அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஆகஸ்ட் 25 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் இன்று (ஆகஸ்ட் 12) உத்தரவிட்டுள்ளது.
சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஜூன் 14 ஆம் தேதி அதிகாலை 1.30 மணியளவில் கைது செய்யப்பட்டார்.
ஆனால் அன்றைய தினமே நெஞ்சுவலி காரணமாக ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். மருத்துவ சிகிச்சைக்கு பிறகு அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறைக்கு மாற்றப்பட்டார்.
இதனிடையே செந்தில் பாலாஜி மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கில் நீதிபதி நிஷா பானு மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி மாறுபட்ட தீர்ப்பை வழங்கியதால் மூன்றாவது நீதிபதி சி.வி.கார்த்திகேயன் அமர்விற்கு வழக்கு விசாரணை மாற்றப்பட்டது.
இதில் செந்தில் பாலாஜி கைது செல்லும் என்று மூன்றாவது நீதிபதி தீர்ப்பு வழங்கியதால், செந்தில் பாலாஜியை கஸ்டடியில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது அமலாக்கத்துறை.
செந்தில் பாலாஜியை கஸ்டடியில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் ஆகஸ்ட் 7 ஆம் தேதி அனுமதி வழங்கியது.
அமலாக்கத்துறை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பைக் கூறி செந்தில் பாலாஜியை கஸ்டடியில் எடுக்க கோரியது.
சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கியதை அடுத்து ஆகஸ்ட் 7 ஆம் தேதி இரவே புழல் சிறையில் இருந்த செந்தில் பாலாஜியை கஸ்டடியில் எடுத்து நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு கொண்டு சென்றது.
5 நாள் கஸ்டடி இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில் இன்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி நீதிபதி அல்லி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது அமலாக்கத்துறை செந்தில் பாலாஜியை மேலும் 5 நாட்கள் காவலில் எடுக்க அனுமதிக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்தது.
செந்தில் பாலாஜியின் கஸ்டடி நாட்களை நீட்டிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை கோரிக்கை வைக்க முடிவு செய்திருக்கிறது என்று ஏற்கனவே ”டிஜிட்டல் திண்ணை: செந்தில் பாலாஜிக்கு மீண்டும் ED கஸ்டடி? பொறியில் சிக்கிய பொன்முடி-டென்ஷனில் அமைச்சர்கள்” என்ற தலைப்பில் மின்னம்பலத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம்.
அதன்படியே அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்துள்ளது.
அமலாக்கத்துறை கோரிக்கையை நிராகரித்த நீதிபதி அல்லி செந்தில் பாலாஜிக்கு ஆகஸ்ட் 25 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து உத்தரவிட்டுள்ளார்.
இதனையடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறைக்கு அழைத்து செல்லப்படுகிறார்.
மோனிஷா
அமைச்சர் அன்பில் மகேஷுக்கு நெஞ்சுவலி: மருத்துவமனையில் அனுமதி!
நீ எஸ்.சி தானே… அம்மாவ ஏசினாங்க… அண்ணன வெட்டினாங்க’ -நடந்ததைச் சொல்லும் தங்கை சந்திராசெல்வி