டெல்லி செல்லும் உதயநிதி ஸ்டாலின்: பிரதமருடன் சந்திப்பு!
2 நாள் பயணமாக டெல்லி செல்லும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை(பிப்ரவரி 28) காலை பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கவுள்ளார்.
தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பதவியேற்றார். அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு விளையாட்டுத் துறையை மேம்படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
பல்வேறு மாநிலங்களுக்கு பயணம் மேற்கொண்டு விளையாட்டுப் போட்டிகளையும் பார்வையிட்டு, அங்குப் போட்டியில் பங்கேற்கும் தமிழ்நாட்டு விளையாட்டு வீரர்களை சந்தித்தும் வருகிறார்.
உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக இன்று டெல்லி புறப்பட்டு சென்றார். டெல்லியில், நாளை(பிப்ரவரி 28) முன்னாள் தமிழ்நாடு ஆளுநரும், தற்போதைய பஞ்சாப் மாநில ஆளுநருமான பன்வாரிலால் புரோகித் இல்ல விழா நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்க உள்ளார்.
தொடர்ந்து துறைரீதியான கோரிக்கைகள் தொடர்பாக மத்திய விளையாட்டுத் துறை அமைச்சரை சந்தித்துப் பேசத்திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சந்திப்பில் சர்வதேச அளவிலான போட்டிகளைத் தமிழ்நாட்டில் நடத்துவதற்கு மத்திய அரசிடம் கோரிக்கை வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாளை பிரதமர் நரேந்திர மோடியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மரியாதை நிமித்தமாக சந்திக்கவும் நேரம் கேட்கப்பட்டிருந்தது.
இதற்காக காலை 10.30மணி முதல் 11மணி வரை பிரதமரை சந்திக்க உதயநிதிக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதாக திமுக தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதுமட்டுமில்லாமல் உதயநிதி ஸ்டாலின், ஜே.என்.யூ., பல்கலைக்கழகத்தில் ஏபிவிபி அமைப்பினர் நடத்திய தாக்குதலில் காயம் அடைந்த தமிழ்நாடு மாணவர்களையும் நேரில் சந்தித்து நலம் விசாரிப்பார் என்றும்,
மார்ச் 1ஆம்தேதி நடைபெறும் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் தொடர்பான அழைப்பிதழ்களையும் டெல்லியில் சில முக்கிய தலைவர்களிடம் அவர் நேரில் அளிப்பார் என்றும் கூறப்படுகிறது.
இந்த பணிகளை எல்லாம் முடித்துக் கொண்டு நாளை இரவு டெல்லியில் இருந்து சென்னை திரும்புகிறார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
மோனிஷா
கை சின்னத்துக்கு 80 சதவிகித வாக்குகள் கிடைக்கும்: ஈவிகேஎஸ் இளங்கோவன்
ஈரோடு கிழக்கு : வாக்கு மை அழிகிறது – அதிமுக புகார்!