மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மீது போடப்பட்ட பண மோசடி வழக்கை இன்று(அக்டோபர் 1) விசாரித்த சிறப்பு நீதிமன்றம், வழக்கை அக்டோபர் 24ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
கடந்த 2011-2016 அதிமுக ஆட்சிக்காலத்தில், போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, அவரது துறையில் பல பேருக்கு வேலை வாங்கி தருவதாகப் பணம் வாங்கி ஏமாற்றினார் என்று குற்றச்சாட்டு எழுந்தது.
இது சம்பந்தமாகச் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் செந்தில் பாலாஜி மீது வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கு விசாரணையானது சென்னை எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ-க்கள் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில் “செந்தில் பாலாஜி வழக்கு விசாரணையை ஓராண்டுக்குள் முடிக்க வேண்டும், சிறப்பு அரசு தரப்பு வழக்கறிஞரை நியமிக்க வேண்டும், விசாரணை தாமதமாவதால் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரிக்க வேண்டும்” என்று பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் இடையீட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை உச்சநீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ். ஓகா மற்றும் அகஸ்டீன் ஜார்ஜ் மாசி கொண்ட அமர்வு விசாரித்து வருகிறது.
நேற்று உச்ச நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில் “எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிபதி தற்போது 29 வழக்குகளை விசாரித்து வருகிறார். இதில் 20 வழக்குகள் விசாரணை கட்டத்தில் உள்ளன.
மேலும் செந்தில் பாலாஜி வழக்கில் 2000 மேற்பட்ட குற்றம் சாட்டப்பட்டவர்களும், 600 சாட்சிகளும் இருக்கிறார்கள்.
அதனால் இந்த வழக்கை விரைந்து முடிக்கக் கூடுதல் குற்றவியல் நீதிபதி ஒருவரைச் சென்னை உயர்நீதிமன்றம் நியமிக்க வேண்டும்.
மேலும் இந்த வழக்கின் தற்போதைய நிலை குறித்துச் சிறப்பு நீதிமன்ற நீதிபதி தயார் செய்துள்ள அறிக்கையை, இந்த வழக்கில் தொடர்புடைய அனைவருக்கும் பகிர வேண்டும்” என்று அபய் எஸ். ஓகா தலைமையிலான அமர்வு உத்தரவிட்டது.
இந்த நிலையில்தான், இன்று காலை சென்னை சிங்காரவேலர் மாளிகையில் உள்ள எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ-களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் ஆஜரானார்.
அப்போது செந்தில் பாலாஜி உட்பட நேரில் ஆஜரான 47 பேருக்கு 20 ஆயிரம் பக்கங்கள் கொண்ட கூடுதல் குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது.
மேலும் குற்றம்சாட்டப்பட்ட 2202 பேருக்கு குற்றப்பத்திரிகை நகல் வழங்க வேண்டிய நிலையில், முதற்கட்டமாக 100 பேருக்கு சம்மன் அனுப்ப சிறப்பு நீதிபதி உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து வழக்கின் விசாரணை வரும் அக்டோபர் 24ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
3000 ரன்கள் 300 விக்கெட்டுகள் : ஜடேஜா சரியான ஆல்ரவுண்டர்பா!
மாதத்தின் முதல் நாளே அதிரடியாக குறைந்த தங்கம் விலை!
ரஜினியின் தொடையைத் திறந்து… அப்பல்லோவில் அளிக்கப்படும் சிகிச்சை – மருத்துவ ரிப்போர்ட்!