ஆளுநர் ரவியின் உண்மை முகத்தை உச்சநீதிமன்ற நீதிபதிகள் வெளிக்கொண்டு வந்துவிட்டார்கள் என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். Minister Ragupathi says Supreme Court
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“ஆளுநர் பதவியே தேவையில்லை!
தமிழக அரசின் பல்வேறு மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போட்டுள்ளதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்து உள்ளது.
இந்த வழக்கு விசாரணைக்கு வரும் ஒவ்வொரு நாளும்,ஆளுநர் தேவையில்லாமல் அரசியல் செய்கிறார் என்ற ரீதியில் தான் தங்கள் கருத்துக்களை தொடர்ந்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் பதிவு செய்து வருகிறார்கள்.
குறிப்பாக பிப்ரவரி 7-ஆம் தேதி உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சொன்ன கருத்துக்கள் ஆறறிவு உள்ள ஒரு மனிதர், ஆளுநர் ஆர்.என்.ரவி என்பது உண்மையாக இருந்தால் ஆளுநர் பதவியே தேவையில்லை என்று அவர் ராஜினாமா செய்து விட்டு போயிருக்க வேண்டும்.
ஆளுநரின் பதவிக்காலமான ஐந்து ஆண்டு காலம் கடந்து அவருக்கு நீட்டிப்பும் தராமல் குடியரசுத் தலைவர் சொல்லும் வரை ஆளுநர் பதவியில் தொடரலாம் என்ற காத்திருப்பு பட்டியல் ஆளுநர் தான் இன்றைய தமிழக ஆளுநர். அவர் பதவி சென்ற ஆண்டு அக்டோபர் எட்டாம் தேதியுடன் காலாவதி ஆகிவிட்டது. சரி உச்சநீதிமன்றம் ஆளுநர் பற்றி சொன்ன கருத்துக்களை நாம் பார்ப்போம்.

ஆளுநரை கேள்விகளால் துளைத்தெடுத்த உச்சநீதிமன்றம்!
ஆளுநரிடம் கேள்வி மேல் கேள்வியாக அடுக்கிக் கொண்டே இருந்தார்கள் உச்ச நீதிமன்ற நீதிபதிகள். பல்கலைக்கழக மசோதா, மத்திய சட்டத்திற்கு எதிராக இருந்தால் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன ?, மாநில அரசு எப்படித்தான் செயல்பட வேண்டுமென நினைக்கிறீர்கள்?, மாநில அரசின் செயல்பாடுகளுக்கு ஆளுநர் முட்டுக்கட்டையாக இருக்கக் கூடாது இருக்கவும் முடியாது. அந்த முட்டுக்கட்டையை நீக்க வேண்டும். ஆளுநர் எதுவும் கூறாமல் மசோதாக்களை கிடப்பில் வைத்தால், அவர் மனதில் இருப்பது அரசுக்கு எப்படி தெரியும்?
நான் ஒப்புதல் தராமல் மசோதாக்களை தடுத்து நிறுத்துகிறேன். மறுபரிசீலனை செய்யுமாறு உங்களைக் கேட்க மாட்டேன் என ஆளுநர் கூறினால் அதில் என்ன அர்த்தம் உள்ளது. இதன் மூலம் அரசியலமைப்பு சட்டத்தின் 200-வது பிரிவின் இரண்டாம் பகுதியை ஆளுநர் நீர்த்து போக செய்திருக்கிறார். அவர் தனக்கென ஒரு பாணியை அமைத்துக் கொண்டதாகவே தெரிகிறது.
ஆளுநர் இது தொடர்பாக அரசின் கவனத்தை ஈர்த்திருக்கலாம் அல்லது இந்த மசோதாக்களை நீங்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கூறியிருக்கலாம்.
மசோதாக்களை கிடப்பில் போட்டு தீங்கிழைத்துள்ளீர்கள். இந்த விவகாரத்தில் தமிழக அரசின் மசோதாக்களில் ஆளுநர் கண்டறிந்த ஓட்டைகள் தான் என்ன?
எதற்காக மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க மறுத்தார் என்பதற்கான காரணத்தை காட்ட வேண்டும். குடியரசுத் தலைவருக்கு மசோதாக்களை பரிந்துரைக்கும் போது ஆளுநர் என்ன காரணம் கூறியுள்ளார்?
எந்த காரணத்தையும் கூறாமல் பரிந்துரை செய்திருந்தால் குடியரசுத் தலைவரே கேட்டுத் தெரிந்து கொள்வாரா?, உங்கள் வாதப்படி மசோதாக்களை நிறுத்தி வைப்பதாக இருந்தால் பல்கலைக்கழகங்களின் நிலைமை என்ன ஆவது? துணைவேந்தர் நியமிக்கப்படாவிட்டால் மாணவரின் எதிர்காலம் கல்வித்தரம் என்ன ஆகும்?, ஒரு மசோதா சரியானது அல்ல என கருதினால் ஒரேடியாக நிராகரிக்கலாமே தவிர அதை விடுத்து நிறுத்தி வைப்பது ஏன்?,
இப்படி ஆளுநர் தமிழக மக்களுக்கு எதிராகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர்களின் பெரும்பான்மை கருத்துக்கும் மதிப்பு தரவில்லை என்பதை உணர்ந்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அவரின் உண்மை முகத்தை வெளிக்கொண்டு வந்து விட்டார்கள்.

ராஜமன்னார் குழு!
ஆளுநர் வேண்டாம் என்பதுதான் திமுகவின் நிரந்தர கொள்கை. இதை 1969-ஆம் ஆண்டு அன்றைய தமிழக முதல்வர் கலைஞர் அரசால் மத்திய மாநில உறவுகள் பற்றி ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட ராஜமன்னார் குழு அதை உறுதிப்பட தெரிவித்திருக்கிறது.
ஆளுநர்களை தனது கட்சியின் நலனுக்காக ஒன்றிய அரசாங்கம் பயன்படுத்துகிறது என்று ராஜமன்னார் குழு வெளிப்படையாகவே சுட்டிக் காட்டியது. இன்று வரை அதே நிலைமைதான் தொடர்கிறது.
ராஜமன்னார் குழு ஆளுநர் பதவி தேவையா என்று இந்தியாவில் உள்ள எல்லா மாநில முதல்வருக்கும் அரசியல் கட்சிகளுக்கும் சில கேள்விகளை அனுப்பி இருந்தது.
மேற்குவங்க முதல்வர் ஜோதி பாசு தலைமையிலான அரசு ஆளுநர் பதவி தேவையற்ற ஒன்று. அது முற்றிலும் நீக்கப்படலாம் என்று கருத்து சொன்னது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அதிகாரத்தில் இருந்த திரிபுரா அரசாங்கமும் இதே கருத்தை தான் சொன்னது.
தெலுங்கு தேச தலைவரும் முதல்வராகவும் இருந்த என்.டி.ராமராவ் தலைமையிலான ஆந்திர அரசு ஆளுநர் பதவி நீக்கப்பட வேண்டும் என்று தான் கருத்து சொல்லியது.
ஒன்றிய அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட செதல் வாட் தலைமையிலான ஆய்வுக் குழு ஆளுநர் ஐந்தாண்டுகளுக்கு மேல் நீடிக்கக் கூடாது என்று வலியுறுத்தியது.
அதுமட்டுமல்ல அவர் பதவிக்காலம் முடிவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பே புதிய ஆளுநர் யார் என்பது முடிவு செய்ய வேண்டும் என்றும் அந்த குழு கூறியது.
அதேபோல் முதலமைச்சரை கலந்து ஆலோசித்து அதன்பின்பு தான் ஆளுநர் நியமிக்கப்பட வேண்டும் என்ற மரபு தொடர வேண்டும் என்று வலியுறுத்தியது.
ஆரம்ப காலங்களில் ஆளுநர் நியமிப்பதற்கு முன்பு ஆட்சியாளர்களை கலந்து ஆலோசிப்பது ஒன்றிய அரசின் வழக்கமாக இருந்தது.
ஆளுநருக்கும் பாஜகவுக்கும் மிகப்பெரிய தலை குனிவு!
இப்போது அந்த நடைமுறை காணாமல் போய்விட்டது. சர்க்காரியா கமிஷனில் கர்நாடக முதல்வராக இருந்த ராமகிருஷ்ண ஹெக்டே சொன்ன ஆலோசனை ஆளுநர் நியமிப்பதற்கு முன்பு முதலமைச்சர் ஒப்புதல் பெற வேண்டும்.
இதற்கான சட்ட திருத்தம் செய்ய வேண்டும் என்று சொல்லியிருந்தார். அப்போதே திமுக ஆளுநர் பதவியை நீக்கிவிட வேண்டிய காலம் வந்துவிட்டது என்று பரிந்துரை செய்தது.
மாநில முதல்வர்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் ஆளுநருக்கும் திமுக அரசுக்கும் உள்ள விவகாரம் இது ஏதோ ஒரு தனிப்பட்ட ஒரு அரசின் பிரச்சினை என்று நினைக்கக் கூடாது.
திமுக இந்த வழக்கில் எல்லா மாநில முதல்வர்களுக்கும் சேர்ந்துதான் வாதாடுகிறது. குடியரசு தினம், சுதந்திர தினம் இரண்டு நாட்களிலும் ஆளுநர் தான் கொடியேற்றிக் கொண்டிருந்தார். சுதந்திர தினத்தில் முதல்வர் கொடியேற்ற வேண்டும் என்ற உரிமையை வாங்கித் தந்தது கூட திமுக. முதல்வராக இருந்த கலைஞர் தான்.
நீதிமன்றம் கிட்டத்தட்ட சொன்ன கருத்துக்கள் எல்லாமே ஆளுநருக்கும் ஆளுநரை இயக்கிக் கொண்டிருக்கும் பாஜகவுக்கும் மிகப்பெரிய தலை குனிவு. இதன் பிறகாவது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை மதிக்க வேண்டும் என்ற மாண்பு இந்த மாண்புமிகுகளுக்கு வரவேண்டும்” என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். Minister Ragupathi says Supreme Court