அமெரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள முதல்வர் ஸ்டாலினை, காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை, டிவிஎஸ் நிறுவனத்தின் தலைவர் வேணு சீனிவாசன் உள்ளிட்டோர் இன்று (ஆகஸ்ட் 27) நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
தமிழகத்திற்கான தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் இன்று இரவு 10 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் அமெரிக்கா செல்கிறார். அங்கு 17 நாட்கள் பல்வேறு தொழில்துறை வல்லுநர்கள், முதலீட்டாளர்களை சந்திக்கவுள்ளார். மேலும், புலம்பெயர்ந்த தமிழர்களையும் சந்தித்து பேசுகிறார்.
வெளிநாடு பயணத்தை ஒட்டி அமெரிக்காவில் இருந்தாலும், ஆட்சி பணிகளையும் கட்சி பணிகளையும் தொடர்ந்து கவனிப்பேன் என்று அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்களுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்தநிலையில், இன்று காலை சென்னை மெரினாவில் உள்ள முன்னாள் முதல்வர்கள் அண்ணா, கலைஞர் நினைவிடங்களுக்கு சென்று ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
அவருடன் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, திமுக நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
தொடர்ந்து முதலமைச்சர் ஸ்டாலினை அவரது முகாம் அலுவலகத்தில் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை, டிவிஎஸ் நிறுவனத்தின் தலைவர் வேணு சீனிவாசன், மறைந்த பேராசிரியர் அன்பழகனின் மகன் அ.அன்புச்செல்வன், அன்பழகனின் பேரனும் சட்டமன்ற உறுப்பினருமான அ.வெற்றியழகன் ஆகியோர் நேரில் சந்தித்து அமெரிக்க பயணம் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்தனர்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஹரிஷ் கல்யாண் நடிக்கும் ‘லப்பர் பந்து’ : ரிலீஸ் எப்போ தெரியுமா?