ஆளுநர் மாளிகை பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டது ஏன்? – சேகர்பாபு விளக்கம்!

Published On:

| By Selvam

புதிய நாடாளுமன்றத்தில் நிறுவப்பட உள்ள செங்கோல் தமிழகத்திற்கான பெருமை என்பதால் ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டேன் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

புதிய நாடாளுமன்றத்தில் செங்கோல் நிறுவப்பட உள்ளது குறித்து ஆளுநர் மாளிகையில் மே 25-ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் செய்தியாளர் சந்திப்பு நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் தமிழக அரசு சார்பில் அமைச்சர் சேகர் பாபு கலந்து கொண்டார்.

நிகழ்ச்சி முடிந்த பிறகு சேகர் பாபுவிடம் நாடாளுமன்ற திறப்பு விழாவிலும் திமுக கலந்து கொண்டால் மகிழ்ச்சியாக இருக்கும் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

இதுகுறித்து மே 25-ஆம் தேதி அங்கேயும் வரலாமே? சேகர் பாபுவிடம் நைசாக பேசிய நிர்மலா சீதாராமன் என்ற தலைப்பில் மின்னம்பலம் டிஜிட்டல் திண்ணையில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

இந்தநிலையில், புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நிறுவப்படவுள்ள செங்கோல் தமிழகத்திற்கான பெருமை என்பதால் ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டேன் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று ஆவடி கோணம்பேடு அரசு உயர்நிலைப்பள்ளி கட்டிட பணி, பூவிருந்தவல்லி விளையாட்டு அரங்கம் ஆகியவற்றை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கள ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர் பாபு,

“தமிழ்நாடு முதல்வரை பொறுத்தளவில் கலைஞர் காலத்தில் இருந்து மத்திய அரசுக்கு உறவுக்கு கை கொடுப்போம் உரிமைக்கு குரல் கொடுப்போம் என்ற கொள்கையோடு தான் இயங்கி வருகிறோம்.

அண்மையில் ஆளுநருடன் ஏற்பட்ட சர்ச்சையின் போது கூட ஆளுநர் நண்பர் என்று கூறினாலும் நட்புக்காக கொள்கையில் சமரசம் செய்து கொள்ள மாட்டோம் என்று முதல்வர் ஸ்டாலின் தெளிவாக கூறினார்.

அந்தவகையில் டெல்லியில் நடைபெற உள்ள புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை ஜனாதிபதி திரவுபதி முர்மு தான் திறந்து வைக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளோம்.

நாட்டின் உயர்ந்த பதவியில் உள்ள குடியரசு தலைவர் அந்த கட்டிடத்தை திறந்து வைத்தால் தான் அது ஏற்புடையதாக இருக்கும் என்பது தமிழ்நாடு முதல்வரின் நிலைப்பாடு.

புதிய நாடாளுமன்றத்தில் நிறுவப்பட உள்ள செங்கோல் குறித்த விளக்கங்கள் தருவதற்காக ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் தமிழ்நாடு அரசின் சார்பில் பிரதிநிதிகள் பங்கேற்க வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில் என்னை தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள செய்தார்.

தமிழ், கலாச்சாரம், பண்பாடு, மரபு இவைகளை பேணி காப்பதற்கு தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் ஓங்கி குரல் கொடுப்பதில் என்றைக்கும் சளைத்தவராக இல்லை.

அந்தவகையில் தமிழகத்திற்கான பெருமையாக புதிய நாடாளுமன்றத்தில் செங்கோல் அமைய இருப்பதால் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டேன்” என்று தெரிவித்துள்ளார்.

செல்வம்

“உலகம் சுற்றும் வாலிபன் முதல்வர் ஸ்டாலின்”: செல்லூர் ராஜூ

யூடியூபர் இர்பான் கார் மோதி மூதாட்டி பலி!

minister sekar babu
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share