன்னாள் ஆசிரியரும், எழுத்தாளருமான முரசொலி செல்வத்தின் திருவுருவப் படத்தை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி திறந்து வைத்தார்.

அப்போது மூத்த அமைச்சர் துரைமுருகன், இந்துக் குழுமத்தின் இயக்குநர் என். ராம், நடிகர் சத்யராஜ், பேராசிரியர் நாகநாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “இந்த மைக்கிற்கு முன்னாள் நின்று பேசலாமா அல்லது தவிர்த்துவிடலாமா என்ற இக்கட்டான சூழலில், மனக்குழப்பத்தில் நான் இங்கு நின்றுகொண்டிருக்கிறேன். முரசொலி செல்வம் மறைந்துவிட்டார். எங்களால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. ஏன், ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. பேசுவதால் அவர் திரும்பி வந்துவிட போவதில்லை. அந்த ஏக்கமும் என்னுடைய நெஞ்சத்தை, தொண்டையை அடைத்துக்கொண்டிருக்கிறது.

கடந்த 10ஆம் தேதி முரசொலி செல்வம் மறைந்துவிட்டார் என்ற செய்தியை தயாநிதிதான் அன்று காலை 10 மணியளவில் எனக்கு தொலைபேசியில் தொடர்புகொண்டு சொன்னார். அதிர்ந்துவிட்டேன்… நம்ப முடியவில்லை.
முரசொலி செல்வத்துக்கு எந்தவித உடல்நலக் குறைவும் இல்லை. என்னால் மட்டுமல்ல என் குடும்பத்தினரும் முரசொலி செல்வம் மறைவை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவித்தனர்.

அவர் மறைவதற்கு முதல்நாள் மாலை, என்னுடைய தங்கை செல்வி, கலாநிதி மாறன், அவருடைய மகள் எழிலரசி, தம்பி தமிழரசுவிடம் பேசியிருக்கிறார்.

ஏன் என்னிடமும் பேசினார். நாளைக்கு புறப்பட்டு சென்னை வரம்ப்பா… என்று சொன்னார். வந்தார்… ஆனால், உடல் மட்டும்தான் வந்தது. தவிக்கவிட்டுவிட்டு போய்விட்டார்” என்று உருக்கமாக பேசினார் ஸ்டாலின்.

மேலும் அவர், “கலைஞரின் அக்கா மகன் முரசொலி செல்வம். நீதிக் கட்சியின் தலைவர்களின் ஒருவராக இருந்த சர் ஏ.டி.பன்னீர்செல்வம் நினைவை போற்றும் வகையில் அவருக்கு பன்னீர் செல்வம் என்று கலைஞர் பெயர் வைத்தார். எப்படி முரசொலி செல்வத்துக்கு இந்த பெயர் சூட்டப்பட்டதோ, அதேபோல எனக்கு தங்கை பிறந்தபோது செல்வி என்று பெயர் சூட்டி அப்போதே இருவருக்கும் திருமணம் என்று முடிவெடுத்துவிட்டார்கள்.

நாங்கள் அவரை குட்டி அத்தான் என்று செல்லமாக அழைப்பது உண்டு. ஆனால் நானாக இருந்தாலும் சரி, அண்ணன் அழகிரியாக இருந்தாலும் சரி, தம்பி தமிழாக இருந்தாலும் சரி முரசொலி செல்வத்தை அண்ணன் என்றுதான் அழைப்போம். காரணம் மூத்த அண்ணணாக இருந்து எங்களுக்கு ஆலோசனை வழங்கிக்கொண்டிருந்தார்.

கலைஞர் மறைவுக்கு பிறகு, இனமான பேராசிரியர் மறைவுக்கு பிறகு, தற்போது முரசொலி செல்வம் மறைவுக்கு பிறகு என் மனம் உடைந்து சுக்குநூறாகிவிட்டது. அதிலிருந்து எப்படி மீளப் போகிறேன் என்று எண்ணி எண்ணி தவித்துக் கொண்டிருக்கிறேன்.

காரணம், பள்ளிக்காலம் முதல் எனக்கு துணையாக இருந்தவர் முரசொலி செல்வம்.
மேடைகளில் என்ன பேச வேண்டும், எப்படி பேச வேண்டும், அதை ஏற்ற இறக்கத்தோடு எப்படி பேச வேண்டும் என எனக்கு கற்றுக்கொடுத்தவர் முரசொலி செல்வம். எதாவது கட்சி பணிக்கு நான் போகிறேன் என்றால் முதல் நாளே என்னை அழைத்து எனக்கு பயிற்சி கொடுப்பார். இவர் இன்று இல்லை என நினைக்கும் போது எனக்கு வேதனையாக இருக்கிறது.

அவர் பெங்களூருவுக்கு சென்று செட்டிலாகி 25, 30 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் மாதத்துக்கு ஒருமுறையாவது சென்னை வருவார். அப்படி சென்னை வந்தால் நான் அவர் வீட்டுக்கு சென்றுவிடுவேன். நான் மட்டுமல்ல மூத்த அமைச்சர் துரைமுருகன், முன்னணி நிர்வாகிகள் என அனைவரும் சென்று விடுவோம். அவருடன் பேசினால் நேரம் போவதே தெரியாது.

சென்னையில் இருந்து நாங்கள் அறிந்துகொள்ளும் செய்திகளை தவிர பெங்களூருவில் இருந்து பல செய்திகளை அறிந்துகொண்டு எங்களிடத்தில் சொல்வார்” என்று குறிப்பிட்டார்.

மேலும் அவர், “முரசொலி செல்வம் பெயரில் புதிய அறக்கட்டளை உருவாக்கப்படும். திராவிட இயக்கத்தைச் சேர்ந்த படைப்புகளுக்கும் படைப்பாளர்களுக்கும் விருதுகள் வழங்கப்படும். தி.மு.க முப்பெரும் விழாவின் போது முரசொலி செல்வம் அறக்கட்டளை விருதுகள் வழங்கப்படும்.

திராவிட இயக்க கருத்தியலை எல்லோருக்கும் ஆழமாக கொண்டு சேர்க்கும் வகையில் முரசொலி செல்வம் பெயரில் ‘திராவிட இதழியல் பயிற்சி அமைப்பு’ ஒன்றை தொடங்க வேண்டும் என்ற திராவிடக் கழக தலைவர் ஆசிரியர் கி.வீரமணியின் கோரிக்கை விரைவில் நிறைவேற்றப்படும் என உறுதியளிக்கிறேன்” என்றார்.

பிரியா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

இவங்க அக்கப்போரு தாங்க முடியலப்பா… அப்டேட் குமாரு

விஜய் மாநாட்டில் செக்போஸ்ட்… தவெக நிர்வாகிகள் சொல்வது என்ன?

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts