டிஜிட்டல் திண்ணை: ரஜினி, கமல், விஜயகாந்த் செய்த தவறுகள்- விஜய் ஓப்பன் டாக்!
வைஃபை ஆன் செய்ததும் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தீரன் சின்னமலை பிறந்தநாளைக்கு மரியாதை செலுத்திய வீடியோக்களும் போட்டோக்களும் வந்து விழுந்தன. அவற்றைப் பார்த்துவிட்டு வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.
“ஏப்ரல் 14 ஆம் தேதி சித்திரை முதல் நாள் அம்பேத்கர் பிறந்தநாளை ஒட்டி அவருக்கு விஜய் மக்கள் இயக்கத்தினர் மாநில நிர்வாகி புஸ்ஸி ஆனந்த் சார்பிலும் மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட நிர்வாகிகள் சார்பிலும் மரியாதை செலுத்தப்பட்டது. அரசியல் அமைப்பு சட்டத்தை வடிவமைத்த அம்பேத்கருக்கான மரியாதை செலுத்தியதன் மூலம் அரசியலில் விஜய் இறங்கப் போவது தெளிவாகிவிட்டது என்று விவாதங்கள் வெடித்தன. இந்த நிலையில் இன்று ஏப்ரல் 17 ஆம் தேதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலைக்கும் மரியாதை செலுத்தப்பட்டது.’
அம்பேத்கர், தீரன் சின்னமலை என ஆளுமைகளுக்கு மரியாதை செலுத்தி வரும் விஜய் மக்கள் இயக்கத்தின் அடுத்த கட்ட வியூகம் என்ன என்று அந்த இயக்கத்தின் மாநில நிர்வாகிகளிடம் விசாரித்தபோது சில முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளன.
அம்பேத்கர் பிறந்தநாளன்று மாநிலம் தழுவிய அளவில் மரியாதை செலுத்த வேண்டும் என்று விஜய் தனக்கு நெருக்கமான சிலரிடம் ஆலோசனை நடத்தினார். அப்போது சில விவாதங்களும் நடைபெற்றன. ‘புஸ்ஸி ஆனந்த் மேலும் மாவட்ட நிர்வாகிகள் எல்லாம் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தால் போதுமா? நீங்கள் (விஜய்) மரியாதை செலுத்தினால்தானே அது பெரிய அளவில் முக்கியத்துவம் பெறும்?’ என்று கேட்டிருக்கிறார்கள் அந்த ஆலோசனையில் பங்குபெற்றவர்கள்.
அதற்கு விஜய் அளித்த பதில்தான் முக்கியமானது.
‘நான் என் உயரத்தை உணர்ந்திருக்கிறேன். நான் அரசியலுக்கு வந்துவிட்டேன் என்று அறிவிக்க ஒரு நொடி போதுமானது. ஆனால் நான் மட்டும் அரசியலுக்கு வந்தால் போதுமா? என் ரசிகர்கள் அரசியலுக்கு முழுமையாக வந்தால்தான் நான் அரசியலுக்கு வருவது முழுமையாகும். ஏற்கனவே ரஜினி, கமல், விஜயகாந்த் ஆகியோர் இந்த விஷயத்தில் திட்டமிடாமல் இயல்பாக சில தவறுகள் செய்திருப்பதாக நான் உணர்கிறேன். அவர்கள் சொல்லிக் கொடுத்த பாடத்தில் இருந்து நான் கற்றுக் கொண்டிருக்கிறேன்.
ரஜினி தனது சினிமாக்களில் மேம்போக்கான அரசியல் பேசிவந்தாரே தவிர அவரது ரசிகர்களை அவர் கள ரீதியாக அரசியல் படுத்தவில்லை. அதனால்தான் அவரது ரசிகர்கள் ரஜினி அரசியலுக்கு வரவில்லை என்ற அறிவிப்பையடுத்து பல திசைகளிலும் சிதறிவிட்டார்கள். கமல்ஹாசன் தனது சினிமாக்கள் மூலம் நுண்ணரசியலை பேசினார். ஆனால் தான் கற்ற சித்தாந்த அரசியலை சினிமாவில் திரைக்கதையாக பயன்படுத்தினாரே தவிர, தனது நற்பணி இயக்கத்தினரை கள ரீதியாக அவர் அரசியல்படுத்தவில்லை. அதனால்தான் கமல் அரசியல் கட்சி ஆரம்பித்தும் அவரால் போதுமான முழுமையான வெற்றியை ஈட்டமுடியவில்லை.
விஜயகாந்த் தான் அரசியலுக்கு வந்த பிறகும் தன் ரசிகர்களை முழுமையாக அரசியல் படுத்தவில்லை, ரசிகர்களாகவே வைத்திருந்தார். அதனால்தான் அவர் சட்டமன்ற உறுப்பினர் ஆன பிறகும் எதிர்க்கட்சித் தலைவரான பிறகும் ஒருகட்டத்தில் அவரது கட்சியின் முன்னேற்றம் ஸ்தம்பித்தது. ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த் ஆகியோர் தெரிந்தோ தெரியாமலோ செய்த தவறுகளில் இருந்து நான் பாடம் கற்றுக் கொண்டேன்.
அவர்கள் அரசியல்படுத்துதலை மேலே இருந்து கீழ்நோக்கி செய்தார்கள். அதாவது தங்களை அரசியல்படுத்திவிட்டு அதன் பின் தனது ரசிகர்களை அரசியல்படுத்த ஆரம்பித்தார்கள். அந்த தவறை நான் செய்யப் போவதில்லை. என் ரசிகர்களை முதலில் தொண்டர்களாக அரசியல்படுத்திவிட்டு, அதன் பிறகே என்னை அரசியல்படுத்துவேன். அப்போதுதான் என் அரசியல் முழுமை பெறும்.
அதனால்தான் முதலில் என் ரசிகர்களை தேர்தல் களத்தில் அவரவர்க்கு வாய்ப்புள்ள இடங்களில் தேர்தலில் நிற்கச் சொன்னேன். இப்போது அண்ணல் அம்பேத்கர், அடுத்து தீரன் சின்னமலைக்கு மரியாதை செலுத்தச் சொன்னேன். மரியாதை செலுத்துவது மட்டுமே அரசியல்படுத்துதலா என்று கேட்கலாம்.
ஆனால் ஆடியோ லாஞ்ச்சில் விசிலடிக்க மட்டுமே ரசிகர்களை பயன்படுத்தாமல் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கச் சொன்னேன். இதிலிருந்துதான் அவர்களை அரசியல்படுத்துதலை தொடக்க முடியும். அடுத்து சமூக பிரச்சினைகளுக்காக போராட்டங்கள் நடத்துவோம். பூத் கமிட்டி அமைப்போம். என் ரசிகர்கள் தொண்டர்களான பிறகே நான் தலைவர் ஆவேன். நான் தலைவர் ஆன பிறகு அவர்களை தொண்டர்கள் ஆக்கமாட்டேன்’ என்று விரிவாக பதில் சொல்லியிருக்கிறார் விஜய்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.
10.5% இட ஒதுக்கீடு: குடும்பத்துடன் கடிதம் அனுப்பிய அன்புமணி
ராணுவ முகாமுக்குள் துப்பாக்கிச் சூடு: கைதானவர் வாக்குமூலம்!