ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக அரசை கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக செயல்படுகிறார் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழக துணைவேந்தர்கள், கல்லூரி கல்வி இயக்குனர், துணை இயக்குனர்களுடன் அமைச்சர் பொன்முடி இன்று (மே 31) ஆலோசனை நடத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பொன்முடி,
“பல்கலைக்கழக துணை வேந்தர்கள், கல்லூரி கல்வி இயக்குனர், துணை இயக்குனர்கள் ஆகியோருடன் பேசி இன்று பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை, நான் முதல்வன் திட்டம், மொழிப்பாடங்களை பல்கலைக்கழகங்களில் நடத்துவது குறித்து விவாதித்தோம்.
ஒரு கல்லூரியில் சேர்ந்த பிறகு மற்றொரு கல்லூரியில் மாணவருக்கு இடம் கிடைத்தால் மாணவர் செலுத்திய கட்டணம், அவர்களது மாற்று சான்றிதழ் போன்றவற்றை கல்லூரி நிர்வாகம் உடனடியாக வழங்க வேண்டும் என்று பல்கலைக்கழக துணை வேந்தர்களிடம் தெரிவித்துள்ளேன்.
அனைத்து பல்கலைக்கழகங்களிலும் மொழிப்பாடங்களில் ஒரே பாடத்திட்டம் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளோம்.
பேராசிரியர்களுக்கு நான் முதல்வன் திட்டம் குறித்து அதிகளவில் பயிற்சி கொடுக்க உள்ளோம்.
அடுத்த ஆண்டு முதல் பல்கலைக்கழக பட்டப்படிப்புகளின் தேர்வு முடிவுகள் ஒரே நாளில் அறிவிக்கப்படும்.
இந்த மாதத்திற்குள் பல்கலைக்கழகங்களில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று துணை வேந்தர்களுக்கு அறிவுறுத்தியுள்ளேன். ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக அரசை கலந்தாலோசிக்காமல் சில விஷயங்களில் தன்னிச்சையாக செயல்படுகிறார்.
அதனை நாங்கள் முதல்வரிடம் கூறியிருக்கிறோம். மாநில கல்வி கொள்கை மிக விரைவில் அறிவிக்கப்பட்டு அதன் அடிப்படையில் தான் கல்வித்துறை செயல்படும். புதிய கல்வி கொள்கையில் நல்ல திட்டங்கள் இருந்தால் மாநில கல்வி கொள்கையில் அதனை செயல்படுத்துவோம்” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்