தேர்தல் பரப்புரை காலம் முடிவடைந்து நாளை (ஏப்ரல் 19) வாக்களிக்கும் நாளுக்காக காத்திருக்கிறது தமிழ்நாடு.
இந்தத் தேர்தலில் திமுக தலைமை, ஒவ்வொரு அமைச்சருக்கும் அவரது சொந்த மாவட்ட தொகுதியின் பொறுப்பினை ஒப்படைத்தது. சில அமைச்சர்களுக்கு மட்டும் ஒன்றுக்கும் மேற்பட்ட தொகுதிகள் ஒப்படைக்கப்பட்டன.
அந்த வகையில்தான் உணவுத் துறை அமைச்சரான அர. சக்கரபாணிக்கு அவரது சொந்த மாவட்டமான திண்டுக்கல் எம்பி தொகுதி பொறுப்போடு, கூடுதலாக கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த பொள்ளாச்சி எம்பி தொகுதி, கிருஷ்ணகிரி எம்பி தொகுதி என மூன்று தொகுதிகள் ஒப்படைக்கப்பட்டன.
தேர்தல் பரப்புரை உள்ளிட்ட பணிகள் நடந்துகொண்டிருக்கும்போதே தலைமையின் மூலம் ஒவ்வொரு அமைச்சரின் செயல்பாடு பற்றியும் தனியாக ஆய்வும் நடத்தப்பட்டது.
அந்த வகையில் எடுத்துக் கொண்ட எல்லா தொகுதிகளிலும் திறமையாக செயல்பட்ட அமைச்சர்களின் பட்டியலில் உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணிக்கு முக்கியமான இடம் இருக்கிறது என்கிறார்கள் அறிவாலய வட்டாரத்தில்.
திண்டுக்கல் தொகுதியை திமுக கேட்டு போராடியது. ஆனாலும் அத்தொகுதி கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. அதேபோல சக்கரபாணிக்கு ஒதுக்கப்பட்ட இன்னொரு தொகுதி கிருஷ்ணகிரியிலும் காங்கிரஸ்தான் போட்டியிடுகிறது. பொள்ளாச்சியில் மட்டுமே திமுக நேரடியாக போட்டியிடுகிறது.
இப்படி மூன்று தொகுதிகளில் இரண்டில் கூட்டணிக் கட்சிகள், ஒன்றில்தான் திமுக என்ற நிலையிலும்… மூன்று தொகுதிகளுக்கும் சம அளவில் சிறப்பு கவனம் செலுத்தி சக்கரமாய் சுற்றிச் சுழன்றிருக்கிறார் சக்கரபாணி.
“வேட்பாளர் அறிவிக்கப்பட்டதில் இருந்து வேட்பாளர்களுடன் நிர்வாகிகள் அறிமுகம், தினமும் பிரச்சார அட்டவணை, தலைவர்களின் பிரச்சாரத்தை ஒருங்கிணைத்தல், பூத் கமிட்டி ஒருங்கிணைப்பு என்று தனது 28 ஆண்டு கால தேர்தல் அனுபவத்தை எல்லாம் இந்த மூன்று தொகுதிகளில் நிரூபித்துவிட்டார்” என்கிறார்கள் சக்கரபாணியோடு பயணித்த கூட்டணிக் கட்சியினர்.
திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின் திண்டுக்கல், தேனி தொகுதிகளுக்கான பிரச்சாரக் கூட்டத்தில் ஏப்ரல் 10 ஆம் தேதி தேனி லட்சுமிபுரத்தில் பேசினார். அந்த பிரம்மாண்ட பொதுக்கூட்டத்துக்காக திண்டுக்கல் தொகுதி சார்பில் அமைச்சர் சக்கரபாணி பொறுப்பேற்றுக் கொண்டார். என்ன விசேஷம் என்றால் 10 ஆம் தேதிதான் சக்கரபாணிக்கு பிறந்தநாள்.
பொதுக்கூட்டத்துக்கு வந்த முதலமைச்சர் ஸ்டாலின் அமைச்சர் சக்கரபாணிக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்னதோடு, ‘உங்க பிறந்த நாள்ல உங்க தொகுதிக்கு பிரச்சாரம் வந்திருக்கேன் பாத்தீங்களா?’ என்று கேட்க நெகிழ்ந்து போய்விட்டார் சக்கரபாணி. ’வயது எத்தனை?’ என்று முதலமைச்சர் கேட்க, ’63 தலைவரே’ என்று பதில் சொல்லியிருக்கிறார் சக்கரபாணி. ‘நீங்க சொல்ற மத்ததெல்லாம் நம்புவேன். இதை மட்டும் நம்ப மாட்டேன்’ என்று ஜோக் அடித்து சக்கரபாணியின் புயல் வேக தேர்தல் பணியை உற்சாகப்படுத்தியிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.
அதேபோல அடுத்த சில நாட்களில் அதாவது ஏப்ரல் 12 ஆம் தேதி கோவைக்கு ராகுல் காந்தி வந்த பொதுக்கூட்டத்தின் ஒருங்கிணைப்புப் பணிகளையும் இரவுபகல் பாராமல் அமைச்சர் முத்துசாமியோடு இணைந்து ஒருங்கிணைத்தார் சக்கரபாணி. அதற்காகவும் முதலமைச்சரால் பாராட்டப்பட்டிருக்கிறார். கமல்ஹாசனின் தேர்தல் பிரச்சாரப் பணிகளையும் சிறப்பாகவே ஒருங்கிணைத்தார் சக்கரபாணி.
“6 முறை எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்று வரும் சக்கரபாணி இதுவரை 28 ஆண்டுகள் மக்கள் பிரதிநிதியாக பணியாற்றி வருகிறார். கலைஞரிடம் அவர் கற்றுக் கொண்ட தேர்தல் பணிதான் இன்று ஸ்டாலினிடம் பாராட்டு வாங்கும் அளவுக்கு அவரை உயர்த்தியிருக்கிறது. உணவுத் துறை அமைச்சர் என்பது முக்கியமான பணி. தான் பொறுப்பேற்ற தொகுதிகளில் உணவுத் துறையின் முக்கிய சாதனைகளை எடுத்துச் சொல்லி மக்கள் பணி ரீதியாகவும், கட்சி அரசியல் ரீதியாகவும் என இரு வகைகளிலும் தேர்தல் பணியாற்றியுள்ளார்” என்கிறார்கள் சக்கரபாணியின் சக்கர வியூகத்தை நேரில் கண்ட திமுக நிர்வாகிகள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
–வேந்தன்
”தேர்தல் முறைகேடு… 2 ஆண்டுகள் சிறை தண்டனை போதாது” : உச்சநீதிமன்றம்
“ஜாமீனுக்காக கெஜ்ரிவால் அதிக மாம்பழங்கள், இனிப்புகளை சாப்பிடுகிறார்” : அமலாக்கத்துறை வாதம்!