வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை தொடர்ந்த வழக்கு செப்டம்பர் 26-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
2016-2021 காலகட்டத்தில் அதிமுக ஆட்சியில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த சி.விஜயபாஸ்கர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தாக லஞ்ச ஒழிப்புத்துறை 2021-ஆம் ஆண்டு அவருக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தியது.
இந்த சோதனையில் கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில் அக்டோபர் 17-ஆம் தேதி விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா மீது வருமானத்திற்கு அதிகமாக ரூ.35.79 கோடி சொத்து சேர்த்தாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கின் விசாரணை புதுக்கோட்டை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி இமயவரம்பன், காவல் ஆய்வாளர் ஜவஹர் ஆகியோர் தலைமையிலான லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா மீது 216 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கில் ஆகஸ்ட் 29-ஆம் தேதி (இன்று) நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகுமாறு விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யாவிற்கு புதுக்கோட்டை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்தநிலையில் விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா இருவரும் புதுக்கோட்டை நீதிமன்றத்தில் நீதிபதி பூரண ஜெயந்தி முன்பாக இன்று ஆஜரானார்கள். இதனை தொடர்ந்து வழக்கு விசாரணையை செப்டம்பர் 26-ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி அன்றைய தினம் மீண்டும் விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா ஆஜராக உத்தரவிட்டார்.
செல்வம்
விஜயபாஸ்கர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு ஒத்திவைப்பு!
தமிழ் அறிஞர்கள் விருது: விண்ணப்பிப்பது எப்படி?