சென்னை தலைமை செயலகத்தில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் அறையில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
அமைச்சர் செந்தில் பாலாஜி அதிமுக ஆட்சிக் காலத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடி செய்த வழக்கில் அமலாக்கத்துறை செந்தில் பாலாஜியை விசாரிக்கலாம் என்று கடந்த மே 16 ஆம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் கடந்த மாதம் இறுதியில் தமிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்குத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. இன்று அமலாக்கத் துறை சோதனை நடத்தி வருகிறது.
சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள செந்தில் பாலாஜியின் அரசு இல்லம், கரூர் மண்மங்கலம் அருகே உள்ள ராமேஸ்வரபட்டியில் இருக்கும் செந்தில் பாலாஜியின் வீடு, ராமகிருஷ்ணாபுரத்தில் அமைந்துள்ள அமைச்சரின் சகோதரர் அசோக்குமார் வீடு ஆகிய இடங்களில் இன்று காலை முதல் அமலாக்கத் துறை சோதனை நடந்து வருகிறது.
காலை கிரீன்வேஸ் சாலையில் அமலாக்கத் துறை சோதனையில் ஈடுபட்டிருந்த போது, வாக்கிங்கை பாதியில் முடித்துவிட்டு விசாரணைக்காக வந்தார் செந்தில் பாலாஜி.
மத்திய தொழில் பாதுகாப்பு படை உதவியோடு காலை முதல் அமலாக்கத் துறை சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் செந்தில் பாலாஜியின் கிரீன்வேஸ் சாலையில் தூப்பாக்கி ஏந்திய அதிவிரைவுப் படையும் குவிந்துள்ளது.

இன்று பகல் 1.40க்கு வங்கி அதிகாரிகளுடன் சென்னை தலைமை செயலகத்துக்கு சென்ற அமலாக்கத் துறை அதிகாரிகள், முதலாவது தளத்தில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி அறையில் சோதனை நடத்தி வருகின்றனர்.
கடந்த 2016ஆம் ஆண்டு தலைமை செயலகத்தில் அப்போதைய தலைமை செயலாளர் ராம் மோகன் ராவின் அறையில் வருமான வரித்துறை சோதனை நடந்தது. தற்போது தலைமை செயலகத்தில் செந்தில் பாலாஜி அறையில் அமலாக்கத் துறை சோதனை நடந்து வருகிறது.
பிரியா
TNPL: சேலம் அணியை எதிர்கொள்ளும் சேப்பாக் கில்லீஸ்
”தேசிய மருத்துவத் தகுதித் தேர்வை கைவிடுக” – பிரதமருக்கு முதல்வர் கடிதம்!