”உதயநிதி வந்தது எனக்கு மகிழ்ச்சி!” – பெரியப்பா மு.க.அழகிரி நெகிழ்ச்சி

அரசியல்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை துவக்கி வைப்பதற்காக மதுரை வந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தனது பெரியப்பா மு.க.அழகிரியை அவரது வீட்டுக்கே நேரில் சென்று சந்தித்து ஆசி பெற்றுள்ளார்.

ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் அடுத்தடுத்த நாட்களில் ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம்.

அதன்படி நேற்று (ஜனவரி 15) அவனியாபுரத்திலும், இன்று பாலமேட்டிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் வெகு விமரிசையாக நடைபெற்றன.

இந்நிலையில் பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையே உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நாளை நடைபெற உள்ளது.

இதனை முன்னிட்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை துவக்கி வைப்பதற்காக தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று இரவு மதுரை விமான நிலையம் வந்தடைந்தார்.

விமான நிலையத்திலிருந்து அழகர்கோவில் சாலையில் உள்ள தனியார் ஹோட்டலுக்கு சென்ற அவர், அதன் தொடர்ச்சியாக டி.வி.எஸ் நகரில் உள்ள முன்னாள் மத்திய அமைச்சரும், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினின் சகோதரரும், தனது சொந்த பெரியப்பாவுமான மு.க.அழகிரியின் வீட்டுக்கு சென்றார்.

அமைச்சரான பிறகு தனது இல்லத்துக்கு முதன்முறையாக வரும் உதயநிதி ஸ்டாலினை தனது வீட்டு வாசலில் காத்திருந்து வரவேற்று மு.க.அழகிரி உள்ளே அழைத்துச் சென்றார்.

அங்கு மு.க.அழகிரியின் காலில் விழுந்து ஆசி பெற்ற உதயநிதி ஸ்டாலின் பின்னர் அவருக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் இருவரும் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தனர். இந்த சந்திப்பின்போது உதயநிதி ஸ்டாலினுடன், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷூம் உடனிருந்தார்.

இது குறித்து மு.க.அழகிரி ஊடகங்களிடம் பேசுகையில் “பெரியப்பாவை பார்க்க எனது தம்பி மகன் வந்துள்ளார். தம்பி முதல்வரானதும், மகன் அமைச்சரானதும் எனக்கு மகிழ்ச்சி. உதயநிதி ஸ்டாலின் வந்தது எனக்கு பெரும் மகிழ்ச்சியாக உள்ளது, அன்பில் மகேஷும் எனக்கு இன்னொரு மகன் தான்” என நெகிழ்ச்சியோடு தெரிவித்தார்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை வீட்டு வாசலில் காத்திருந்து மு.க.அழகிரி வரவேற்றதும், இருவரின் அன்பான சந்திப்பும் தற்போது அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாகி உள்ளது.

கிறிஸ்டோபர் ஜெமா

+1
3
+1
0
+1
0
+1
8
+1
1
+1
1
+1
1

Leave a Reply

Your email address will not be published.