“சிதம்பரம் தீட்சிதர்கள் மீது நடவடிக்கை எடுக்க கூடாதா?”: சேகர் பாபு கேள்வி!
சிதம்பரம் தீட்சிதர்கள் சட்டவிதிமீறலில் ஈடுபட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கூடாதா என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு ஆளுநருக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை ஸ்டீபன்சன் சாலையில் நடைபெற்று வரும் பாலத்தின் கட்டுமான பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ஆகியோர் இன்று ஆய்வு செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, “கர்நாடகாவில் வெயில் அதிகமாக இருப்பதால் அண்ணாமலை திமுக மீது ஏதாவது குற்றச்சாட்டுகளை சுமத்திக்கொண்டே இருக்கிறார். இதுவரை இல்லாதவகையில் திமுக ஆட்சியில் 4225 கோடி மதிப்பிலான நிலங்கள் மீட்கப்பட்டுள்ளது. இதில் 6 இடங்கள் பாஜக நிர்வாகிகளிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் சிறப்பான நடவடிக்கைகளுக்கு ஆளுநர் நன்றி சொல்ல வேண்டும். குறைகள் சொல்வதை அவர் தவிர்க்க வேண்டும். சிதம்பரம் தீட்சிதர் கோவிலில் திருமணம் செய்த குழந்தைகளுக்கு கன்னித்தன்மை பரிசோதனை செய்யவில்லை. சட்ட விதிமீறலில் சிதம்பரம் தீட்சிதர்கள் ஈடுபட்டால் அவர்கள் மீது நடவடிக்கை பாயக்கூடாதா. அவர்களுக்கு ஆளுநர் தனியாக சட்டம் வகுத்துள்ளாரா. சட்டம் அனைவருக்கும் பொதுவானது. சட்ட விதிமீறலில் யார் ஈடுபட்டாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். ஆளுநர் என்ன ஆண்டவரா. அண்ணா சொன்னதுபோல ஆட்டுக்கு தாடியும் ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் ஆளுநர் தேவையில்லை என்பது தான் திமுகவின் நிலைப்பாடு ஆகும். நியமனப்பதவியில் வந்த ஆளுநருக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. காலாவதியாக போவது ஆளுநர் தானே தவிர திராவிட மாடல் அல்ல. இது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட திராவிட மாடல் ஆட்சி. இந்த ஆட்சியை பின்பற்றி தான் கர்நாடகாவில் பாஜக தேர்தல் அரசியலில் ஈடுபட்டுள்ளது” என்று தெரிவித்தார்.
செல்வம்
தங்கம் விலை குறைந்தது: இன்றைய நிலவரம்!
கர்நாடகா தேர்தல்: சாலையோர கடையில் தேநீர் அருந்திய ஜே.பி.நட்டா