கள்ளக்குறிச்சியில் கலவரம் நடந்த இடங்கள், பள்ளி ஆகியவற்றைப் பார்வையிடத் தமிழக அமைச்சர்கள் குழு இன்று (ஜூலை 18) முற்பகல் புறப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அருகே உள்ள கனியமூரில் உள்ள சக்தி மேல்நிலைப் பள்ளியில் நடந்த போராட்டம் நேற்று கலவரமாக மாறியது. பள்ளி மாணவி ஸ்ரீமதிக்கு நீதி வேண்டும் என்று நடந்த போராட்டத்தில் கலவரக்காரர்கள் சம்பந்தப்பட்ட பள்ளி வாகனம் மற்றும் உடைமைகளை தீ வைத்துக் கொளுத்தினர்.
தமிழகம் முழுவதும் இந்த சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில் உரிய விசாரணை நடத்த முதல்வர் ஸ்டாலின் டிஜிபி சைலேந்திரபாபுக்கு உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து கள்ளக்குறிச்சி பொறுப்பு மாவட்ட அமைச்சரும், நெடுஞ்சாலைத் துறை மற்றும் பொதுப்பணித் துறை அமைச்சருமான எ.வ.வேலுவிடம் இன்று காலை முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தியுள்ளார். குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களித்துவிட்டு கள்ளக்குறிச்சிக்குச் சென்று ஆய்வு செய்யுமாறு கூறியுள்ளார்.
அதன்படி அமைச்சர்கள் எ.வ.வேலு, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன் ஆகியோர் கள்ளக்குறிச்சி விரைந்துள்ளனர். தமிழக சட்டப்பேரவையில் இன்று குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெற்றது. வாக்கு மையத்திற்குச் சென்று வாக்களித்த அமைச்சர்கள் முதல்வர் உத்தரவின் பேரில் அங்கிருந்து கள்ளக்குறிச்சி புறப்பட்டனர்.
பிற்பகல் ஒரு மணியளவில் விழுப்புரம் கடந்த அவர்கள் மதிய உணவு முடித்துவிட்டு 2 மணிக்கு பிறகு கள்ளக்குறிச்சியை அடைவுள்ளனர்.