வைஃபை ஆன் செய்ததும் திமுகவின் இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட புதிய திமுக நிர்வாகிகள் பட்டியல் இன்பாக்ஸில் வந்து விழுந்தது.
அதை பார்த்துவிட்டு வாட்ஸ்அப் தனது மெசேஜை டைப் செய்ய தொடங்கியது.
“உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட திமுக இளைஞரணி நிர்வாகிகள் பட்டியல் கட்சிக்குள் பலத்த வரவேற்பை ஒரு பக்கமும் பலத்த அதிர்வுகளை ஒரு பக்கமும் இணைந்தே பெற்றுள்ளது.
அப்பாவைப் போல் அல்ல
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் இதற்கு முன்பு திமுக இளைஞரணி செயலாளராக இருந்தபோது நிர்வாகிகள் நியமனத்தில் மாவட்டச் செயலாளர்களிடமிருந்து பட்டியலை கேட்டு பெறுவார். அந்தப் பட்டியலில் இருந்து 90% நிர்வாகிகள் இளைஞரணி நிர்வாகிகள் பட்டியலில் இடம் பிடித்திருப்பார்கள். ஆனால் இப்போது உதயநிதி ஸ்டாலின் கடுமையாக கடைப்பிடித்துள்ள புதிய அணுகுமுறையால் மாவட்ட செயலாளர்களும் அமைச்சர்களும் வெளியில் சொல்ல முடியாத அளவுக்கு ஆதங்கத்திலும் கோபத்திலும் இருக்கிறார்கள்.
திமுக இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் பதவிக்கு பல்வேறு மாவட்ட செயலாளர்களும் அமைச்சர்களும் தங்களது மகன்கள், தங்களுக்கு நெருக்கமான உறவினர்களை உதயநிதியிடம் சிபாரிசு செய்திருந்தனர். ஆனால் வெளியான பட்டியலில் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் மகன்களுக்கு முற்று முழுதாக வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.
துரைமுருகன் சிபாரிசுக்கே இதுதான் கதி!
திமுக இளைஞரணி நிர்வாகிகள் பட்டியல் தயாராகிக் கொண்டிருக்கும்போதே திமுக பொதுச் செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன் இளைஞர் அணி செயலாளர் உதயநிதியை அழைத்தார். ‘தம்பி வேலூர் மாவட்டத்தில் இளைஞர் அணி அமைப்பாளர் பதவிக்கு நான் சொல்ற பையனை போடுறீங்களா?’என்று கேட்டிருக்கிறார் துரைமுருகன்.
திமுகவின் அல்மோஸ்ட் சீனியர்… தாத்தாவோடு 50 வருடங்களுக்கு மேலாக அரசியல் செய்தவர்… இப்போதைய திமுக பொதுச்செயலாளர் அவர் கேட்டு உதயநிதியால் மறுக்க முடியுமா? சரி தாத்தா செஞ்சிடலாம் என்று கூறியிருக்கிறார். வேலூர் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பதவிக்கு குடியாத்தத்தைச் சேர்ந்த சத்தியமூர்த்தியை பரிந்துரை செய்திருக்கிறார் துரைமுருகன். அவர் பெயரையும், மாசெ நந்தகுமார் பரிந்துரைத்த ராஜமார்த்தண்டன் பெயரையும் அமைப்பாளர் பதவிக்காக வைத்திருந்தார் உதயநிதி.
இந்த தகவல் வேலூர் மாவட்டச் செயலாளரான நந்தகுமாருக்கு தெரிய வர… அவர் உடனடியாக உதயநிதியை சந்தித்தார்.
‘பொதுச் செயலாளர் துரைமுருகன் சிபாரிசு செய்த சத்தியமூர்த்தி யார் என்று உங்களுக்கு தெரியுமா? கடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் குடியாத்தம் ஒன்றிய சேர்மன் பதவிக்கான தேர்தலில் திமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளரை எதிர்த்து… கதிர் ஆனந்த் சில வேலைகளை செய்தார். அவருக்கு ஆதரவாக இருந்து கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளரை எதிர்த்து வேலை செய்தவர்தான் மாணவர் அணியில் இருந்த சத்தியமூர்த்தி. அதனால் அவர் நீக்கப்பட்டார். மீண்டும் அவர் பொதுச் செயலாளரால் சேர்க்கப்பட்டார்.
தற்போது அவருக்கு இளைஞர் அணி அமைப்பாளர் பதவி கொடுத்தால் கட்சிக்காக வேலை செய்பவர்கள் அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்’ என்று உதயநிதியிடம் கூறியுள்ளார் நந்தகுமார். இதையடுத்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனின் சிபாரிசையே ஓரங்கட்டி வைத்துவிட்டு அந்த சத்தியமூர்த்தியை போனால் போகிறது என்று துணை அமைப்பாளராக நியமித்த உதயநிதி, மாசெ நந்தகுமாரின் சிபாரிசான ராஜமார்த்தாண்டனை அமைப்பாளராக நியமித்தார்.
இதற்குப் பிறகு வேலூர் மாவட்ட இளைஞரணி நிர்வாகிகள் மாவட்ட செயலாளர் நந்தகுமாரை சந்தித்து வாழ்த்து பெறுவதற்காக சென்றுள்ளனர். அப்போது துணை அமைப்பாளரான சத்தியமூர்த்தியும் சென்றுள்ளார். அவரைப் பார்த்த நந்தகுமார், ‘நீங்கள் யார் மூலமாக பதவிக்கு வந்தீர்களோ அவர்களுக்கே போய் சால்வை போடுங்கள்’ என்று சொல்லி அனுப்பி வைத்து விட்டார்.
ஸ்டாலினுக்கே போன் போட்ட காந்தி
ராணிப்பேட்டை மாவட்ட இளைஞரணி அமைப்பாளராக ஆற்காடு எம்.எல்.ஏ. ஈஸ்வரப்பன் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவரது நியமன அறிவிப்பை பார்த்து ராணிப்பேட்டை மாவட்ட செயலாளரும் அமைச்சருமான காந்தி டென்ஷன் ஆகிவிட்டார். திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலினுடைய உதவியாளர் தினேஷுக்கு போன் செய்த அமைச்சர் காந்தி, ‘இளைஞர் அணி அமைப்பாளர் விவகாரம் தொடர்பாக முதல்வரிடம் பேச வேண்டும்’ என்று கூறியிருக்கிறார். அப்போது உடனடியாக ஸ்டாலினிடம் தெரிவிக்க முடியவில்லை என்றாலும் பிறகு தனது வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார். ஈஸ்வரப்பனை இளைஞர் அணி அமைப்பாளராக நியமித்ததில் அமைச்சர் காந்திக்கு என்ன வருத்தம்?
அவர் தனது இரண்டாவது மகன் சந்தோஷ் காந்தியை மாவட்ட இளைஞரணி அமைப்பாளராக பரிந்துரைத்திருந்தார். ஆனால் உதயநிதி அதை ஏற்கவில்லை.
அப்பா மாவட்ட செயலாளர் மற்றும் அமைச்சர், மூத்த மகன் வினோத் காந்தி சுற்றுச்சூழல் அணி மாநில நிர்வாகி, சந்தோஷ் காந்தி மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் என்று குடும்பத்துக்கே பதவிகள் குவியக் கூடாது என கருதிய உதயநிதி அமைச்சர் காந்தியின் சிபாரிசை தள்ளி வைத்து விட்டார். இதனால் தான் முதல்வருக்கே போன் செய்யும் அளவுக்கு போய்விட்டார் அமைச்சர் காந்தி.
சேலம் முட்டல் மோதல்
சேலம் மேற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளராக மணிகண்டனே மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கும் மாவட்ட செயலாளர் செல்வகணபதிக்கும் இடையே நீண்ட நாட்களாகவே உரசல் இருந்து வந்தது. மணிகண்டனுக்கு வாழ்த்து போஸ்டர்களை ஒட்டிய இளைஞர் அணியினர் அதில் மாவட்டச் செயலாளர் செல்வகணபதி படம் இடம்பெறாமல் பார்த்துக் கொண்டனர்.
கோபப்பட்ட தா.மோ. அன்பரசன்
தாம்பரம் மாநகர இளைஞரணி அமைப்பாளர்கள், காஞ்சி மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்கள் வாழ்த்து பெறுவதற்காக அமைச்சரும் மாவட்ட செயலாளருமான தா.மோ அன்பரசனிடம் சென்றுள்ளனர். தான் பரிந்துரைத்த பலரும் பட்டியலில் இல்லை என்பதால் டென்ஷனான அன்பரசன், ‘இளைஞர் அணி போஸ்ட் கிடைத்துவிட்டது என்பதற்காக ஓவராக ஆடக்கூடாது. அப்புறம் அடிப்படை உறுப்பினரே இல்லாமல் போய்விடும்’ என்று எச்சரித்து அனுப்பி இருக்கிறார்.
இவ்வாறு தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களிலும் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் இந்த முறை இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர் நியமனங்களில் வருத்தத்திலும் கோபத்திலும் இருக்கிறார்கள்.
ஆனால் உதயநிதி திட்டமிட்டே இதை செய்திருக்கிறார். இப்போது இளைஞர் அணி என்னும் நாற்றங்காலுக்குள் தனது முழுமையான ஆதரவு பெற்ற நிர்வாகிகளை நாற்றாக வளர்த்து பிறகு அவர்களை திமுகவில் மாவட்ட செயலாளர் என்னும் பயிர்களாக வளர்த்தெடுப்பது தான் உதயநிதியின் திட்டம்.
அதனால் தான் மாவட்ட செயலாளர்கள், அமைச்சர்கள் ஏன் பொதுச் செயலாளர் துரைமுருகன் சிபாரிசை கூட தூக்கி எறியும் நிலைக்கு சென்று இருக்கிறார் உதயநிதி” என்ற மெசேஜ்க்கு சென்ட் கொடுத்து ஆஃப்லைன் போனது வாட்ஸ் அப்.
நீதிமன்றத்தில் மின்னம்பலம் வீடியோ ஆதாரம்… பறிபோன பன்னீர் மகன் பதவி!
மகளிர் உரிமை தொகை ரூ.1000: யாருக்கு உண்டு? யாருக்கு கிடையாது?