அவை மரபை மீறி ஆளுநர் ஆர்.என்.ரவி நடந்து கொண்டதாக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு குற்றம் சாட்டியுள்ளார்.
சட்டப்பேரவைக்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் தங்கம் தென்னரசு,
“ஆளுநரின் செயல்பாடுகளில் மாறுபட்ட கருத்துகளை கொண்டிருந்தாலும், இன்று ஆளுநர் உரையை துவங்குவதற்கு முன்பு எந்த எதிர்ப்பையும் தெரிவிக்காமல் ஜனநாயக ரீதியில் ஆளுநருக்கு உரிய மரியாதையை அரசின் சார்பில் அளித்தோம்.
ஆனால் ஆளுநர் அரசியல் சாசன விதிகளுக்கு முரணாக இன்று உரையை வாசித்திருக்கிறார்.
கடந்த 5 ஆம் தேதி வரைவு உரை ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டு 7 ஆம் தேதி அதற்கு அவர் ஒப்புதல் அளித்தார்.
ஆளுநர் உரை என்பது அரசின் கொள்கையை எடுத்துச் செல்லக்கூடிய உரை. அதில் ஆளுநர் தனது சொந்த விறுப்பு, வெறுப்புகளை காட்டக்கூடாது.
ஒன்றிய அரசு தயாரித்து கொடுக்கும் உரையை குடியரசுத் தலைவரே மாற்றிப் படிக்காதபோது ஆளுநரின் இந்த செயல் ஏற்புடையதல்ல.
இந்த மாநிலத்தை இந்தியாவில் தலைசிறந்த மாநிலமாக, சமூக, பொருளாதாரம் என அத்தனை குறியீடுகளிலும் நவீன தமிழகமாக உருவாக்கிய பெரியார், அண்ணா, கலைஞர், காமராசர் மற்றும் சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கர் பெயரை கூட சொல்ல மறுத்து ஆளுநர் சென்றிருக்கிறார்.
அரசின் கொள்கைகளாக சுட்டிக்காட்டப்பட்டிருக்கும், சமூக நீதி, சமத்துவம், பெண்ணடிமை, மத நல்லிணக்கம் உள்ளிட்ட வார்த்தைகளை ஆளுநர் தவிர்த்திருக்கிறார்.
அதுமட்டுமல்ல தேசிய கீதத்திற்கு கூட மரியாதை தராமல் அதற்கு முன்பே ஆளுநர் அவையை விட்டு வெளியேறி இருக்கிறார்.
அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு நடக்கக்கூடிய நடவடிக்கைகளில் ஆளுநர் இதுபோன்று நடந்து கொள்வது அரசியல் மாண்புகளுக்கு எதிரானது.
அதேபோன்று அதிமுகவும் வெளியேறி அநாகரீகமான செயலை செய்திருக்கிறது. பேரறிஞர் அண்ணாவால் தமிழ்நாடு என்று வைக்கப்பட்டதை மாற்றும் ஆளுநரின் பேச்சுக்கு கூட கண்டனம் தெரிவிக்காமல் அதிமுக அடிமைத்தனமாக இருப்பது வெட்கக்கேடானது” என்று கூறியுள்ளார்.
கலை.ரா
“மரபை மீறிவிட்டார் முதல்வர்”: எடப்பாடி பரபரப்பு குற்றச்சாட்டு!
தேசிய கீதத்தை அவமதித்த ஆளுநர்!