ரூ.2000 கோடி மதிப்பிலான போதைப்பொருள் கடத்தல் வழக்கில் திமுக முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக்கை மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் நேற்று (மார்ச் 9) கைது செய்தனர். இதனையடுத்து டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய என்சிபி துணை இயக்குனர் ஞானேஸ்வர் சிங், “ஜாபர் சாதிக் தொடர்புடைய அனைவரிடமும் விசாரணை நடத்தப்படும்” என்று தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில், ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக சென்னையில் இன்று (மார்ச் 10) செய்தியாளர்களிடம் பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, திமுகவை என்சிபி-ஐ வைத்து மிரட்டி பார்க்கலாம் என்று பாஜக நினைக்கிறது என்று தெரிவித்தார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
“திமுகவை தேர்தல் களத்தில் களங்கப்படுத்தி அரசியல் ஆதாயம் பெறலாம் என்று பாஜக தப்புக்கணக்கு போட்டுக்கொண்டிருக்கிறது. அதற்கு துணையாக அதிமுக துதி பாடிக்கொண்டிருக்கிறது.
முன்பெல்லாம் வருமான வரித்துறை, சிபிஐ, அமலாக்கத்துறை போன்ற விசாரணை அமைப்புகளை களமிறக்கிய பாஜக, இன்றைக்கு திமுக அரசை களங்கப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு என்சிபி-ஐ களத்தில் இறக்கி விட்டுள்ளது.
ஆனால், தமிழ்நாட்டில் திமுக அரசு பொறுப்பேற்றதும் போதைப்பொருள் தடுப்பில் மேற்கொண்ட நடவடிக்கைகளை நீதிமன்றம் பாராட்டியுள்ளது. ஆனால், திமுகவை என்சிபி-ஐ வைத்து மிரட்டி பார்க்கலாம் என்று மத்திய அரசு எண்ணுகிறார்கள்.
என்சிபி விசாரணை அமைப்பின் துணை இயக்குனர் ஞானேஸ்வர் சிங் டெல்லியில் பத்திரிகையாளர்களை சந்திக்கிறார். புலன்விசாரணை முழுமையாக நிறைவடையவில்லை, ஆனால், அதற்கு முன்பாகவே திமுகவை கொச்சைப்படுத்த வேண்டும், அசிங்கப்படுத்த வேண்டும் என்பதற்காக பத்திரிகையாளர் சந்திப்பை ஏற்பாடு செய்து அதன்மூலமாக ஏதேனும் அரசியல் ஆதாயம் பெறலாமா என்று தப்புக்கணக்கு போட்டிருக்கிறார்.
அதிமுக அமைச்சர்கள் குட்கா விற்பனை வியாபாரிகளுக்கு துணை போனார்கள் என்பது நாடறிந்த உண்மை. நீதிமன்றத்தில் நாங்கள் போராடி அமைச்சர் மீதும் தொடர்புடைய அதிகாரிகள் மீதும் சிபிஐ விசாரணை நடவடிக்கை எடுக்க செய்தோம்.
முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டிலிருந்து ஒரு பேப்பர் எடுக்கப்படுகிறது. அதில் ரூ.85 கோடி எந்தெந்த அமைச்சர்களுக்கு தரப்பட்டன என்ற விவரங்கள் இருக்கின்றன.
ஆனால், அதில் வருமான வரித்துறை, அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. எந்தவகையிலாவது பாஜகவை தாங்கி பிடிக்கலாம் என்று மத்திய அரசின் புலன் விசாரணை அமைப்புகள் துடித்துக்கொண்டிருக்கின்றன.
இன்னும் சொல்லப்போனால் 2013-ஆம் ஆண்டு அவர் மீது ஒரு வழக்கு இருந்தது. அதிமுக அந்த வழக்கை முறையாக நடத்தவில்லை. ஜாபர் சாதிக்கிற்காக நீதிமன்றத்தில் ஆஜரானவர் பாஜக வழக்கறிஞர் அணி தலைவர் பால் கனகராஜ். அதிமுக தான் ஜாபர் சாதிக்கை காப்பாற்றியது.
திமுகவில் 2 கோடிக்கு மேல் உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அனைவரையும் சோதித்து பார்த்து கட்சியில் சேர்க்க முடியாது. ஆனால், அதேநேரத்தில் அவர்கள் தவறு செய்திருக்கிறார்கள் என்று தெரிந்தால், உடனடியாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.
ஜாபர் சாதிக் போன்றவர்களை கட்சியில் இருந்து நீக்கியுள்ளோம். போதைப்பொருள் கடத்தலுக்கு குஜராத் மாநிலத்தின் முந்த்ரா துறைமுகம், உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா மாநிலங்கள் தான் முக்கிய காரணமாக அமைந்துள்ளது. அங்கு 21,000 கிலோ, 9,000 கிலோ, 3,000 கிலோ போதைப்பொருள்கள் கடத்தப்பட்டுள்ளது.
தேர்தல் வரும்போது ஏதாவது ஒரு பொய்யான குற்றச்சாட்டை திமுக மீது சுமத்திவிட முடியாதா என்று பகல்கனவு கண்டுகொண்டிருக்கிறது மத்திய அரசு. தமிழக மக்கள் ஏமாளிகள் அல்ல, திமுக என்றும் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடாது என்று அவர்களுக்கு தெரியும்.
எங்கள் மீது பழிபோடுகிறவர்களுக்கு ஒன்றை மட்டும் சொல்கிறோம். இதற்கெல்லாம் நீங்கள் தான் பொறுப்பாளிகளே தவிர, திமுக அல்ல. ஜாபர் சாதிக் கடத்தியதாக சொல்லும் போதைப்பொருள், டெல்லியிலும் வேறு மாநிலத்திலும் தான் பிடிக்கப்பட்டதே தவிர, தமிழ்நாட்டில் கிடையாது.
தமிழ்நாட்டை பொறுத்தவரை நாங்கள் போதைப்பொருள் நடமாட்டத்தை முழுக்க முழுக்க தடுத்து வைத்திருக்கிறோம்.
பாஜகவில் இருக்கிறவர்கள் இன்றைக்கும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுக்கொண்டு தான் இருக்கிறார்கள். அவர்களெல்லாம் பாஜகவில் சேர்ந்தவுடன் புனிதர்களாக மாறிவிட்டார்கள்.
ஜாபர் சாதிக்கிற்கும் எங்களுக்கும் எந்தவிதமான தொடர்பும் கிடையாது. பாஜகவிலும், அதிமுகவிலும் தான் அவருக்கு தொடர்பானவர்கள் இருக்கிறார்கள். ஜாபர் சாதிக் திமுகவிற்கு ஒரு பைசா கூட தரவில்லை.
குற்றவாளிகளுக்கு நாங்கள் துணைபோக மாட்டோம், அவரை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை வாங்கி கொடுப்போம்” என்று தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
சீட் இல்லாமல் திமுக கூட்டணியில் தொடர்வதா? மமக முக்கிய முடிவு!
தேமுதிகவில் புதிதாக ஐடி விங் அணி: பிரேமலதா அறிவிப்பு!