தாசில்தாரை தாக்கியதாக வழக்கு: மு.க.அழகிரி விடுதலை!

அரசியல்

தாசில்தாரை தாக்கியதாக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரிக்கு எதிரான வழக்கில் அவரை விடுதலை செய்து மதுரை ஜே.எம் 1 நீதிமன்றம் இன்று (பிப்ரவரி 16) தீர்ப்பளித்தது.

கடந்த 2011 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது மதுரை மாவட்டம் மேலூர் அருகேயுள்ள வெள்ளலூர் அம்பலக்காரன்பட்டி வல்லடிகாரர் கோயில் பகுதியில் கிராமத் தலைவர்கள் மற்றும் பொதுமக்களிடம் மு.க.அழகிரி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது தேர்தலில் ஓட்டு வாங்க அழகிரி பணப் பட்டுவாடா செய்வதாக அதிமுகவினர் புகார் தெரிவித்தனர். இதனையடுத்து மேலூர் தேர்தல் அதிகாரியும் தாசில்தாருமான காளிமுத்து மற்றும் தேர்தல் அலுவலர்கள், வீடியோ கேமராமேனுடன் அங்கு சென்று வீடியோ எடுத்தனர்.

இதற்கு அழகிரி கடும் எதிர்ப்புத் தெரிவித்ததோடு அழகிரியுடன் இருந்தவர்கள் தன்னை அடித்து, உதைத்ததாக தாசில்தார் காளிமுத்து கீழவளவு காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

இதனையடுத்து மு.க. அழகிரி, அப்போதைய மதுரை துணை மேயர் மன்னன் மற்றும் திமுக-வைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகளான ரகுபதி, திருஞானம், ஒத்தப்பட்டி செந்தில் உள்ளிட்ட 21 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில் 4 பேர் இறந்துவிட்டனர்.

இது தொடர்பான வழக்கு மதுரை ஜே.எம் 1 நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால் அழகிரி உள்ளிட்ட 17 பேரையும் இன்று விடுதலை செய்து நீதிபதி முத்துலெட்சுமி தீர்ப்பளித்தார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பேச்சுவார்த்தை தோல்வி: தொடரும் விவசாயிகள் போராட்டம்!

தேர்தல் நிதிப்பத்திரம் விவகாரம்: சுப்பிரமணியன் சுவாமி காட்டம்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *