தருமபுரி நாடாளுமன்ற தேர்தல் வெற்றி… அரூருக்கு ஸ்டாலின் கொடுத்த பரிசு!

அரசியல்

மக்களுடன் முதல்வர் இரண்டாம் கட்ட திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று (ஜூலை 11) தருமபுரி மாவட்டம்  பாளையம்புதூரில் தொடங்கி வைத்தார்.

அப்போது தருமபுரி மாவட்டத்திற்கு ஏழு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். குறிப்பாக ‘அரூர் பேரூராட்சி”, “அரூர் நகராட்சியாக” தரம் உயர்த்தப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டார்.

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தருமபுரியில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதிகளில் அரூர் தொகுதி தான் திமுக வேட்பாளர் மணியின் வெற்றியை நிர்ணயித்தது. இந்தநிலையில், அரூர் தொகுதிக்கு முதல்வர் ஸ்டாலின் சிறப்பு திட்டத்தை அறிவித்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியில் பேசிய ஸ்டாலின், “நான் முதலமைச்சராக பொறுப்பேற்றது முதல், முதல்வரின் முகவரி துறையின்கீழ் தற்போது வரைக்கும் பெறப்பட்ட, 68 லட்சத்து 30 ஆயிரத்து 281 மனுக்களில் 66 லட்சத்து 25 ஆயிரத்து 304 மனுக்களுக்கு உரிய முறையில் தீர்வு கண்டிருக்கிறோம்.

அதிலும், இந்த தருமபுரி மாவட்டத்தில் மட்டும், 72 ஆயிரத்து 438 மனுக்களுக்கு சாதகமான முறையில் தீர்வு அளிக்கப்பட்டிருக்கிறது. இப்போது நான் சொன்னதை எல்லாம் நீங்கள் அரசுத் துறையின் அலுவலர்களிடம் சென்று மனுக்களை கொடுத்தது பற்றி, ஆனால் அந்த நிலையை மாற்றி பொதுமக்கள் அதிகமாக அணுகும் முக்கியமான 13 அரசுத் துறைகள், நகரங்களுக்கும், கிராமங்களுக்கும் நேரடியாக சென்று மக்களாகிய உங்களிடம் உங்கள் ஊரிலேயே மனுக்களைப் பெற்று பதிவு செய்து அதற்கு 30 நாட்களுக்குள் தீர்வு காணும் வகையில் நான் உத்தரவிட்டேன். அதன்படி உருவானதுதான் இந்த மக்களுடன் முதல்வர் திட்டம்.

முதற்கட்டமாக, மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் நகர்ப்புறங்களை ஒட்டியிருக்கும் கிராம ஊராட்சிகளில் இந்த முகாம்கள் நடத்தப்பட்டது.

இந்த முகாம்கள் வாயிலாகப் பெறப்பட்ட சுமார் 8 லட்சத்து 74 ஆயிரம் மனுக்களுக்கு இதுவரைக்கும் தீர்வு கண்டிருக்கிறோம். இந்த தருமபுரி மாவட்டத்தில் நகரப் பகுதிகளில், 3 ஆயிரத்து 107 மனுக்கள் பெறப்பட்டு, 30 நாட்களில் 1,868 மனுக்களுக்கு சாதகமான முறையில் தீர்வு அளிக்கப்பட்டிருக்கிறது.

இப்படி இந்தத் திட்டம் மக்களுக்குப் பயனளிக்க தொடங்கிய காரணத்தால்தான், இப்போது ஊரக ஊராட்சிகளுக்கும் விரிவு செய்திருக்கிறோம். அதைத் தொடங்கி வைக்க தான் நான் இங்கே வந்திருக்கிறேன்.

கடந்த முறை தேர்தல் பரப்புரைக்காக நான் வந்தேன். இப்போது, நீங்கள் கொடுத்த வெற்றிக்கு நன்றியாக உங்கள் மாவட்டத்திற்கான அறிவிப்புகளை வெளியிடுகிறேன்.

51 கோடி ரூபாய் செலவில் அரூர் அரசு மருத்துவமனையின் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும். கடந்த சட்டமன்றத்தேர்தல் பரப்புரையின்போது கொடுத்த வாக்குறுதியான தருமபுரி வெண்ணம்பட்டி சாலையில், புதிய ரயில் மேம்பாலம் 38 கோடி ரூபாய் — செலவில் அமைக்கப்படும். மோபிரிபட்டி-தொட்டம்பட்டியை இணைத்து, ”அரூர் பேரூராட்சி”, “அரூர் நகராட்சியாக” தரம் உயர்த்தப்படும்.

பஞ்சப்பள்ளி, ராஜபாளையம் அணைக்கட்டுகள் 5 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புனரமைக்கப்படும். சிட்லிங், அரசநத்தம் பகுதியில் பழங்குடியினர் உற்பத்தி செய்யும் ராகி, சாமை, வரகு ஆகியவற்றை மதிப்புக் கூட்டுப் பொருளாக்க கிடங்கு மற்றும் பொதுச் செயலாக்க மையம் அமைக்கப்படும்.

தீர்த்தமலையில் துணை வேளாண்மை விரிவாக்க மையம் அமைக்கப்படும். இப்போது, இந்த விழா நடைபெற்றுக் கொண்டிருக்கும், பாளையம்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளியில், பழுதடைந்த நிலையில் இருக்கும் 4 வகுப்பறைகள், அதன் பழமை மாறாமல் புதுப்பிக்கப்படும்.

இந்த ஏழு அறிவிப்புகளுடன், இன்று காலை எனக்கு வரப்பெற்ற இந்தப் பகுதி மக்களின் கோரிக்கைகளை ஏற்று மொத்தம் 15 அறிவிப்புகள் இன்னும் சிறிது நேரத்தில் வெளியாகிவிடும். “மக்களிடம் செல் – மக்களைப் பற்றி அறிந்து கொள் – மக்களுக்காகச் செயல்படு” இதுதான் அண்ணாவும், கலைஞரும் எங்களுக்கு சொன்னது.

இதுதான், அவர்கள் எங்களுக்கு அமைத்துக் கொடுத்த பாதை. வழிகாட்டு நெறிமுறை. அந்த அடிப்படையில்தான், ஆட்சிப் பொறுப்பேற்ற நாள் முதல் மக்களுக்கான திட்டங்களைச் செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம். அதன் பலனை மக்கள் எனக்கு எழுதும் கடிதங்கள் மூலமாக, நேரடியாக அவர்களை சந்தித்து பேசும் பொழுதும் நான் உணர்கிறேன்.

மக்களுக்காக செயல்படுவது எதிர்க்கட்சிகளுக்கு பொறாமையையும், எரிச்சலையும் ஏற்படுத்துகிறது. அதனால்தான், அவதூறுகள் பொய்ப் பிரச்சாரங்கள் மூலமாக இந்த ஆட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த நினைக்கிறார்கள்.

வாக்களித்தவர்கள், வாக்களிக்க மறந்தவர்கள் என்ற எந்த வேறுபாடும் பார்க்காமல் அனைத்து மக்களுக்குமான அரசாக நாம் செயல்பட்டு வருகிறோம். ஆனால், இதே பெருந்தன்மையை மற்றவர்களிடம் பார்க்க முடியவில்லை. தமிழ்நாட்டில் தொடர் தோல்வி, படுதோல்வி அடைந்த பிறகும் அதிலிருந்து மத்திய அரசு இன்னும் பாடம் கற்றுக்கொள்ளவில்லை.

தமிழ்நாட்டின் முக்கிய கோரிக்கையாக இருக்கும் மெட்ரோ ரயில் போன்ற திட்டங்களுக்கு கூட நிதி ஒதுக்க மத்திய அரசுக்கு மனமில்லை. நல்ல குணமில்லை. பாடம் கற்றுக்கொள்வதற்கு நினைப்பும் இல்லை. தங்களின் பத்து வருட காலத்தில் தமிழ்நாட்டில் எந்த ஒரு பெரிய திட்டமும் செய்யவில்லை.

மத்திய அரசு என்பது, விருப்பு வெறுப்புகளைக் கடந்து, அனைத்து மக்களுக்குமான பொதுவான அரசாக செயல்பட வேண்டும் என்பதை இனியாவது அவர்கள் உணர வேண்டும் என்று தமிழ்நாட்டு மக்கள் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

திமுகவைப் பொருத்தவரைக்கும் நாங்கள் மக்களுடன் இருக்கிறோம். மக்களாகிய நீங்கள் எங்களுடன் இருக்கின்றீர்கள். இதுதான் எங்களுடைய வெற்றியின் ரகசியம். இதுதான் தமிழ்நாட்டின் வளர்ச்சியின் ரகசியம்.

மக்களுக்கு உண்மையாக இருந்து, உண்மையான வளர்ச்சியை உருவாக்குவோம். இந்தியாவின் முதன்மை மாநிலமாக இருக்கின்ற தமிழ்நாட்டை உன்னதமான சிறந்த மாநிலமாக உருவாக்கிக் காட்டுவோம் என்று உறுதி கூறுகிறேன்” என்று ஸ்டாலின் தெரிவித்தார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

‘மக்களுடன் முதல்வர்’ 2.0: ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!

ஸ்டாலின் குறித்து அவதூறு: சாட்டை துரைமுருகன் கைது!

+1
0
+1
0
+1
0
+1
5
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *