அதிமுகவுக்குள் பல்வேறு குழப்பங்கள் நீடிக்கும் சூழலில் கட்சியை தக்கவைப்பதற்காக எடப்பாடி பழனிசாமி திமுக மீது பொய்யான குற்றச்சாட்டுக்களை சுமத்துகிறார் என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் இன்று (அக்டோபர் 8) தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய சிவசங்கர், “எடப்பாடி பழனிசாமி அறிவிப்பின்படி அதிமுக சார்பில் சொத்துவரி உயர்வு, மின்கட்டண உயர்வு உள்ளிட்ட பிரச்சனைகளை கண்டித்து இன்று ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கிறார்கள். 2018-ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக்காலத்தில் தான் 50 முதல் 100 சதவிகிதம் வரை சொத்துவரி உயர்வு முதலில் உயர்த்தப்பட்டது.
அந்தநேரத்தில் தான் குறிப்பிட்ட காலத்திற்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்று நீதிமன்றம் அதிமுகவிற்கு குட்டு வைத்தது. அப்போது 2019-ஆம் ஆண்டு சொத்து வரி உயர்வை திரும்ப பெறுவதாக அறிவித்தார்கள்.
உள்ளாட்சி தேர்தலில் தோல்வி அடைந்த பிறகு, சொத்துவரி உயர்வு என்பது தற்காலிகமாக தான் நிறுத்தி வைக்கப்பட்டது என்று உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்திருந்தார். மத்திய அரசின் நிதிக்குழு சொல்கின்ற சொத்துவரி என்பது தவிர்க்க முடியாது என்று அதிமுக தெரிவித்தது.
உதய் மின் திட்டத்தில் தமிழகத்தை இணைத்து அதற்கான கையெழுத்து போட்டது அதிமுக தான். அவர்கள் எதையெல்லாம் தொடங்கி வைத்து நடைமுறையில் வைத்திருந்தார்களோ, தற்போது அதை புதிதாக எதிர்ப்பது போல் சொல்லிக்கொண்டிருக்கிறார்.
அதிமுகவுக்குள் பல்வேறு கலகங்கள் நடைபெற்று வருகிறது. எஸ்.பி.வேலுமணி புதிய உத்தியை கையாளுகிறார். ஓபிஎஸ் அமித்ஷாவை சந்திக்கிறார் என்ற செய்திகள் வந்துக்கொண்டிருக்கிற சூழலில், கட்சியை தக்கவைப்பதற்கு அரசை தேவையில்லாமல் குற்றம்சாட்டுகிறார்” என்றார்.
தொடர்ந்து மெரினாவில் ஏற்பட்டுள்ள உயிரிழப்புகள் குறித்து பேசும்போது, “வான் சாகச நிகழ்சியில் தேவையான மருத்துவ வசதிகள் பொதுமக்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதீத வெப்பம் காரணமாக, ஐந்து பேர் இறந்திருக்கிறார்கள். வெப்ப பாதிப்பிற்கு அரசு எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. அரசை பொறுத்தவரை வருகின்றவர்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடு வசதிகளை நல்லமுறையில் செய்து கொடுத்தது” என்று தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ராமதாஸ் எடுத்த முடிவு : பாமகவில் அதிரடி மாற்றம்!
ஹரியானா தேர்தல்: பாஜக சூழ்ச்சி செய்து வெற்றி… காங்கிரஸ் குற்றச்சாட்டு!