IAS மாற்றம் : மசியாத முதல்வர்… மந்திரி ஷாக் – தொடரும் அதிரடி!

Published On:

| By Aara

ministers who behind ias transfers

தமிழ்நாட்டில் பிப்ரவரி 9ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 38 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். ministers who behind ias transfers

மாவட்ட கலெக்டர்கள், முக்கியமான அமைச்சகங்களின் செயலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் இந்த மாற்றப்பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

தலைமைச் செயலாளர்,  முதலமைச்சர் அலுவலக செயலாளர்கள் உள்ளிட்டோருடன் முதலமைச்சர் ஸ்டாலின் நடத்திய ஆலோசனையை தொடர்ந்து இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதுவும் தேர்தல் நெருங்கும் நிலையில் மேற்கொள்ளப்பட்டிருக்கிற இந்த அதிகாரிகள் மாற்றம் அமைச்சர்கள் மத்தியிலும் அரசியல் வட்டாரங்களிலும் விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து கோட்டை வட்டாரங்களில் பேசியபோது….

கடந்த இரு வாரங்களாகவே முக்கிய ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றப்படலாம் என்ற பேச்சு கோட்டையில் உலவியது. 

இந்த பட்டியல்  தயாரிப்பின்போது முதல்வர் பல்வேறு கேள்விகளைக் கேட்டிருக்கிறார். அவர் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் உயரதிகாரிகள் உரிய பதிலளித்து, முதல்வரை கன்வின்ஸ் செய்த பிறகே இந்த மாற்றப்பட்டியல் இறுதி செய்யப்பட்டுள்ளது.  

38 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றப்பட்ட நிலையில், அதில் சில மாற்றல் உத்தரவுகள் விவாதத்துக்கு உள்ளாகியிருக்கிறது.

டாக்டர் பிரபாகர் ஐஏஎஸ் (வலது)

சேகர்பாபுவால் மாற்றப்பட்ட சி.எம்.டி.ஏ. உறுப்பினர் செயலாளர்

சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் எனப்படும் சி.எம்.டி.ஏ.வின் உறுப்பினர் செயலாளராக இருந்த அன்சுல் மிஸ்ரா மாற்றப்பட்டு, அந்த இடத்துக்கு டாக்டர் பிரபாகர் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

இத்துறையின் அமைச்சரான சேகர்பாபுவின் கோரிக்கையின் பேரிலேயே இந்த மாற்றம் நடந்திருக்கிறது என்கிறார்கள். திமுக ஆட்சிக்கு வந்த புதிதில் 2021 ஜூன் மாதம் சி.எம்.டி.ஏ. வின் உறுப்பினர் செயலாளராக நியமிக்கப்பட்டார் அன்சுல் மிஸ்ரா. அதன் பின் இப்போதுதான் மாற்றப்படுகிறார்.

அமைச்சர் சேகர்பாபுவிடம்  பில்டர்ஸ் ஒரு சர்ச்சைக்குரிய வேண்டுகோளை நிறைவேற்றச் சொல்லி அழுத்தம் தந்தனர். அமைச்சரும் முதல்வரிடம் இதை வேண்டுகோளாக வைத்தார்.

‘சென்னை பெருநகரத்தில் FSI  எனப்படும்  (Floor Space Index)  நிர்ணயம் முக்கியமானது. அதாவது ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் எவ்வளவு தளங்கள் கொண்ட கட்டிடங்களைக் கட்டலாம் என்பதற்கான அளவீடுதான் Floor Space Index.

ஏற்கனவே இருக்கும் Floor Space Index இல் சில தளர்வுகளை செய்ய அமைச்சர் சேகர்பாபு சிபாரிசு செய்ததாகவும் தேர்தல் நெருங்கும் நிலையில்… சென்னையின் ரியல் எஸ்டேட் துறையில் இது பெரிய அளவு எதிரொலிக்கும் என்றும் சி.எம்.டி.ஏ.வுக்குள் பேச்சுகள் எழுந்தன. இந்த நடவடிக்கைகளை வேகமாக மேற்கொள்வதற்காகவே புதிய சி.எம்.டி.ஏ. மெம்பர் செகரட்டரியாக மருத்துவர் பிரபாகர் நியமிக்கப்பட்டிருப்பதாக சொல்கிறார்கள்.

அதேநேரம் தனது துறை அல்லாத இன்னொரு துறை அதிகாரியை மாற்ற அமைச்சர் சேகர்பாபு வைத்த வேண்டுகோள் ஏற்கப்படவில்லை என்கிறார்கள்.

ஜெ.ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் (வலது)

செந்தில்பாலாஜியோடு பணியாற்றப் போகும் ஜெ.ராதாகிருஷ்ணன்

கூட்டுறவு, உணவு, நுகர்வோர் பாதுகாப்புத் துறை செயலாளரான ஜெ.ராதாகிருஷ்ணன் தமிழக மின் வாரியத்தின் தலைவராகவும், தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தின் மேலாண்மை இயக்குனராகவும், தமிழ்நாடு மின் விசை உற்பத்திக் கழகத்தின் தலைவராகவும் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

மின்சாரத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜியின் துறையில் இதுவரை இப்பதவிகளை வகித்து வந்த நந்தகுமார், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் என்ற டம்மியான பதவிக்கு மாற்றப்பட்டிருக்கிறார்.

அதேநேரம் மத்திய அரசு பணிக்காக முயற்சித்து வந்த மூத்த அதிகாரியான ஜெ.ராதாகிருஷ்ணன் ஒன்றிய உயரதிகாரிகள் சிலருடன் நல்ல தொடர்பில் இருப்பதாகவும், அதன் மூலம் மின் வாரிய பிரச்சினைகளை  சரி செய்வதற்காக இந்த பதவியில் அமர வைக்கப்பட்டுள்ளார்  என்கிறார்கள்.

செந்தில்பாலாஜிக்கும் நந்தகுமாருக்கும் ஏற்கனவே முரண்பாடுகள் நீடித்து வந்தன.  இந்த நிலையில் சவால்கள் நிறைந்த மின்சார வாரியத்தின் தலைவர் பதவிக்கு மூத்த ஐ.ஏ.எஸ், அதிகாரியான ஜெ.ராதாகிருஷணன் நியமிக்கப்பட்டுள்ளார்.

சுப்ரியா சாஹு ஐஏஎஸ் (இடது புறம்)

வனத்துறைக்கு வந்த சுப்ரியா… பொன்முடிக்கு ஷாக்!

இந்த மாற்றத்தில் இன்னொரு முக்கியமான அம்சம் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளராக இருந்த சுப்ரியா சாஹு சுற்றுச் சூழல், காலநிலை, வனத்துறை செயலாளராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.  

ஏற்கனவே சுப்ரியா சாஹு வனத்துறை செயலாளராக இருந்தபோது… அத்துறையின் அமைச்சராக ராமச்சந்திரன் இருந்தார். அவருக்கும்  சுப்ரியாவுக்கும் ஏழாம் பொருத்தமாகவே இருந்தது. ராமச்சந்திரன் கடந்த அமைச்சரவை மாற்றத்தில் பதவி இழந்ததற்கே…. சுப்ரியா சாஹு தான் காரணம் என்று பேசப்பட்டது. இந்நிலையில், மீண்டும் இப்போது வனத்துறை செயலாளர் பதவிக்கு சுப்ரியா திரும்பியிருப்பது அத்துறையின் அமைச்சர் பொன்முடிக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது என்கிறார்கள். சுப்ரியா சாஹு தலைமைச் செயலாளர் முருகானந்தத்தின் மனைவி என்பது குறிப்பிடத் தக்கது.

இந்த நியமனத்துக்கு  முதல்வர்  நீண்ட நேரம் யோசித்து பின்னரே ஒப்புதல் அளித்தார் என்றும் சொல்கிறார்கள். 

டாக்டர் மணிவாசகன் ஐஏஎஸ் (வலது)

மாறுதல் கேட்டுப் பெற்ற மணிவாசகன்

நீர்வளத்துறை செயலாளராக இருந்த டாக்டர் மணிவாசகன் இந்த மாற்றத்தில் சுற்றுலா, பண்பாடு, அறநிலையத்துறை செயலாளராக மாற்றப்பட்டிருக்கிறார்.

அமைச்சர்கள் தங்களுக்கு வேண்டப்பட்ட அதிகாரிகளை தமது துறைகளுக்கு கேட்டுப் பெறுவதுண்டு. ஆனால், நீர்வளத்துறை செயலாளராக இருந்த மணிவாசகன்,  ‘எனக்கு இந்த பொறுப்பு வேண்டாம். என்னை மாற்றிவிடுங்கள்’ என்று தானாக முன் வந்து  மாறியிருக்கிறார் என்கிறார்கள்.

மணல் விவகாரத்தில்  சில ஆட்சேபணைகளை செயலாளராக இருந்த மணிவாசகன் தெரிவித்தார் எனவும், அவை ஏற்கப்படவில்லை என்பதால்… வரும் காலத்தில் எதற்கு வம்பு என்ற நோக்கில் இந்தப் பணியில் தொடர மணிவாசகன் விரும்பவில்லை என்றும் கோட்டை வட்டாரத்தில் கூறுகிறார்கள்.

ஒன்றிய அரசின் அமலாக்கத்துறை கண் வைத்திருக்கும் தமிழ்நாடு நீர்வளத் துறையின் புதிய செயலாளராக மங்கத் ராம் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் பொதுப்பணித்துறையின்  செயலாளராக இருந்தவர்.

குமார் ஜெயந்த் ஐஏஸ் (இடது), பிரஜெந்திர தவ்நீத் (வலது)

பிடிஆர்- மூர்த்தி எக்சேஞ்ச் மேளா

இந்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றத்தில் இன்னொரு சுவாரஸ்யமும் இருக்கிறது.

மதுரையில் எதிரெதிர் துருவமாக அரசியல் செய்து வரும் பிடிஆர், மூர்த்தி ஆகிய அமைச்சர்களின் துறைச் செயலாளர்கள் பரஸ்பரம் இட மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்கள்.

பிடிஆரின் தகவல் தொழில்நுட்பத் துறை மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறைச் செயலாளராக இருந்த குமார் ஜெயந்த் அமைச்சர் மூர்த்தியின் வணிக வரி-பத்திரப் பதிவுத் துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.’

அமைச்சர் மூர்த்தியின் துறைச் செயலாளராக இருந்த பிரஜெந்திர நவ்நீத், அமைச்சர் பிடிஆர் துறையின் செயலாளராக மாற்றப்பட்டுள்ளார். அதிகாரிகளுக்கு இடையிலான இந்த மாற்றம் மதுரை அரசியல் வட்டாரத்தில் குறிப்பிட்டு பேசப்படுகிறது.

டாக்டர் கே.கோபால் ஐஏஸ் (வலது)

கோவி செழியன் கோரிக்கையை ஏற்ற முதல்வர்

உயர் கல்வித் துறைச் செயலாளர் கோவி. செழியன் தனது துறைச் செயலாளரான டாக்டர் கே.கோபால் தன்னை மதிப்பதே இல்லை என்றும், சின்னச் சின்ன விஷயங்களில் கூட தன் பேச்சை கேட்பதில்லை என்றும் முதல்வர், துணை முதல்வர் ஆகியோரிடம் நேரடியாகவே சென்று கூறியுள்ளார்.

அதன் பேரில் உயர் கல்வித் துறை செயலாளர் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த ஆட்சியில்  அடிக்கடி மாற்றப்பட்ட  ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பட்டியலில் கோபால் முதன்மையானவர்.

சுகாதாரத்துறையில் மீண்டும் செந்தில்குமார்

ஏற்கனவே சுகாதாரத்துறையில் இருந்து ஜெ.ராதாகிருஷ்ணன் மாற்றப்பட்டபோது அத்துறையின் செயலாளராக நியமிக்கப்பட்டார் டாக்டர் செந்தில்குமார். பின்னர் நடந்த மாற்றத்தில் அவருக்கு பதிலாக சுப்ரியா சாஹு  மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளராக ஆனார்.

இந்நிலையில் சுற்றுச் சூழல், காலநிலை, மற்றும் வனத்துறை செயலாளராக நியமிக்கப்பட்டார் டாக்டர் செந்தில்குமார்.

இப்போது நடந்த மாற்றத்தில் டாக்டர் செந்தில் குமார் மீண்டும் மக்கள் நல்வாழ்வுத் துறைக்கே திரும்பியுள்ளார். அதேபோல சுப்ரியா சாஹுவும் மீண்டும் சுற்றுச் சூழல், கால நிலை, வனத்துறைக்கே திரும்பியிருக்கிறார்.

பிறகு ஏன் அன்று இவர்கள் மாற்றப்பட்டார்கள் என்ற கேள்வி இயல்பாகவே அதிகாரிகளிடம் எழுந்துள்ளது.

தற்போது சுற்றுலா, பண்பாடு, அறநிலையத்துறை முதன்மைச் செயலாளராக இருந்து வந்த டாக்டர் சந்திரமோகன், மக்கள் நல் வாழ்வுத்துறைக்கு மாற்றப்படுவார் என ஒரு பேச்சு இருந்தது. ஆனால் சந்திரமோகன் பள்ளிக் கல்வித் துறை செயலாளராக மாற்றப்பட்டுள்ளார்.

சமீபத்திய ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றங்களில் பள்ளிக் கல்வித் துறையே அதிக அளவு மாறுதல்களை சந்தித்த துறையாகவும் இருக்கிறது.

இந்தத் துறைகள் மட்டுமல்ல இன்னும் பத்து முக்கிய துறைகளின் அதிகாரிகள் விரைவில் மாற்றப்பட இருக்கிறார்கள் என்பதுதான் கோட்டை வட்டாரத்தில் இருந்து கிடைக்கும் லேட்டஸ்ட் அப்டேட்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share