திமுக இளைஞரணி செயலாளரும் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் இன்று டிசம்பர் 14ஆம் தேதி காலை 9.30 க்கு அமைச்சராக பதவி ஏற்கிறார்.
அவருக்கு ஆளுநர் ஆர்என் ரவி பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார். ஆளுநர் மாளிகை தர்பார் ஹால் பகுதியில் நடைபெற இருக்கும் இந்தப் பதவியேற்பு விழாவுக்கு மிக மிக குறிப்பிட்டவர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
400 பேர் வரை மட்டுமே பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க இருப்பதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
திமுக அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முதல்வர் ஸ்டாலின் குடும்பத்தினர் மற்றும் உதயநிதியின் நெருங்கிய நண்பர்கள் ஐஏஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட மிக மிக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.
திமுக இளைஞரணி மாநில, மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட பலருக்கும் ஆளுநர் மாளிகையில் நடைபெறும் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ள பாஸ் கிடைக்கவில்லை.
ஆளுநர் மாளிகையில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் அங்கிருந்து வெளியே வருவதற்கு கடுமையான கட்டுப்பாடுகள் இருக்கும் என்பதால் ஆளுநர் மாளிகை வாசலில் இருந்து உதயநிதியை வரவேற்க பெரும் ஏற்பாடுகளை திமுக இளைஞரணி சென்னை மாவட்ட செயலாளர்களும் செய்திருக்கிறார்கள்.
அதே நேரம் பொது மக்களுக்கு இடைஞ்சல் ஏற்படுத்தும் வகையில்
போக்குவரத்து நெருக்கடி ஏற்படும்படி ஆடம்பர ஏற்பாடுகள் செய்ய வேண்டாம் என உதயநிதி நேற்று இரவு இளைஞரணி மாநில நிர்வாகிகளிடமும் சென்னை மாவட்ட செயலாளர்களிடமும் போன் போட்டு கூறியிருக்கிறார்.
ஆனாலும் அமைச்சர் உதயநிதியை வரவேற்க மாநிலம் முழுவதும் இருந்து இளைஞரணி நிர்வாகிகளும் சென்னை சுற்றுப்புற மாவட்டங்களில் இருந்து தொண்டர்களும் திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
வேந்தன்