திமுக எம்.பி.யும், அமைச்சர் பொன்முடியின் மகனுமான கவுதம சிகாமணி நேரில் ஆஜராக சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் 2006 – 2011ஆம் ஆண்டு கனிம வளங்கள் மற்றும் சுரங்கத்துறை அமைச்சராக பதவி வகித்தார் பொன்முடி. அப்போது விழுப்புரம் மாவட்டம், பூத்துறை கிராமத்திலுள்ள செம்மண் குவாரியில் அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்ததன் மூலம் அரசுக்கு ரூ.28.36 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்பட்டதாகப் புகார் எழுந்தது.
இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத் துறை 2012ல் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. விழுப்புரம் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடந்து வருகிறது.
இந்த வழக்கை அடிப்படையாகக் கொண்டு அமலாக்கத் துறையும் வழக்குப்பதிவு செய்து பொன்முடி மற்றும் அவரது மகன் கவுதம சிகாமணி தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தியது.
இந்த சோதனை முடிவில், 13 லட்சம் ரூபாய் மதிப்பிலான பிரிட்டன் பவுண்ட்கள் உள்பட 81 லட்சத்து 70 ஆயிரம் ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டது என்றும், 41 கோடியே 90 லட்சம் ரூபாய் வங்கி நிரந்தர வைப்பு தொகை முடக்கப்பட்டதாகவும் அமலாக்கத் துறை தெரிவித்தது.
தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் மாதம் அமைச்சர் பொன்முடி, கவுதம சிகாமணி எம்.பி., கே.எஸ். ராஜமகேந்திரன் உள்ளிட்ட 6 பேருக்கு எதிராக அமலாக்கத் துறை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 90 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்தது.
இந்த வழக்கை முதன்மை அமர்வு நீதிமன்றம் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றி உத்தரவிட்டது.
அதன்படி வழக்கை இன்று (நவம்பர் 6) விசாரித்த சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி மலர் வாலண்டினா கவுதம சிகாமணி கே.எஸ்.ராஜ மகேந்திரன், வி.ஜெயசந்திரன், கே. சதானந்தம், கோபிநாத் உள்ளிட்டோர் நேரில் ஆஜராக உத்தரவிட்டார்.
வழக்கு விசாரணையை நவம்பர் 24ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
அமர்பிரசாத் ரெட்டி ஜாமீன் மனு: காவல்துறை பதிலளிக்க உத்தரவு!
முதல்வர் ஸ்டாலின் உடல்நிலை எப்படி இருக்கிறது?… அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்!