“கள்ளக்குறிச்சி கலவரத்தில் ஒரு தனி டீம் அமைத்து, தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர்” என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
புதிய குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று (ஜூலை 18) சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் எ.வ.வேலு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கணேசன் ஆகியோர் வாக்களித்தனர். பின்னர், அங்கிருந்து கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கலவரம் நடந்த கனியாமூர் தனியார் பள்ளிக்குப் புறப்பட்டுச் சென்றனர். அங்கு தீக்கிரைக்கு இரையான வாகனங்களையும், மாணவ மாணவியரின் சான்றிதழ்களையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். அதனை தொடர்ந்து கலவரத்தில் காயமடைந்து கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள காவலர்களையும் அமைச்சர்கள் சந்தித்து ஆறுதல் கூறினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எ.வ. வேலு, “ஆர்ப்பாட்டம், மறியல், உண்ணாவிரதம் ஆகியன நம் ஜனநாயகத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதிலும் நம் தமிழகத்தில், ஜனநாயக ரீதியாக போராடுபவர்களை வரவேற்கக்கூடிய ஓர் இயக்கம்தான் நம் திமுக. அந்த அடிப்படையில் அவர்கள் ஆர்ப்பாட்டம் செய்திருக்கலாம். ஆனால், அப்படி செய்யவில்லை. நியாயம் கேட்பவர்கள் மாணவர்களின் சான்றிதழ்களையா கொளுத்துவார்கள்? இவர்கள் எல்லாம் மாணவர்கள் என்ற பெயரில் உள்ளே நுழைந்த விஷமிகள். விரும்பத்தகாதவர்கள். சில அமைப்புகள் என்ற பெயரில் இந்த அரசாங்கத்துக்கு எதிராக கெட்டபெயரை உருவாக்க வேண்டும் என்ற அடிப்படையில் இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
4 மருத்துவர்கள் முன்பும் அந்த பெற்றோரின் முன்பும், அந்த மாணவிக்கு மீண்டும் உடற்கூறாய்வு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. உடற்கூறாய்வுக்குப் பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை தொடரும். சட்டத்துக்கு முன்பு அனைவரும் சமம். அதிலும் நம் முதல்வர் சட்டத்தை மதிப்பவர். முறைப்படி என்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமோ, அவை கட்டாயம் எடுக்கப்படும். இதில் யார் தவறு செய்திருந்தாலும் அவர்கள் சட்டத்தின் முன்பு நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவர். மேலும், இந்த கலவரத்துக்கு தூண்டுகோலாய் இருந்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார். ஆக, முதல்வர் இதுகுறித்து இன்று ஆலோசனை நடத்தி ஒரு டீமை நியமித்து சட்டத்தின் முன் அனைவருக்கும் தண்டனையை வாங்கித் தருவார்.
ஆனால், இந்த வன்முறையில் பொதுமக்களுக்கு எந்த அசெளகரியமும் நிகழவில்லை. அதை, சிறப்பாக நம் காவல் துறையினர் கையாண்டிருக்கின்றனர். இதிலிருந்தே நம் முதல்வர் காவல் துறையை எப்படிக் கட்டுப்பாட்டுடன் நடத்துகிறார் என்று தெரிந்துகொள்ள வேண்டும். நம் தமிழகத்தில் பல சம்பவங்களைப் பார்த்திருக்கிறோம். எதுவும் நடைபெறாதபோது ஃபயரிங், ஷூட்டிங் நடைபெற்றது என பத்திரிக்கைகளில் படித்துவருகிறோம். ஆனால், இப்படிப்பட்ட நிலையில்கூட, காவல் துறையினர் சிறப்பாகச் செயல்பட்டுள்ளனர்.
இந்தப் பள்ளியிலேயே தொடர்ந்து படிக்க சில மாணவ மாணவிகள் விருப்பம் தெரிவித்துள்ளனர். அவர்களின் கருத்தை முதல்வரிடம் எடுத்துச் சொல்வோம். அதுபோல், இந்த வன்முறையில் பள்ளிக்கு சொந்தமான பல கோடி ரூபாய் சொத்துகள் சேதமாகியுள்ளன. அவற்றை அந்த பள்ளியின் அறக்கட்டளை நிர்வாகமே சரிசெய்துகொள்வதாக கூறியிருக்கின்றனர். அதையும் முதல்வரிடம் எடுத்துச் செல்வோம். ஆக, இந்த பிரச்சினையில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விஷயத்தில், எடப்பாடி பழனிசாமி, காவல் துறையைப் பற்றி பேசியிருப்பதைக் கேட்கும்போது சிரிப்புதான் வருகிறது. தூத்துக்குடியில் 13 பேரை சுட்டு வீழ்த்தியது அவர்களுடைய ஆட்சி. அதனால், அவர் சொல்வது இது கேலிக்குரியது” என்றார்.
ஜெ.பிரகாஷ்