மிசோரம் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தேதியை மாற்றி இந்திய தேர்தல் ஆணையம் இன்று (டிசம்பர் 1) புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.
தெலுங்கானா, ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நவம்பர் 7ஆம் தேதி முதல் நவம்பர் 30 வரை நடைபெற்றது.
இதனையடுத்து நாளை மறுநாள் (டிசம்பர் 3) 5 மாநிலங்களின் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று ஏற்கெனவே இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
எனினும், ஞாயிற்றுக்கிழமை கிறிஸ்தவர்களுக்கு புனிதமானவை என்பதாலும், அதிக சதவீத மக்கள் தேவாலயத்திற்கு செல்வதாலும் வாக்கு எண்ணிக்கை தேதியை மாற்றியமைக்க வேண்டும் மிசோரம் என்ஜிஓ ஒருங்கிணைப்புக் குழு (என்ஜிஓசிசி) தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்திருந்தது.
கோரிக்கையை ஏற்கவில்லை என்றால் மாநிலம் தழுவிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்று எச்சரிக்கையும் விடுத்திருந்தது.
இதற்கு தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்த தேர்தல் ஆணையம், தற்போது மிசோரம் மக்களின் கோரிக்கையை ஏற்று ஒருநாள் தள்ளி வைத்துள்ளது.
அதன்படி, மிசோரம் சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை மட்டும் வரும் 3ஆம் தேதிக்கு பதிலாக டிசம்பர் 4ஆம் தேதி(திங்கள்கிழமை) நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து உத்தரவிட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா