போக்குவரத்து தொழிற்சங்கங்கள் போராட்டம்: அமைச்சர் சிவசங்கர் வேண்டுகோள்!

Published On:

| By Selvam

minister sivasankar transport workers protest

minister sivasankar transport workers protest

போக்குவரத்து தொழிற்சங்கங்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு மீண்டும் பணிக்கு திரும்ப வேண்டும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் இன்று (ஜனவரி 9) வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு, அண்ணா உள்ளிட்ட போக்குவரத்து தொழிற்சங்கங்கள் இன்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில், சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் இன்று ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சிவசங்கர், “தமிழகம் முழுவதும் அனைத்து பேருந்துகளும் முழுமையாக இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் எந்தவித இடையூறுமின்றி பயணம் செய்து வருகிறார்கள்.

போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வலியுறுத்திய 6 கோரிக்கைகளில், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், கருணை அடிப்படையில் பணி வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகள் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதிமுக ஆட்சிக்காலத்தில் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு நிராகரிக்கப்பட்ட கோரிக்கைகளை, ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையில் முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றி கொடுத்தார்.

ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு அகவிலைப்படி வழங்க வேண்டும் என்பதில் எங்களுக்கு கருத்து வேறுபாடு இல்லை. ஆனால், நிதிநெருக்கடியால் வழங்க முடியாத சூழல் உள்ளது. அதிமுக ஆட்சிக்காலத்தில் தான் அகவிலைப்படி நிறுத்தப்பட்டது. அதனால் போக்குவரத்து தொழிலாளர்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு கால அவகாசம் வேண்டும். தமிழகத்தில் 95 சதவிகிதத்திற்கும் அதிகமாக பேருந்துகள் இயக்கப்படுகிறது.

அதிமுக தொழிற்சங்கத்தோடு இணைந்து மற்ற தொழிற்சங்கங்கங்கள் போராட்டம் நடத்துவது கண்டிக்கத்தக்கது. அரசியல் காரணங்களுக்காக போராட்டம் நடத்துவது திசைதிருப்பும் செயல்.

முதல்வர் ஸ்டாலின் உத்தரவுப்படி போக்குவரத்து தொழிலாளர்கள் பேருந்துகளை இயக்கி வருகிறார்கள். போராட்டத்தை அறிவித்த கூட்டமைப்பின் தொழிலாளர்களே பேருந்துகளை இயக்குகிறார்கள்.

தொழிற்சங்கங்கள் இந்த போராட்டத்தை கையிலெடுத்து விட்டதால், திரும்ப பெற முடியாமல் தவிக்கிறார்கள். போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த தயாரக இருக்கிறோம்.

போக்குவரத்து தொழிலாளர்கள் தன்னலமற்று சேவை செய்பவர்கள். தீபாவளி, பொங்கல் பண்டிகைகளின் போது தங்கள் இல்ல கொண்டாட்டங்களை விட்டு பணி செய்பவர்கள். அவர்களுக்கு என்ன பிரச்சனைகள் இருந்தாலும், மனம் கோணாமல் பேருந்தை இயக்குவார்கள்.

அதனால் தான் தமிழகத்தில் ஒரு நாளைக்கு 1.78 கோடி பேர் பயணம் செய்கிறார்கள். இந்தியாவில் உள்ள எந்த மாநிலங்களிலும் இதுபோன்ற போக்குவரத்து கட்டமைப்பு இல்லை. தமிழகம், கேரளாவில் மட்டும் தான் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்கப்படுகிறது.

எனவே தொழிலாளர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு மீண்டும் பணிக்கு திரும்ப வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

சென்னையில் வருமான வரித்துறை சோதனை!

மதுரை மாட்டுத்தாவணி: எந்த வசதியும் இல்லாமல் கட்டணம் மட்டும் வசூல்!

minister sivasankar transport workers protest

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel