தெலங்கானா மாநிலத்தில் டி.ஆர்.எஸ் கட்சிக்கும், பாஜகவுக்கும் இடையே கடும் மோதல் போக்கு நிலவி வரும் நிலையில் பாஜக தேசிய தலைவரான நட்டாவுக்கு கல்லறை அமைக்கப்பட்டிருப்பது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம் முனுகோட் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருந்த ராஜ்கோபால் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு பாஜகவில் இணைந்து கொண்டார்.
இதனால், வரும் நவம்பர் 3 ஆம் தேதி முனுகோட் தொகுதியில் இடைத் தேர்தல் நடைபெறவிருக்கிறது.
அதனால் அங்கு அனல் பறக்கும் பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டுள்ளன.
எதிர் எதிர் அணியினராக இருக்கும் டி.ஆர்.எஸ் மற்றும் பாஜக வினர் ஒருவரையொருவர் கடுமையாக விமர்சனம் செய்து போஸ்டர்கள் அடித்து வருகின்றனர். இத்தொகுதியில் பாஜக வேட்பாளராக ராஜ்கோபால் போட்டியிடுகிறார்.
இந்த நிலையில், முனுகோட் தொகுதிக்குட்பட்ட தண்டு மல்காபூர் கிராமத்தில் சுடுகாட்டில் ஒருவரை புதைத்தது போல் மண்மேட்டை உருவாக்கி அதில் மாலைகள் வைக்கப்பட்டுள்ளது.
மஞ்சள் குங்குமம் தூவி அதன் அருகில் பாஜக தேசிய தலைவர் ஜே பி நட்டாவின் படம் இடம்பெற்றுள்ள பேனர் வைக்கப்பட்டுள்ளது. இது தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2016 ஆம் ஆண்டு ஜேபி நட்டா முனுகோட் தொகுதியில் புளோரைடு தொடர்பான ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும் என்ற வாக்குறுதி அளித்து இருந்தார்.
இந்த வாக்குறுதி நிறைவேற்றப்படாததால் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஜேபி நட்டா படத்துடன் கல்லறை அமைக்கப்பட்டு இருப்பதாக தெரிகிறது. இந்த சம்பவம் அங்கு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பாஜகவினரின் கோபம்
தேர்தலில் ஓட்டுக்காக இவ்வளவு கீழ்த்தரமான செயல்களை டிஆர்எஸ் கட்சியினர் செய்துவருவதாக பாஜக தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
பா.ஜ.க.வுக்கு மக்கள் அளித்த ஆதரவை ஏற்க முடியாததால் தான், இந்த செயல்களை செய்வதாக, ஆவேசமாக கூறுகின்றனர்.
பாஜக தேசிய துணைத்தலைவர் டி கே அருணா வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் “ உலகின் மிகப்பெரிய தேசிய மற்றும் ஜனநாயக கட்சியின் தலைவர் ஜே பி நட்டா. ஆனால் உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் ஜனநாயகம் புரியவில்லையா சந்திரசேகர் ராவ்” என்று காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்