சென்னை திருவொற்றியூர் வெள்ளையன் செட்டியார் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விழாவில் 2,099 பயனாளிகளுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வீட்டு மனைப் பட்டாக்களை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, “கடந்த 2024 மக்களவைத் தேர்தலில் நாற்பதுக்கு நாற்பது என 100 சதவீத வெற்றியை தமிழ்நாட்டு மக்கள் திமுகவிற்கு அளித்திருக்கிறார்கள்.
மக்களவைத் தேர்தலில் திமுகவிற்கு சென்னை மக்கள் எப்படி வாக்களித்துள்ளார்கள் என்று ஓர் ஆய்வு செய்யப்பட்டது. அந்த ஆய்வில் அடித்தட்டு மக்கள், நடுத்தரவர்க்க மக்கள் வாழ்கின்ற பகுதிகளில் திமுகவிற்கு மிகப்பெரிய அளவில் வாக்குகள் கிடைத்திருப்பதாகத் தெரியவந்தது.
கலைஞருடைய தலைமையிலான அரசாக இருந்தாலும் முதலமைச்சர் ஸ்டாலினுடைய அரசாக இருந்தாலும் எளிய அடித்தட்டு மக்களுடைய நடுத்தர மக்களுடைய முன்னேற்றத்திற்காக பல்வேறு நலத்திட்டங்களைத் தருகின்ற அரசாகவே செயல்பட்டு வருகிறது.
கலைஞர் ஆட்சிக் காலத்திலிருந்து உண்ண உணவு, உடுத்த உடை, இருக்க இடம் ஆகிய அடிப்படைத் தேவைகள் பார்த்துப் பார்த்து நிறைவேற்றப்பட்டுள்ளன. எல்லோருக்கும் வீடு கிடைக்க வேண்டுமென கலைஞர் கனவு இல்லம் திட்டத்தை இந்த ஆண்டு ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்.
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மற்றும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் சார்பாகத் தொடர்ந்து அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகின்றது. சென்ற ஜூலை மாதம் கூட 925 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட 5,600 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை ஸ்டாலின் திறந்து வைத்தார்.
அதுமட்டுமல்லாமல் தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக ஆன்லைன் மூலம் கட்டட அனுமதிகளை உடனடியாக வழங்கிடும் திட்டத்தையும் தொடங்கி வைத்தார். இந்த வட சென்னை பகுதியுடைய நலனைக் கருத்தில் கொண்டு ரூபாய் 4,000 கோடி மதிப்பில் வடசென்னை வளர்ச்சித் திட்டத்தை முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் பல்வேறு இடங்களில் அடுக்குமாடி குடியிருப்புகள் உருவாக்கப்பட்டு மக்களுக்கு வழங்கப்பட உள்ளன. திமுக அரசு இன்றைக்கு எண்ணற்ற திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.
மகளிர்க்குக் கட்டணமில்லா பேருந்து பயணத்திட்டம், இதுவரை 520 கோடி பயணங்களை மகளிர் மேற்கொண்டு இருக்கிறார்கள். ஒவ்வொரு மகளிரும் கிட்டத்தட்ட மாதம் ஆயிரம் ரூபாய் இந்த விடியல் பயணம் மூலமாகச் சேமிக்கின்றார்கள்.
மகளிரின் சுமையைக் குறைக்கின்ற வகையில் காலை உணவுத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டம் மூலம் ஒவ்வொரு நாளும் 20 லட்சம் குழந்தைகள் பயனடைகிறார்கள். இந்தத் திட்டம் ஊரகப் பகுதிகளில் இருக்கிற அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
புதுமைப்பெண், தமிழ்ப் புதல்வன் திட்டங்களின் மூலம் கல்லூரிக்குச் செல்லும் 6.25 லட்சம் மாணவ மாணவியர் மாதம் ஆயிரம் ரூபாய் கல்வி ஊக்கத்தொகை பெறுகிறார்கள். 1 கோடியே 15 லட்சம் மகளிர் மாதம் 1,000 வீதம் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெற்று வருகின்றார்கள்.
இப்படி திமுக அரசு தமிழ்நாட்டையும் தமிழ்நாட்டு மக்களுடைய வளர்ச்சியையும் கருதி எண்ணற்ற திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார்கள்.
இந்தத் திட்டங்களால் தான் தமிழ்நாடு அரசு இன்றைக்கு வறுமை ஒழிப்பு, மகளிர் முன்னேற்றம், தரமான கல்வி, சுகாதாரம் ஆகிய துறைகளில் இந்தியாவிலே முதலிடம் பெற்றுள்ளது. தமிழ்நாடு அரசினுடைய சாதனைகளில் ஒன்றாக, இன்றைக்கு உங்களுக்கு எல்லாம் வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டிருக்கிறது” என்று தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…