குறிப்பிட்ட சமுதாயம் தாங்கள் இந்தியாவை ஆள வேண்டும் என்பதற்காக மோடிக்கு வாக்களித்தனர். சிறுபான்மையினர் ராகுல் காந்திக்கு வாக்களித்தனர். அவர்களுக்கு இன்னும் எங்கள் மீது நம்பிக்கை வரவில்லை” என செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் காமராஜரின் 121-வது பிறந்தநாளை முன்னிட்டு மதுரை கீழவாசல் பகுதியில் உள்ள அவரது திருவருவுச் சிலைக்கு பல்வேறு கட்சித் தலைவர்களும் அமைப்பினரும் இன்று (ஜூலை 15) மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
அந்த வகையில், அதிமுக மதுரை மாநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் ராஜூ, அக்கட்சி தொண்டர்களுடன் சென்று காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் “ரூ.8000 கோடிக்கு மேல் நிதி அளித்தும் மதுரை மக்களவை தொகுதியில் அதிமுக மூன்றாவது இடம் பெற்றது குறித்து கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆதங்கம் தெரிவித்துள்ளாரே? என கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு செல்லூர் ராஜு, ”நாங்கள் என்ன காமராஜரா? எம்.ஜி.ஆரா? ஜெயலலிதாவா? நாங்களும் கூவி கூவி தான் ஆட்களை அழைத்தோம். வேகாத வெயிலில் சரவணனுக்காக ஓட்டு கேட்டோம். ஓட்டு கேட்டதில் ஏதேனும் குறை இருந்ததா? கட்சி தொண்டர்களும் பம்பரமாக தான் பணியாற்றினார்கள்.
மதுரை அதிமுகவின் கோட்டையாக இருந்தது என்பது தெரியும். ஆனால் தோல்வியை தழுவியது எங்களுக்கு மன உளைச்சல்தான்.
குறிப்பிட்ட சமுதாயம் தாங்கள் இந்தியாவை ஆள வேண்டும் என்பதற்காக மோடிக்கு வாக்களித்தனர். மதுரையில் சௌராஷ்டிரா அமைப்பினர் மற்ற மாநிலங்களில் இருந்து வந்த வட மாநிலத்தவர்கள், பிராமின்ஸ் உள்ளிட்டோர் மோடிக்கு வாக்களித்தனர்.
மற்றொரு பக்கம் சிறுபான்மையினர் ராகுல் காந்திக்கு வாக்களித்தனர். அவர்களுக்கு இன்னும் எங்கள் மீது நம்பிக்கை வரவில்லை. இதற்கிடையே அதிமுகவினர் நாங்கள் அடிபட்டு விட்டோம்.
மக்களவைத் தேர்தலில், மதுரையில் மட்டுமா அதிமுகவுக்கு வாக்கு குறைந்தது? மற்ற இடங்களில் எல்லாம் இதைவிட அதிகமாக குறைந்துள்ளது.
தமிழ்நாட்டில் பல இடங்களில் அதிமுக தோல்வியை தழுவியது. பல இடங்களில் இரண்டாவது இடம் பெற்றோம். இது குறித்து பொதுச் செயலாளர் ஆலோசனைதான் வழங்கினாரே தவிர வேறு ஒன்றும் கூறவில்லை” என செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
பாரதத்தின் நுரையீரல் – மத்தியபிரதேசம்
46 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட்ட பொக்கிஷ அறை!
ARGvsCOL : கோபா அமெரிக்கா கோப்பையை வென்று மெஸ்ஸி சாதனை!