தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று (ஜூலை 18) சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தபோது மின்சார கட்டண உயர்வை அறிவித்தார்.
மின்சார வாரியத்தை சீர்திருத்தும் நடவடிக்கையாக இந்த கட்டண உயர்வு என்று கூறியிருக்கும் செந்தில்பாலாஜி….இந்த விலை உயர்வால் சாமானியர்களுக்கு பாதிப்பு ஏற்படாது என்றும் கூறியிருக்கிறார்.
”ஒன்றிய அரசின் தொடர் அறிவுறுத்தல்களால், ஒன்றிய அரசின் திட்டங்களின் கீழ் மானியம் பெற, இந்த நேரத்தில் தமிழக மக்களை பாதிக்காத வண்ணத்தில், மின் கட்டணத்தில் திருத்தம் கட்டயாமாகிறது.
கடந்த அதிமுக ஆட்சியில் சரியான திட்டமிடல் இல்லாததால் கடும் கடன் சுமையில் இருக்கும் நமது தமிழ்நாடு மின்சார வாரியத்தை மீட்டெடுக்கும் பெரும் பொறுப்பு தமிழ்நாடு அரசுக்கும், நமது அரசின் உயிர் நாடியாகிய தமிழக மக்களாகிய உங்களுக்கும் இருக்கிறது. இந்த நிலையில்தான் இந்த கட்டண உயர்வு அவசியமாகிறது.
2.28 கோடி மின் நுகர்வோர்கள் பயன்பெறும் வகையில், கழக தேர்தல் அறிக்கை எண் 222 படி, வீடுகளுக்கு நிலை கட்டணம் ரூ.20 முதல் ரூ.50 வரை ரத்து. தமிழ்நாட்டின் மொத்த வீடு மற்றும் குடிசை மின் நுகர்வோர்கள் 2.37 கோடி பேரில், 1 கோடி மின் நுகர்வோர்களுக்கு மின் கட்டண உயர்வு இல்லை.
தமிழ்நாட்டின் மொத்த வீடு மற்றும் குடிசை மின் நுகர்வோர்கள் 2.37 கோடி பேரில், 63.35 லட்சம் மின் நுகர்வோர்களுக்கு மின் கட்டண மாதம் ரூ 27.50 கூடுதல்.
தமிழ்நாட்டின் மொத்த வீடு மற்றும் குடிசை மின் நுகர்வோர்கள் 2.37 கோடி பேரில், 36.25 லட்சம் மின் நுகர்வோர்களுக்கு மின் கட்டண மாதம் ரூ 72.50/- கூடுதல்.
தமிழ்நாட்டின் மொத்த வீடு மற்றும் குடிசை மின் நுகர்வோர்கள் 2.37 கோடி பேரில், 18.82 லட்சம் மின் நுகர்வோர்களுக்கு மின் கட்டண மாதம் ரூ 147.50/- மட்டுமே கூடுதல்” என்று கட்டண உயர்வை பட்டியலிட்டிருக்கிறார் செந்தில்பாலாஜி.
அமைச்சரின் அறிவிப்பின்படி,
வணிகப்பிரிவு மின்நுகர்வோர்களுக்கு 50 பைசா உயர்த்தப்படுகிறது.
வீட்டு இணைப்புக்கான 100 யூனிட் மின் வினியோகத்தில் மாற்றம் இல்லை.
42 சதவீத மின் இணைப்பாளர்களுக்கு கட்டணங்களில் மாற்றம் இல்லை.
2 மாதங்களில் 200 யூனிட்டுகளுக்கு மேல் பயன்படுத்துபவர்களுக்கு மின் கட்டணங்களை உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
அதன்படி 2 மாதங்களில் 200 யூனிட்கள் வரை பயன்படுத்துபவர்களுக்கு ரூ.27.50 உயர்த்தப்படும்.
2 மாதங்களில் 301 முதல் 400 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு ரூ.147.50 வரை கட்டணம் உயர்த்த பரிசீலனை.
2 மாதங்களில் 501 யூனிட் முதல் 600 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு ரூ.155 வரை உயரும்.
2 மாதங்களில் 601 யூனிட் முதல் 700 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு ரூ.275 கட்டணம் உயரும்.
விசைத்தறிகளுக்கு 750 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
–மு.வா.ஜெகதீஸ் குமார்