திருவள்ளுவரை வம்புக்கு இழுப்பதா? – ஆளுநருக்கு அமைச்சர் ரகுபதி கண்டனம்!

அரசியல்

ஆளுநர் ரவி திருவள்ளுவருக்கு காவிச்சாயம் பூசி வம்புக்கு இழுப்பதாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இன்று (ஜனவரி 16) குற்றம்சாட்டியுள்ளார்.

திருவள்ளுவர் தினமான இன்று காவி உடையணிந்த திருவள்ளுவர் புகைப்படத்தை பகிர்ந்து அவரை சனாதனவாதி என்று ஆளுநர் ரவி குறிப்பிட்டிருந்தார். ஆளுநரின் இந்த பதிவுக்கு முதல்வர் ஸ்டாலின், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இந்தநிலையில் ஆளுநரின் பதிவை கடுமையாக விமர்சித்து அமைச்சர் ரகுபதி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “தனக்குத் தெரியாத பலவற்றைக் குறித்து, தனக்கு எல்லாம் தெரிந்ததுபோல் பேசி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது ஆளுநர் ரவியின் வாடிக்கை.

“வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு”என்ற பாரதியின் பாடல் வரிகளில் உள்ள தமிழ்நாடு பெயர் சர்ச்சையில் கடந்த ஆண்டு சிக்கித் தவித்து, தமிழர்களுடைய எதிர்ப்புகளுக்குத் தலைபணிந்து,’இது தமிழ்நாடு தான்’ என்று ஒப்புக்கொண்ட ஆளுநர் ரவி, இந்த ஆண்டு வள்ளுவரை வம்புக்கு இழுத்திருக்கிறார்.

பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டு வந்த பணிகளைச் செய்யாமல், கையில் கிடைக்கும் அனைத்துக்கும் காவிச் சாயம் பூசிக் கொண்டு இருக்கும் ஆளுநர், பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற வள்ளுவரின் பக்கம் இன்று திரும்பியிருக்கிறார்.

ஏதோ பாரம்பர்யமாம். அதுதான் ஈராயிரம் ஆண்டுகளாகக் கோடிக்கணக்கான மக்களை ஒடுக்கிய பாரம்பர்யம் என்பது தமிழ்நாட்டு மக்களுக்கு நன்கு தெரியும்.

வேதநெறிக்கு எதிரான குறள்நெறி கூறிய அய்யன் வள்ளுவரின் வரலாறே தெரியாமல், ஆளுநராக வந்ததாலேயே தான் சொல்வதெல்லாம் வேதம் என்பதைப் போல உருட்டிக் கொண்டிருக்கும் ஆளுநர் உடனே காவிக் கட்சியில் சேர்ந்துவிட்டு, அரசியல் பேசலாம்.

அதற்குக் காலதாமதமாகும் என்றால் அய்யன் திருவள்ளுவர் பற்றி அரிச்சுவடி கூடத் தெரியாமல் பேசுவதை விடுத்து அரசியல் சட்டப்படி நடக்க முயற்சி செய்ய வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

“நான் பயன்படுத்தியது ஒரிஜினல் பீடி கிடையாது” – மகேஷ் பாபு விளக்கம்!

பாலமேடு ஜல்லிக்கட்டு: மாடுபிடி வீரர் பிரபாகரனுக்கு நிஸான் கார்!

+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *