தமிழநாட்டுக்கு புதியதாக ஒரு ஜோசியர் கிடைத்திருக்கிறார் என்று எடப்பாடி பழனிசாமியை அமைச்சர் எ.வ.வேலு கிண்டலடித்துள்ளார்.
திருவண்ணாமலை வ உ சி நகர் பகுதியில் மண் சரிவால் வீடுகளை இழந்த 20 குடும்பங்களுக்கு தனது குடும்ப அறக்கட்டளை சார்பில் சொந்த நிதியில் நல்லவன் பாளையம் பஞ்சாயத்து சமுத்திரம் பகுதியில் தற்காலிக வீடுகளை நெடுஞ்சாலைகள் மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு அமைத்து கொடுத்தார்.
இந்த வீடுகளை இன்று (ஜனவரி 20) பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கிய அமைச்சர் வேலு பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது ‘அதிமுக ஆட்சிக் காலத்தில் தமிழகத்தின் நிதிநிலை சரியாக இருந்ததாகவும், கடன் சுமை குறைவாக இருந்ததாகவும் அதிமுக பொதுச்செயலாளார் எடப்பாடி பழனிசாமி கூறியிருக்கிறாரே என்ற கேள்விக்கு அவர்,
“இதற்கு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கமளித்துவிட்டார். அரசாங்கம் கடன் வாங்க வேண்டும் என்று சொன்னால், அதற்கு ஒரு வரையறை இருக்கிறது. அதை மீறி வாங்கினால் ஓ.டி (ஓவர் டிராப்ஃட்) என்று அர்த்தம்.

ஓ.டி அதிகமானால் ஒன்றிய அரசின் சட்டதிட்டத்துக்கு உட்பட்டு ஆட்சியையே கலைக்கலாம். ஓவர் டிராப்ஃட், சட்டம் ஒழுங்கு பிரச்சினை காரணமாக முந்தைய காலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டிருக்கிறது.
ஆனால் இப்போது உச்ச நீதிமன்ற தீர்ப்பு காரணமாக அது முடியாது. நாங்கள் மக்கள் பயன்பாட்டுக்காகத்தான் கடன் வாங்கினோம். 32 அமைச்சர்களுக்காக கடன் வாங்கவில்லை.
தமிழக பொருளாதாரம், குடும்ப பொருளாதாரம் உயர வேண்டும். அதுதான் திராவிட மாடல் அரசின் நோக்கம். நாங்கள் தவறான வழியில் செலவு செய்யவில்லை” என்றார் அமைச்சர் வேலு.
திமுக ஆட்சிக்கு இன்னும் 10 அமாவாசைதான் உள்ளது என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளாரே என்ற கேள்விக்கு, “அவர் இவ்வளவு பெரிய ஜோசியராக எப்போது மாறினார் என்று எனக்குத் தெரியவில்லை. ஜனநாயக நாட்டில் மக்கள் யாரை ஆதரிக்கிறார்களோ அவர்கள் தான் ஆட்சிக்கு வருவார்கள்.

2026 மே மாதம் வரை ஆட்சி நடத்த அதிகாரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. வழக்கமாக மார்ச் மாதத்தில் தான் தேர்தல் அறிவிப்பார்கள். அப்படி பார்த்தால் ஓராண்டுக்கு மேலாகவே ஆட்சியில் இருப்போம். 10 மாதம் தான் ஆட்சியில் இருப்பார்கள் என்று அவர் ஜோசியம் சொன்னதே தப்பு. தமிழ்நாட்டுக்கு இப்படியொரு புதிய ஜோசியர் கிடைத்திருக்கிறார் என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது” என்று விமர்சித்தார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
டெல்டா விவசாயிகளுக்காக பெ.சண்முகம் முக்கிய கோரிக்கை!
கதிர் ஆனந்தின் அடுத்த திட்டம்! துரைமுருகன் கூப்பிட்டும் வராத நந்தகுமார் – பிறந்தநாள் பாலிடிக்ஸ்!