மதுரையில் அமைச்சர் மூர்த்தி தரும் குடைச்சல்களால்தான் அமைச்சர் பிடிஆர் தவிப்பதாக மதுரை உடன்பிறப்புகள் தெரிவிக்கின்றனர்.
மதுரை மாவட்டம் வெளிச்சநத்தம் கிராமத்தில், நடுத்தர விவசாயக் குடும்பத்தில் பிறந்த மூர்த்தி, கல்லூரிக் காலத்திலேயே திமுகவின் அடிப்படை உறுப்பினராக தன்னை இணைத்துக்கொண்டார்.
திமுகவின் மாணவர் அணி கிளைச் செயலாளராக தனது அரசியல் பயணத்தைத் தொடங்கிய மூர்த்தி, இளைஞர் அணி அமைப்பாளர், ஒன்றிய கழகச் செயலாளர் என கட்சியில் படிப்படியாக வளர்ந்தார்.
அப்போதைய திமுகவின் அதிகார மையமாக இருந்த முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் அறிமுகம் கிடைத்தது.
அழகிரியின் ஒவ்வொரு பிறந்தநாளின்போதும் சுமார் 10 ஆயிரம் பேருக்கு பிரியாணி விருந்து வைக்கும் அளவிற்கு தனது விசுவாசத்தை காட்டியதால், அழகிரியின் குட்புக்கில் இடம் பிடித்தார் மூர்த்தி. அதன் பிறகு மூர்த்திக்கு ஏறுமுகம்தான்.
அழகிரியின் சிபாரிசால் மாவட்டச் செயலாளர் பதவி மூர்த்தியை தேடிவந்தது.
மதுரையைப் பொறுத்தவரைக்கும் கட்சியில் எந்த போராட்டம் என்றாலும் மு.க.அழகிரி மூர்த்தியை அழைத்துச் சொல்கிற அளவுக்கு அசுர வளர்ச்சி பெற்றிருந்தார்.
இதன்பின்னர் பல்வேறு காரணங்களால் மு.க.அழகிரி கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பின்பு ‘கட்சி தலைமையின் முடிவே தனது முடிவு’ என ஸ்டாலினின் அணிக்கு மாறினார் மூர்த்தி.
தென்மாவட்டத்தில் அழகிரியின் இடத்தை நிரப்பும் அளவிற்கு திமுகவில் நிர்வாகிகள் இல்லை என்ற நிலை வந்தபோது, ஸ்டாலினின் ‘மதுரை’ சாய்ஸாக இருந்தவர் மூர்த்தி. அதிரடிக்கும் சர்ச்சைகளுக்கும் பெயர் பெற்றவர் மூர்த்தி.
தன்னைப் பற்றி சமூக வலைதளங்களில் அவதூறாக பதிவிட்ட பாஜக பிரமுகரின் வீட்டிற்கே சென்று “சண்ட செய்யலாம் வா” என வேட்டியை மடித்துக்கட்டி இறங்கியவர் மூர்த்தி.

2006ஆம் ஆண்டு முதல்முறையாக சோழவந்தான் தொகுதியில் வெற்றி பெற்று சட்டமன்றத்திற்குச் சென்ற மூர்த்தி, அதன்பின்னர் வந்த தேர்தலில் தனது தொகுதியை மாற்றி, மதுரை கிழக்கு தொகுதியில் போட்டியிட்டார்.
2011இல் நடந்த தேர்தலில் தோல்வியை சந்தித்த மூர்த்தி, அதற்குப்பின் 2016 மற்றும் 2021ஆம் ஆண்டுகளில் அதே தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அரசியல் மட்டுமில்லாமல் ஜல்லிக்கட்டு போட்டியிலும் ஈடுபாடு கொண்டவர் மூர்த்தி. அவர் வளர்க்கும் நான்கு ஜல்லிக்கட்டு காளைகளை இதுவரை எந்த ஜல்லிக்கட்டு போட்டிகளிலும், யாருமே அடக்கியது இல்லை எனச் சொல்கின்றனர்,
அவருக்கு நெருக்கமான வட்டாரத்தில். ஜல்லிக்கட்டு காளை மாதிரியே யாருக்கும் அஞ்சாத மூர்க்க குணம் உள்ளவர் மூர்த்தி எனச் சொல்லும் கட்சியினர், ஒரு உதாரணத்தையும் சொல்கிறார்கள்.
2021ஆம் ஆண்டு தேர்தலில், “முன்னாள் அமைச்சர் தமிழரசிக்கு மதுரையில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கக் கூடாது. மீறி வாய்ப்பு கொடுத்தால் அவரால் வெற்றி பெற முடியாது” என்று சொல்லி ஸ்டாலினுக்கே அதிர்ச்சி கொடுத்தார் மூர்த்தி.
’மனதில்பட்டதை யாருக்கும் அஞ்சாமல், முகத்திற்கு நேராகச் சொல்லும் பழக்கமுடையவர் மூர்த்தி’ என்று கூறும் கட்சிக்காரர்கள், 2022 தேர்தலில் திமுக வென்ற பின்னர்,
‘பிடிஆருக்கு அமைச்சர் பதவி’ என தகவல் பரவியபோது, ஸ்டாலினிடமும், சபரீசனிடமும் நேரடியாக பிடிஆருக்கு பதவி கொடுப்பதானால், தனக்கும் அமைச்சரவையில் இடம் ஒதுக்க வேண்டும் என கூறியதாக தெரிவிக்கின்றனர் அறிவாலய வட்டாரத்தில்.

“மூர்த்திக்கு அமைச்சர் பதவி தர வேண்டும் என்று முடிவு செய்தோம், ஆனால் எனக்கு அதில் மிகவும் பயமாக இருந்தது. ஏனென்றால் அவர் மிகவும் கோபக்காரர்; அப்படிப்பட்டவருக்கு எப்படி தருவது என்ற ஒரு தயக்கம் இருந்தது.
ஒருவித அச்சம் இருந்துகொண்டே இருந்தது. கோபம் இருக்கும் இடத்தில்தான் குணமிருக்கும். அதனால்தான் அவருக்குத் தரலாம் என்று முடிவு செய்தோம்” என்று ஸ்டாலினே அவரின் கோபத்தை பற்றி கூறியது குறிப்பிடத்தக்கது.
”மூர்த்தியை எதிர்த்து, எதிர்க்கட்சிகள் மட்டுமல்ல, சொந்த கட்சியினரே அரசியல் செய்ய அனுமதிக்காத குணமுள்ளவர். மதுரை திமுகவின் பழைய தலைகளான பொன்.முத்துராமலிங்கம், புறநகர் தெற்கு மாவட்டச் செயலாளர் மணிமாறன், மாநகரச் செயலாளர் தளபதி என எல்லோருமே மூர்த்திக்கு எதிராக அரசியல் செய்ய யோசிக்கற நிலைதான் இருக்கிறது” என மதுரை உடன்பிறப்புகள் தெரிவிக்கின்றனர்.
இதற்கு ஓர் உதாரணம், கடந்த உள்ளாட்சி தேர்தல் சமயத்தில் நிர்வாகிகளுடனான செயல்வீரர்கள் கூட்டத்தில் “திமுக மற்றும் கூட்டணி கட்சிகளை வெற்றிபெற செய்யாமல் சுயேட்சை கட்சிகளை வெற்றிபெற செய்தால் அவர்களை பழிவாங்குவேன். நான் இருக்கும்வரை அவர்கள் யாரும் திமுகவில் இருக்க முடியாது” என்று நேரடியாகவே பேசி ஜெர்க் கொடுத்த சம்பவங்களை நினைவுபடுத்துகிறார்கள் உடன்பிறப்புகள்.
அதேநேரத்தில், தொண்டர்களுக்கு ஏதாவது ஒரு பிரச்சினை என்றாலும் முதல் ஆளாக கோதாவில் குதிப்பதும் மூர்த்திதான். என்னதான் அதிரடி காட்டினாலும் “கட்சிக்குதான் முதலிடம்.
கட்சியைத்தாண்டித்தான் எல்லாமே” என மதுரை திமுகவின் ஒவ்வொரு அசைவையும் நிர்ணயிப்பவராக அமைச்சர் பி. மூர்த்தி இருக்கிறார். இப்படி, மூர்த்தி தரும் குடைச்சல்களை பொறுக்க முடியாமல்தான் பிடிஆர் தவிப்பதாக உடன்பிறப்புகள் தெரிவிக்கின்றனர்.
வினோத் அருளப்பன்
அமைச்சர்கள் ஸ்டாலினுக்கு கட்டுப்படவில்லையா? மக்கள் சொல்வது என்ன?