கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கல்வராயன் மலை சுற்றுலாத்தலமாக மேம்படுத்தப்படும் என்று சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் இன்று (ஜூன் 24) சட்டமன்றத்தில் தெரிவித்தார்.
தமிழக சட்டமன்றத்தில் இன்று உயர்கல்வித்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, பள்ளிக்கல்வித்துறை, சட்டத்துறை, செய்தி மற்றும் விளம்பரத்துறை ஆகிய துறைகளின் மீதான மானியக்கோரிக்கை நடைபெறுகிறது.
கேள்வி நேரத்தின் போது கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன், “இன்றைக்கு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கல்வராயன் மலையை கள்ளச்சாராய மலை என்று அழைக்கிற ஒரு நிலை இருக்கிறது.
கல்வராயன் மலையை சிறந்த சுற்றுலாத்தலமாக மாற்றுவதற்கு சிறப்பு நிதியை ஒதுக்கி, அந்த பகுதி மக்களுக்கான வாழ்வாதாரத்தை மேம்படுத்தி கொடுப்பதற்கு அரசு முன்வருமா?” என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், “கல்வராயன் மலை என்பது மிகவும் பிரசித்தி பெற்ற ஓர் இடம். அந்த இடத்தை மேம்படுத்துவது என்பது அவசியம். இருப்பினும் அரசின் நிதிநிலைமைக்கு ஏற்ப முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவைப் பெற்று சுற்றுலாத்தலமாக மேம்படுத்தப்படும்” என்று தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
‘உழவர்களின் தோழன்’… சிவகார்த்திகேயனுக்கு புதிய விருது!
கள்ளச்சாராய மரணம்: ராமதாஸ், அன்புமணிக்கு திமுக எம்.எல்.ஏக்கள் நோட்டீஸ்!