திமுக எம்.எல்.ஏ.க்களை அழைத்து முதல்வரின் மாப்பிள்ளை சபரீசன் விசாரணை நடத்தியிருப்பது அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மத்தியில் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.
திமுக எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தியில் இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து ஐந்து மாதங்களுக்கு முன் நெடுஞ்சாலைத் துறையில் இருந்து திட்டப் பணிகளை அவர்களுக்கு பகிர்ந்தளித்தார் முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின். இந்தத் திட்டப் பணிகளை எம்.எல்.ஏ.க்கள் கட்சியினருக்குக் கொடுத்தார்களா என்றும், பொதுவாக எம்.எல்.ஏ.க்கள் தங்கள் தொகுதிகளில் கட்சியினரிடமும், மக்களிடமும் எவ்வாறு பழகுகிறார்கள் என்றும் இரு முனைகளில் இருந்து சர்வே நடத்தப்பட்டது.
மாநில உளவுத்துறை ஒருபக்கமும், ஸ்டாலின் மாப்பிள்ளை இன்னொரு பக்கமும் நடத்திய இந்த சர்வே முடிவுகள் அதிர்ச்சியைதான் அளித்தன.
அதாவது திமுக எம்.எல்.ஏ.க்கள் தத்தமது தொகுதிகளில் ஓஏபி எனப்படும் முதியோர் ஓய்வூதியத் தொகை கொடுப்பதற்குக் கூட லஞ்சம் வாங்குவதாகவும் நெடுஞ்சாலைத் துறைகளில் இருந்து கொடுக்கப்பட்ட கான்ட்ராக்ட்டுகளை திமுகவினருக்கு கொடுக்காமல் அதிமுகவில் இருக்கும் நண்பர்களுக்கு கொடுத்து காசு பார்ப்பதாகவும் தெரியவந்தது.
இந்த நிலையில் திமுக எம்.எல்.ஏ.க்களை அழைத்து இது தொடர்பாக பேசியிருக்கிறார் சபரீசன்.
“உங்களுக்கு இன்னும் என்ன குறை? ஏன் இன்னும் நெகட்டிவ் தகவல்களே வருது” என்று கேட்டிருக்கிறார். அதற்கு திமுக எம்.எல்.ஏ.க்கள் விளக்கம் கொடுத்திருக்கிறார்கள்.
அதன் பிறகு அந்தந்த மாவட்ட அமைச்சர்கள் உங்களுக்கு ஒத்துழைக்கிறார்களா என்று எம்.எல்.ஏ.க்களிடம் கேட்டதற்கு, தங்களது மாவட்ட அமைச்சர்களைப் பற்றி குமுறிக் கொட்டியிருக்கிறார்கள் எம்.எல்.ஏ.க்கள்.
“மந்திரிகள் எங்களை ஒரு மனுசனா கூட மதிக்கிறதில்லை. அடிமை மாதிரி, பிச்சைக்காரன் மாதிரி நடத்துறாங்க. அவங்கவங்க அவங்க குடும்பத்தைதான் பாத்துக்குறாங்க.
மந்திரிங்களோட குடும்பத்துக்கெல்லாம் போகதான் நாங்கள்லாம். நாங்களா வேற துறை மந்திரிங்க மூலமா ஏதாச்சும் நல்லது பண்ண முயற்சி பண்ணா கூட அதைத் தடுத்து நிறுத்திடறாங்க.
முதலமைச்சர் உத்தரவுப்படி ஒவ்வொரு தொகுதிலயும் இருக்குற முக்கிய 10 பிரச்சினைகளை மனுவா எழுதி அந்தந்த கலெக்டர்கிட்ட கொடுத்தோம்.
அந்த பிரச்சினைகளைக் கொடுத்துட்டு அதை தீர்த்து வைப்பாங்கனு எதிர்பார்த்துக்கிட்டிருக்கோம். அதை கூட தீர்த்து வைக்கிறதுல மந்திரிங்க அக்கறை காட்டல.
மந்திரிகளே மதிக்கலைன்னா அதிகாரிகள் எப்படி மதிப்பாங்க. அவங்களும் மதிக்கலை. எப்படியாவது இதுக்கு ஒரு முடிவு கட்டுங்க” என்று புலம்பியிருக்கிறார்கள்.
முதல் கட்டமாக சபரீசன் சந்தித்த இருபது முதல் இருபத்தைந்து எம்.எல்.ஏ.க்களில் பெரும்பாலானோர் இப்படித்தான் புலம்பியிருக்கிறார்கள்.
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அந்தந்த மாவட்ட அமைச்சர்களுக்கும் இடையே நிலவும் இந்த சிக்கல் பற்றி சீரியசாக எடுத்துக் கொண்டிருக்கிறார் சபரீசன்.
அடுத்தடுத்த எம்.எல்.ஏ.க்களுடனான விசாரணைகளையும் ஆலோசனைகளையும் தொடர்ந்துகொண்டிருக்கிறார் சபரீசன்.
–வேந்தன்
மழை பாதிப்பு : வீடியோ காலில் முதல்வர்!
ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்ப பெற திமுக எடுத்த முடிவு!