அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபு, அன்பில் மகேஷுக்கு ஆசி தந்த தில்லாலங்கடி சாமியார்!

அரசியல்

திருச்சி ஆதீனம் என்ற பெயரில் ஒரு சாமியாரின் லீலைகள் அரசியல் வட்டாரத்திலும்,  அதிகாரிகள் வட்டாரத்திலும் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. 

சீர் வளர் சீர்  சிவப்பிரகாச தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள் என்கிற திருச்சி ஆதீனத்தை மையமாக வைத்து புகார்கள் எழுந்திருக்கின்றன.

இதுகுறித்து நம்மிடம் பெயர் வெளியிட விரும்பாத சில அரசியல் பிரமுகர்கள் மனம் திறந்தனர்.

“சில ஆண்டுகளுக்கு முன்பு மதுரையை மையமாக வைத்து செயல்பட்டு வந்த இந்த சாமியார் தற்போது திருச்சியில் இருக்கிறார்.

இவருக்கு தமிழக அமைச்சர்கள், காவல்துறை அதிகாரிகள்,  சிபிஐ அதிகாரிகள் என டெல்லி வரை தொடர்பு இருக்கிறது என்று அவருக்கு வேண்டிய சிலர் பதவிகளை எதிர்பார்த்திருக்கும் சில  அரசியல்வாதிகளை அணுகியிருக்கிறார்கள். 

தென்னிந்தியா முதல் வட இந்தியா வரை அரசு வேலை வாய்ப்புகளிலும் முக்கியமான பணியிடங்களிலும் ராஜ்யசபா எம்பி போன்ற எதுவாக இருந்தாலும் திருச்சி ஆதீனத்தை அணுகுங்கள் முடித்துக் கொடுப்பார் என்று அவருக்கு வேண்டிய தூதர்கள் பல முன்னாள் அரசியல் பிரமுகர்களை ஆசை காட்டியிருக்கிறார்கள். அவர்களும் பணம் கொடுத்திருக்கிறார்கள்.

வேலை நடக்கவில்லை என்றால் பரவாயில்லை பணத்தை திருப்பி கொடுங்கள் என்று சம்பந்தப்பட்டவர்கள் கேட்டால் திருச்சி ஆதீனத்தின் அடிப்பொடிகள் வேறு மாதிரி பதில் சொல்கிறார்கள்.

திருச்சி ஆதீனத்திடம் அமைச்சர் சேகர்பாபு  ஆசி பெற்ற காட்சி என்றும் திருச்சி ஆதீனத்திடம் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆசி பெற்ற காட்சி என்றும் அந்த அமைச்சர்கள் திருச்சி ஆதீனத்தோடு இருக்கும் படங்களை அனுப்பி வைத்து மறைமுகமாக மிரட்டுகிறார்கள்.

Complaints Trichy Adheenam

இது மட்டுமல்ல சில நாட்களுக்கு முன்பு திருச்செந்தூர் கோயிலுக்கு சென்றார் இந்த சாமியார். அப்போது தூத்துக்குடி மாவட்ட எஸ்பியான பாலாஜி சரவணனும் கோவிலுக்கு சென்றுள்ளார்.

கோயில் அருகே ஹோட்டலில் அறை எடுத்து தங்கி, கோவிலுக்கு வரும் விஐபிகள் எல்லாம் சாமியார் அழைக்கிறார் என்று சொல்லி அழைத்துச் சென்று அவர்களுடன் போட்டோ எடுத்துக் கொள்வது தான் திருச்சி ஆதீனத்தின் வேலை.

அந்த வகையில் தூத்துக்குடி எஸ் பி பாலாஜி சரவணன் மரியாதை நிமித்தமாக திருச்சி ஆதீனத்தை வணங்கும் படத்தை எடுத்து வைத்துக்கொண்டு… தன்னிடம் தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஆசி பெற்றார் என்று படத்தை தன் ட்விட்டரில் பரப்பி இருக்கிறார் திருச்சி ஆதீனம்.

இதைப் பார்த்துவிட்டு கோபமான தூத்துக்குடி எஸ்பி அந்த சாமியாரை எச்சரித்திருக்கிறார். இதையடுத்து தூத்துக்குடி எஸ்பி தன்னை சந்தித்து ஆசிபெற்றார் என்ற படத்தை ட்விட்டரில் இருந்து நீக்கிவிட்டார் திருச்சி ஆதீனம்.

இதே போல கோயில்களுக்கு சென்று அங்கே அருகில் இருக்கும் ஹோட்டல்களில் அறை எடுத்து தங்கி கோவிலுக்கு வரும் அமைச்சர்கள் அதிகாரிகள் ஆகியோருடன் படம் எடுத்துக் கொண்டு அதை வைத்தே பெரிய அளவில் பல தில்லாலங்கடிகளை செய்து வருகிறார் திருச்சி ஆதீனம்.

இந்த நிலையில் தன்னிடம் பணம் கொடுத்து வேலை நடக்காதவர்கள் தொடர்ந்து போன் செய்து கொண்டிருக்க சாமியார் உலக நன்மைக்காக இந்த வாரம் முழுதும் மௌன விரதம் இருக்கிறார் எனவே அடுத்த வாரம் பேசுங்கள் என்று அவரது அடிப்பொடிகள் தெரிவிக்கிறார்கள்.

திருச்சி ஆதீனத்தின் ட்விட்டர் பக்கத்தில் அவர் கடந்த நவம்பர் 5 ஆம் தேதி தற்போதைய அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை அவரது இல்லம் அதாவது முதல்வரின் இல்லத்துக்கே சென்று சந்தித்து ஆசி வழங்கிய படத்தை வெளியிட்டுள்ளார்.

இவர், எந்த மடத்தை சேர்ந்தவர் என்பதே குழப்பாக இருக்கிறது. தன்னை சந்திக்கும் ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு மடத்தின் பெயரை சொல்லியுள்ளார்.

இந்தநிலையில் திருச்சி ஆதீனத்துடன் இப்படி போஸ் கொடுக்கும் அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபு, அன்பில் மகேஷ் போன்றவர்கள் தங்கள் பெயரைச் சொல்லி ஏமாற்று வேலைகள் நடக்காமல் தடுக்க வேண்டும். சாமியாரைப் போல அவர்களும் மௌனமாக இருக்கக் கூடாது” என்று குமுறுகிறார்கள்.

வேந்தன் 

’கால்பந்தின் கருப்பு முத்து’ பீலே பற்றிய 10 தகவல்கள்!

அம்மா… பிரதமர் மோடியின் நினைவலைகள்!

+1
1
+1
6
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *