2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள்..? என்று நம் மின்னம்பலம், மக்களிடம் மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.
முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரி தொகுதியில் திமுக தலைமையிலான கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் சிட்டிங் எம்பி விஜய் வசந்த் மீண்டும் போட்டியிடுகிறார்.
அதிமுக சார்பில் பசிலியான் நசரேத் போட்டியிடுகிறார்.
பாஜக சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மீண்டும் களமிறங்குகிறார். நாம் தமிழர் கட்சி சார்பில் மரிய ஜெனிஃபர் போட்டியிடுகிறார்.
கன்னியாகுமரி தொகுதியில் தேசிய கட்சிகளான காங்கிரஸும் பாஜகவும் சற்று வலுவாக இருக்கும் நிலையில், போட்டி இவர்களுக்கு இடையில்தான் தீவிரமாக இருக்கிறது.
களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.
உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக கன்னியாகுமரி பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம்.
இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.
18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.
கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட கன்னியாகுமரி, நாகர்கோயில், குளச்சல், பத்மநாபபுரம், விளவங்கோடு, கிள்ளியூர் ஆகிய ஆறு சட்டமன்றத் தொகுதி வாரியாக நடத்தப்பட்ட சர்வேயின் அடிப்படையில்,
திமுக கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் 45% வாக்குகளைப் பெற்று குமரியை மீண்டும் கைப்பற்றத் தயாராகிறார்.
பாஜகவின் வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் 33% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடத்தைப் பிடிக்கிறார்.
மீனவ முக்குவர் சமுதாயத்தைச் சேர்ந்த அதிமுகவின் வேட்பாளரான பசிலியான் நசரேத் 17% வாக்குகளைப் பெறுகிறார்.
நாம் தமிழர் வேட்பாளர் மரிய ஜெனிஃபர் 4% வாக்குகள் பெறுகிறார்.
1% பேர் கருத்து எதுவும் இல்லை என தெரிவித்துள்ளனர்.
கன்னியாகுமரியில் மீண்டும் திமுக கூட்டணியில் காங்கிரசின் கொடியே பலமாக பறக்கிறது.
மின்னம்பலம் கருத்துக்கணிப்பின் முடிவுகளை தெரிந்துகொள்ள தொடர்ந்து இணைந்திருங்கள் minnambalam.com வலைதளத்தில்…
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கச்சத் தீவு… கடற்கரைத் தொகுதிகளில் ‘இறங்கி’ வேலை செய்யும் பாஜக
ஜி.வி.பிரகாஷின் டியர் இன்னொரு குட் நைட்டா? – திரை விமர்சனம்!