ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் இயற்ற தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு கொண்டுவந்துள்ள ஆன்லைன் ரம்மி சூதாட்ட தடை சட்டத்திற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் வழக்கு தொடர்ந்துள்ளன. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது மத்திய அரசின் தரப்பில் “ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் இயற்ற தமிழக அரசுக்கு அதிகாரம் கிடையாது” என்ற வாதம் முன்வைக்கப்பட்டது.
இதுகுறித்து சென்னை தலைமை செயலகத்தில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இன்று செய்தியாளர்களிடம் பேசியபோது, “மத்திய அரசு தகவல் தொழில்நுட்ப விதிகளில் இணையவழி சூதாட்டங்கள் நடத்துபவர்களை பாதுகாக்க சில திருத்தங்களை கொண்டு வந்துள்ளது. இந்த விதிகளுக்கு நாங்கள் ஆட்சேபனை தெரிவித்துள்ளோம். அரசுக்கு வருவாய் வர வேண்டும் என்ற குறிக்கோளுடன் விதிகள் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை மாநில அரசு நிறைவேற்ற முடியாது என்று எந்த சட்டமும் மத்திய அரசு கொண்டுவரவில்லை. மாநில அரசுக்கு உள்ள உரிமையின் அடிப்படையிலேயே சட்டம் இயற்றப்பட்டுள்ளது. நேரடியாக விளையாடுவதற்கும் ஆன்லைனில் விளையாடுவதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது.
அதனை மத்திய அரசு புரிந்துகொள்ள வேண்டும். தெலங்கானா, அசாம் மாநிலத்தில் ஆன்லைன் தடை சட்டம் கொண்டு வந்துள்ளனர். மத்திய அரசு வருமானத்தை தான் பார்க்கிறார்கள். மக்களின் உயிர்களை பார்க்கவில்லை” என்று தெரிவித்தார்.
செல்வம்
“மணிப்பூர் சம்பவம் நாகரிக சமுதாயத்திற்கு வெட்கக்கேடு” – பிரதமர் மோடி
அரசு மரியாதையை மறுத்த உம்மன் சாண்டி…கேரளாவின் இன்னொரு முன்னுதாரணம்