அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 18வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கடந்த ஜூன் 14 ஆம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். தொடர்ந்து 230 நாட்களுக்கும் மேலாக புழல் சிறையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் நீட்டித்து வருகிறது.
இதற்கிடையே அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 3 முறையும், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு முறையும், உச்சநீதிமன்றத்தில் ஒரு முறையும் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
இந்நிலையில் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் 2வது முறையாக செந்தில் பாலாஜி தாக்கல் செய்தார். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்த போது அமலாக்கத்துறை பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் வழக்கு விசாரணையை பிப்ரவரி 14 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
இந்நிலையில் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் நிறைவடைய உள்ளது. எனவே செந்தில் பாலாஜி வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி இன்று விடுமுறை என்பதால் மூன்றாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி டி.வி.ஆனந்த் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது செந்தில் பாலாஜி புழல் சிறையில் இருந்து காணொளி காட்சி வாயிலாக அஜர்படுத்தப்பட்டார். நீதிபதி டி.வி.ஆனந்த் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை பிப்ரவரி 7 ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார். இதன்மூலம் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 18வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா
Khelo India : இரண்டாம் இடத்திற்கு முன்னேறி தமிழ்நாடு சாதனை!
கொடநாடு விவகாரம் : எடப்பாடி வைத்த முக்கிய கோரிக்கை!