“யாரையும் தடுக்க வேண்டும் என்ற எண்ணம் திமுக தலைமைக்கு இல்லை” என்று நடிகர் விஜய்யின் அரசியல் பயணம் குறித்து அமைச்சர் எ.வ.வேலு கூறியுள்ளார்.
பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு தென்மாவட்டங்களில் சாலை மற்றும் மேம்பால பணிகளை ஆய்வு செய்து வருகிறார்.
நேற்று கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் ஆய்வு செய்த அவர், இன்று (செப்டம்பர் 5) மதுரை, கோரிப்பாளையம் மேம்பாலம் கட்டும் பணி, அப்பல்லோ சந்திப்பில் நடைபெறும் மேம்பாலம் கட்டும் பணி ஆகியவற்றை ஆய்வு செய்தார்.
பின்னர் ஊடகங்களைச் சந்தித்த அவரிடம் விஜய்யின் கட்சியையும், அவரது படத்தையும் தடுப்பதற்கு முயற்சி செய்கிறார்கள் என்று செய்தியாளர் கேட்க,
இதற்கு அமைச்சர் வேலு, “அதெல்லாம் தவறான செய்திகள். அரசியலுக்காக எதையாவது வாரி விட்டுவிட்டு போய்விட முடியாது. அவர் கட்சி ஆரம்பிக்கிறார் என்று தலைவரிடம் சொன்ன போதே வாழ்த்து கூறினார். உதயநிதி கூட, ‘என் நண்பர் கட்சி ஆரம்பிப்பதற்கு வாழ்த்துகள்’ என சொன்னார்.
இந்த மன பக்குவத்தில் தான் திமுக இருக்கிறது. அதை தடுத்து நிறுத்த வேண்டிய நோக்கம் திமுகவுக்கு கிடையாது. எங்களது நோக்கம் தமிழர்களின் வளர்ச்சி மட்டும் தான். ஆட்சிக்காக தொடங்கப்பட்ட இயக்கம் கிடையாது.
கட்சி ஆரம்பிப்பது ஜனநாயக உரிமை. யார் வேண்டுமானாலும் கட்சித் தொடங்கலாம். அதை தடுக்க வேண்டும் என்ற எண்ணம் இம்மியளவும் இந்த இயக்கத்தின் தலைமைக்கு கிடையாது.
திமுக 75 ஆண்டுகளை கடந்து பவள விழா நடத்தவுள்ளது. நாங்கள் யாரை கண்டும் பொறாமைபடவும் மாட்டோம். தடுக்கவும் மாட்டோம். வாழ்த்துதான் தெரிவிப்போம்” என்று கூறினார்.
நடிகர்கள் நாடாளுவார்களா என்ற கேள்விக்கு, “நான் 8 முறை தேர்தலில் நின்றிருக்கிறேன். 13 வயதில் ஒரு பொதுக்கூட்டத்தில் பெரியாரை பார்த்தேன். அந்த உணர்வோடு இன்று வரை செயல்பட்டுக்கொண்டிருக்கிறேன்.
மக்களின் பிரச்சினைகளுக்கு நாம் எந்தளவுக்கு ஈடுகொடுக்கிறோமோ… அதற்கு தீர்வு காண எந்த அளவுக்கு முயற்சி செய்கிறோமோ… அவர்களை தான் மக்கள் ஆதரிக்கிறார்கள்.
எம்.ஜீ.ஆர் ஒரு கட்சியை ஆரம்பித்தார். அதில் வெற்றியும் கண்டார். அதை மறுக்க முடியாது. தமிழ்நாட்டில் திமுகவில் மூன்று முறை பொருளாளராக இருந்தவர், உதயசூரியனில் நின்று வென்றவர், 40 ஆண்டு காலம் கலைஞருக்கு நண்பராக இருந்தவர். அவர் தனியே சென்று ஒரு கட்சி ஆரம்பித்தார். அவரை அரசியல்வாதியாகத்தான் மக்கள் பார்த்தார்களே ஒழிய நீங்கள் நினைப்பது போல் இல்லை.
பல நடிகர்களும் கட்சித் தொடங்கியிருக்கிறார்கள். விஜய்காந்த் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை எட்டிப்பிடித்தார்.
மக்களை எந்த அளவுக்கு நேசிக்கிறோமோ, அதுதான் தேர்தலில் எடுபடும். இதை எனது அனுபவத்தில் இருந்து கூறுகிறேன்” என்று கூறினார்.
முன்னதாக அமைச்சர் தா.மோ.அன்பரசன், ”தனது ரசிகர்களுக்கு இலவசமாக டிக்கெட் கொடுக்காமல் 2000 ரூபாய்க்கு விற்பவர்கள் தான் நாட்டை காப்பாற்ற போகிறார்களா?” என்று நடிகர் விஜய் குறித்து சூசகமாக பேசியிருந்தார்.
விஜய்யின் தமிழக வெற்றிக் கழக மாநாட்டுக்கு தேதி அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், அதற்கு காவல்துறை இன்னும் அனுமதி வழங்கவில்லை.
விஜய்யை பார்த்து ஏன் பயப்படுகிறீர்கள்… யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் என்று முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியிருந்தார்.
இந்தசூழலில், யாரையும் தடுக்க வேண்டுமென்ற எண்ணம் திமுகவுக்கு இல்லை என்று அமைச்சர் வேலு தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
பிரியா
கோட் படம்: விஜய்க்கு முதல் ஆளாக வாழ்த்து சொன்ன அஜித்
தி கோட்: ராஜபாட்டை காட்டிய ‘டபுள் ஆக்ஷன்’ தமிழ் படங்கள்! இரட்டை வேடத்தில் அசத்தும் விஜய்