ஆளுநர்-முதல்வர் கடிதப் பரிமாற்றம்: செந்தில்பாலாஜி வழக்கு ஒத்தி வைப்பு!

Published On:

| By Selvam

செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வதற்கு எதிரான வழக்கை ஜூலை 7-ஆம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜியை நியமித்ததை எதிர்த்து தேசிய மக்கள் சக்தி கட்சி தலைவர் எம்.எல்.ரவி, கொளத்தூரை சேர்ந்த ராமச்சந்திரன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கங்காபூர்வலா, ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று (ஜூன் 26) விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் மனுதாரர்களிடம், ’செந்தில் பாலாஜி நீதிமன்ற காவலில் இருப்பதால் அவரை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று ஆளுநர் ரவி உத்தரவு பிறப்பித்துள்ளாரா?’ என்று கேள்வி எழுப்பினர்.

மேலும், செந்தில் பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராக நீடிக்கக்கோரி முதல்வர் ஸ்டாலின் ஆளுநருக்கு அனுப்பிய கடிதத்தை மனுதாரர்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

இன்று மதியம் கடிதத்தை தாக்கல் செய்வதாக மனுதாரர் தரப்பில் தெரிவித்ததால் வழக்கின் விசாரணையை நீதிபதிகள் மதியம் ஒத்திவைத்தனர்.

வழக்கு மதியம் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது மனுதாரர்கள் தரப்பில், “முதல்வர் ஆளுநருக்கு இடையேயான கடித போக்குவரத்து ரகசியமானது என்பதால் கடிதத்தை எங்களால் சமர்ப்பிக்க முடியவில்லை.

தமிழக அரசு வெளியிட்ட பத்திரிகை செய்தி குறிப்பில் செந்தில் பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராக நீடிக்கக்கோரி ஆளுநருக்கு முதல்வர் ஸ்டாலின் பரிந்துரை கடிதம் அனுப்பியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆளுநர், முதல்வர் இடையேயான கடித போக்குவரத்தை சமர்ப்பிக்க ஆளுநர் மாளிகைக்கு உத்தரவிட வேண்டும்” என்ற வாதம் முன்வைக்கப்பட்டது.

”பத்திரிகை செய்தி குறிப்பின் அடிப்படையில் இந்த வழக்கில் எந்தவித உத்தரவும் பிறப்பிக்க முடியாது” என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

அப்போது மனுதாரர்கள் தரப்பில் செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வதற்கு எதிராக அதிமுக முன்னாள் எம்.பி ஜெயவர்தன் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மூன்று மனுக்களையும் சேர்த்து விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் வழக்கின் விசாரணையை ஜூலை 7-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

செல்வம்

”மகள்‌ ஷர்மிளா”: புதிய காரை பரிசாக வழங்கி கமல்ஹாசன் வாழ்த்து!

மதிமுக எம்.எல்.ஏ ராஜினாமா?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel