முதல்வர் மு.க.ஸ்டாலின் பாதுகாப்பு கான்வாயில் சென்னை மேயர் பிரியா தொங்கியபடி சென்றது குறித்து அமைச்சர் சேகர்பாபு விளக்கமளித்துள்ளார்.
சென்னையில் ஆதிகேசவ பெருமாள் கோயிலில் ஆய்வு மேற்கொண்ட பின் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவரிடம் சென்னை மேயர் பிரியா முதல்வர் கான்வாயில் தொங்கிக்கொண்டு சென்றது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்துப் பேசிய அமைச்சர், “கடந்த காலங்களில் மேயர் பொறுப்பிலிருந்தவர்களை வெளியே வரக்கூடாது என்று தடை விதிக்கப்பட்ட சம்பவங்கள் உண்டு.
ஆதி திராவிட வகுப்பைச் சேர்ந்த மாநகராட்சி உறுப்பினரைக் காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்று கையை உடைத்த சம்பவங்களும் உண்டு. அதுபோன்ற ஆட்சி இதுவல்ல.
முதல்வர் செல்லக்கூடிய பகுதிக்குப் போக வேண்டும் என்பதால் மேயர் பிரியா அந்த வாகனத்தில் ஏறியிருக்கிறார். அந்த வாகனத்தில் முதல்வர் கூட இல்லை. அது பாதுகாப்புக்கு வந்த வாகனம்.
ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் அப்படி நடந்துவிட்டது. அவரையும் ஒரு அரசு சார்ந்த ஊழியர் என்கிற கண்ணோட்டத்தில் தான் பார்க்கிறோம். முதல்வரோடு இருக்க வேண்டும் என ஒரு துடிப்போடு நடந்த செயல்.
ஒரு பெண்மணி ஆணுக்கு நிகராக துணிச்சலோடு இருக்கிறார். அதைப் பாராட்ட வேண்டுமே தவிர விமர்சிப்பது தேவையற்றது. இந்த நிகழ்வு அதிகார துஷ்பிரயோகம் அல்ல” என கூறினார்.
பிரியா
“சார் ஊர்ல இல்ல” : லதா ரஜினிகாந்த்