இந்து சமய அறநிலையத் துறையிடம் தெரிவிக்காமல் மூவரசம்பேட்டை கோவில் நிர்வாகத்தினர் தாங்களாக செய்த பணிகளின் காரணமாக 5 பேரின் உயிர் பறிபோயுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் மூவரசம்பேட்டையில் உள்ள நங்கநல்லூர் தர்மலிங்கேஸ்வரர் கோயிலில், பங்குனி உத்திரத்தையொட்டி நேற்று(ஏப்ரல் 6) தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது.
அப்போது குளத்திற்குள் இறங்கியவர்களில் 5 அர்ச்சகர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து இன்று நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் 5 பேர் பலியான சம்பவம் குறித்து அதிமுக, காங்கிரஸ், விசிக கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளால் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
அப்போது பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குளத்தில் மூழ்கி உயிரிழந்த அர்ச்சகர்கள் குடும்பங்களுக்கு தமிழக அரசு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
அதற்கு பதிலளித்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பேசுகையில், ”மூவரசம்பேட்டையில் உள்ள குளம் நங்கநல்லூர் கோயிலுக்கு சொந்தமான குளம் அல்ல. அது பஞ்சாயத்தால் நிர்வகிக்கப்பட்டு வந்த குளம்.
கடந்த ஆண்டு செப்டம்பர் 6ம் தேதி தர்மலிங்கேஸ்வரர் திருக்கோவிலுக்கு பக்த ஆஞ்சநேய திருக்கோவிலின் செயல் அலுவலர் தக்கராக நியமிக்கப்பட்டார்.
அதற்கு உடனடியாக மறுப்பு தெரிவித்த திருக்கோவிலைச் சேர்ந்த அறக்கட்டளை நிர்வாகத்தினர் இதுகுறித்து ஆணையர் அலுவலகத்தில் மேல்முறையீடு மனு அளித்தார்கள். அந்த மனு மீதான விசாரணை வரும் 12ம் தேதி நடைபெற உள்ளது.
அந்த கோவில் அறக்கட்டளை நிர்வாகத்தினர் தாங்களாக முன்வந்து செய்த பணிகளின் காரணமாக தற்போது இந்த துயரமான விபத்து நடந்துள்ளது.
அதில், ராகவன், ராகவா, சூர்யா, விக்னேஷ், யோகேஷ்வரன் என்று 5 விலைமதிப்பில்லா இளைஞர்களின் உயிர்கள் பறிபோயுள்ளன. அவர்களின் பெற்றோரின் கனவுகள் சிதைந்து போயுள்ளன.
இந்த சம்பவத்தை தொடர்ந்து அந்த மாவட்டத்தின் அமைச்சரை தொடர்பு கொண்ட முதல்வர் ஸ்டாலின், அதற்கு காரணமானவர்கள் யார் என கண்டறிந்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்றார்.
அந்த குளம் இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமானது என்பதை அறிந்து, குளத்தை ஏன் தூர்வாராமல் வைத்திருந்தீர்கள் என்று என்னை அழைத்து கண்டித்தார்.
இங்கு பேசிய உறுப்பினர்கள் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு கூடுதல் நிதி வழங்க கோரினீர்கள். கடந்த காலங்களில் இம்மாதிரியான விபத்துகளின் போது என்ன நடைமுறை பின்பற்றபட்டதோ, அதுதான் தற்போதும் செய்யப்பட்டுள்ளது. அதன்படி இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
கோவில் குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறுவதை அந்த கோவில் நிர்வாகத்தினர் யாரும் இந்து சமய அறநிலையத் துறைக்கு தெரிவிக்கவில்லை. 5 பேர் உயிரிழந்துள்ள நிலையில் அதனை இப்போது ஒரு குற்றமாக சொல்ல விரும்பவில்லை. எனினும் இதுபோன்று தீர்த்தவாரி நிகழ்ச்சிகள் நடைபெறும் போது இந்து சமய அறநிலையத் துறைக்கு தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
மேலும் உயிரிழந்த இளைஞர்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார்.
கிறிஸ்டோபர் ஜெமா
கீழடி 9ம் கட்ட அகழாய்வுப் பணிகள் தொடக்கம்
மீண்டும் அதிமுக செயற்குழு கூட்டம் அறிவிப்பு!