ஆளுநர் எழுதிய கடிதம்- அன்றே சொன்ன மின்னம்பலம்: உறுதிப்படுத்திய பொன்முடி

அரசியல்

செந்தில்பாலாஜியிடம் இருந்த மின்சாரம், மதுவிலக்கு துறைகளை தங்கம் தென்னரசு, முத்துசாமி ஆகிய அமைச்சர்களுக்கு மாற்றியளித்து ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பரிந்துரை செய்தார்.

இதற்கு பதிலளித்து ஆளுநர் எழுதிய கடிதம் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. மேலும் செந்தில்பாலாஜி விவகாரத்தில் ஆளுநர் ஏற்கனவே முதலமைச்சருக்கு எழுதிய கடித விவகாரமும் இப்போது அமைச்சர் பொன்முடியால் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

அன்றே வெளியிட்ட மின்னம்பலம்

உச்ச நீதிமன்ற தீர்ப்பை அடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜி மீது சட்ட நடவடிக்கை எடுக்கக்கோரி முதல்வர் ஸ்டாலினுக்கு ஆளுநர் ரவி கடிதம் அனுப்ப ஆலோசனை நடத்தியதாகவும், பிறகு அப்படி ஒரு கடிதம் எழுதியதாகவும் மின்னம்பலத்தில் முதன் முதலாக செய்தி வெளியிட்டிருந்தோம். செந்தில் பாலாஜிக்கு எதிராக ஆளுநர் நடத்தும் ஆலோசனை என்ற தலைப்பில் ஜூன் 6-ஆம் தேதியும், செந்தில்பாலாஜியை காக்க ஸ்டாலின் வியூகம் என்ற தலைப்பில் ஜூன் 9 ஆம் தேதியும் இரு செய்திகள் இந்த விவகாரம் தொடர்பாக மின்னம்பலத்தில் வெளியிட்டிருந்தோம்.

minister ponmudi says governor return cm proposal

கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் 2022 இல் முதல்வர் பினராயி விஜயனுக்கு அம்மாநில நிதியமைச்சர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரி எழுதிய கடிதத்தை முன்னுதாரணமாக வைத்து இந்த கடிதத்தை ஆளுநர் ரவி முதலமைச்சருக்கு அனுப்பியிருந்தார். இந்தக் கடிதம் பற்றிய விவரங்களை உயர் கல்வி அமைச்சர் பொன்முடி இன்று (ஜூன் 15) இரவு உறுதிப்படுத்தியிருக்கிறார்.

இந்தக் கடித விவகாரத்தை ஏன் இப்போது அமைச்சர் பொன்முடி வெளிப்படுத்தியிருக்கிறார்?

அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று அதிகாலை அமலாக்கத் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து செந்தில் பாலாஜி வசமிருந்த மின்சாரத்துறையை தங்கம் தென்னரசுவுக்கும் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையை முத்துசாமிக்கும் பகிர்ந்தளிக்க ஆளுநருக்கு முதல்வர் ஸ்டாலின் பரிந்துரை கடிதம் அனுப்பினார்.

இந்த கடித்தத்தை ஆளுநர் ரவி திருப்பி அனுப்பியிருப்பதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த பொன்முடி, “அமைச்சர்‌ செந்தில்பாலாஜியை நீக்க வேண்டும்‌ என ஆளுநர்‌‌ 31.5.2023 அன்று ஒரு கடிதத்தை முதல்வருக்கு எழுதியிருந்தார்‌. இந்தக்‌ கடிதம்‌ கிடைக்கப்‌ பெற்ற அடுத்த நாளே முதல்வர் ஸ்டாலின்‌ 1.6.2023 அன்று ஆளுநருக்கு இது குறித்த தெளிவான சட்ட ரீதியான காரணங்களை விளக்கிக்‌ கூறி பதில்‌ கடிதம்‌ அனுப்பி வைத்திருந்தார்‌.

minister ponmudi says governor return cm proposal

அந்த கடிதத்தில்‌, ஆளுநரின்‌ கடிதம்‌ அரசியல்‌ சட்டத்திற்கு எதிரானது என்பதை சுட்டிக்காட்டியும்‌ மக்களால்‌ தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சருக்குத்தான்‌ அமைச்சரை நீக்கவோ, நியமிக்கவோ பரிந்துரை செய்யும்‌ அதிகாரம்‌ இருக்கிறது என்பதையும்‌- இது குறித்து பரிந்துரைகளை அளிக்கும்‌ ஆளுநருக்கு அரசியல்‌ சாசனத்தின்படி எவ்வித அதிகாரமும்‌ இல்லை என்பதையும்‌ தெளிவாக  அரசியல்‌ சட்டப்பிரிவு 164(1) -ஐ மேற்கோள்‌ காட்டி எழுதியிருக்கிறார்‌.

மேலும்‌ அக்கடிதத்தில்‌ ஒரு மாநில அமைச்சரவையில்‌ யார்‌ அமைச்சராக இருக்க வேண்டும்‌, இருக்க கூடாது என்பதை முடிவு செய்யும்‌ அதிகாரம்‌ ஆளுநருக்கு இல்லை என்பதை முதலமைச்சர்‌ ஆளுநருக்கு அடிப்படை அரசியல்‌ பாடமே எடுத்திருக்கிறார்‌.

அமித் ஷா பதவி விலகினாரா?

தற்போதைய மத்திய உள்துறை அமைச்சர்‌ அமித்ஷா‌, குஜராத்‌ உள்துறை அமைச்சராக இருந்த போது, வழக்குகள்‌ விசாரணையில்‌ இருந்த நிலையில் எப்படி பதவியில் தொடர்ந்தார் என்பதை கூட உதாரணமாக சுட்டிக்காட்டியிருக்கிறார்.

அக்கடிதத்திலேயே அமைச்சர்‌ செந்தில்பாலாஜி விஷயத்தில்‌ கடிதம்‌ எழுதும்‌ ஆளுநர்‌‌ அதிமுக முன்னாள்‌ அமைச்சர்கள்‌ மீது ஊழல்‌ வழக்குத்‌ தொடர கோரப்பட்ட அனுமதியை அளிக்காமல்‌ ஏன்‌ கோப்புகளை கிடப்பில்‌ போட்டு வைத்திருக்கிறார்‌ என்றும்‌ கேள்வி எழுப்பியிருந்தார்‌. அதற்கு எல்லாம்‌ எந்த பதிலையும்‌ கூற ஆளுநருக்கு திராணி இல்லை போலும்‌. அதை ஏனோ மறந்துவிட்டு முதலமைச்சர்‌ அனுப்பிய 1.6.2023 நாளிட்ட பதில்‌ கடிதத்தினை வசதியாக மறைத்து விட்டு, தான்‌ முதலமைச்சருக்கு எழுதிய கடிதத்தை மட்டும்‌ லீக்‌ செய்திருப்பது அற்பத்தனமான அரசியல்‌ என்றே கருத வேண்டியதிருக்கிறது” என்று ஆளுநரின் கடிதம் பற்றி வெளிப்படையாக பேசியிருக்கிறார் பொன்முடி.

ஆளுநர் கேட்கும் காரணம்

மேலும் அவர், “தற்போதைய சூழலில் அமைச்சர் செந்தில்பாலாஜியின்‌ உடல்நிலையை கருத்தில்‌ கொண்டு அரசு பணிகள்‌ தொடர்ந்து தொய்வின்றி நடைபெற வேண்டும்‌ என்ற நோக்கத்தோடு அமைச்சர்‌ செந்தில்பாலாஜி கவனித்து வந்த மின்சாரத்துறையை தங்கம்‌ தென்னரசுவுக்கும் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையை முத்துச்சாமிக்கு மாற்றி வழங்கவும் இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜியை பரிந்துரைத்து முதலமைச்சர் இன்று (ஜூன் 15) மதியம்‌ கடிதம்‌ எழுதியிருந்தார்.

இந்திய அரசியல்‌ அமைப்புச்‌ சட்டத்தின்படி அமைச்சர்களின்‌ பொறுப்புகளை மாற்றி அமைக்கும்‌ அதிகாரம்‌ முதலமைச்சருக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ள நிலையில்‌, தேவையற்ற வகையில்… அமைச்சர்‌ செந்தில்பாலாஜி குறித்து அமலாக்கத்துறை விசாரித்து வருவதை சுட்டிக்காட்டி சரியான காரணத்தை மேற்கோள்‌ காட்டி கடிதம்‌ அனுப்புமாறு ஆளுநர்‌ கேட்டிருக்கிறார்‌.

இதை மாநில அரசின்‌ நிர்வாகத்தில்‌ ஆளுநர்‌ தலையிடுவதாகவும்‌ அரசியல்‌ சட்டத்திற்கு புறம்பானதாகவும்‌ நாங்கள்‌ பார்க்கிறோம்‌. எப்படி அமைச்சர்களை நியமிப்பதிலும்‌, நீக்குவதிலும்‌ முதலமைச்சரின்‌ பரிந்துரைப்படி ஆளுநர்‌ செயல்பட வேண்டுமோ அதே போல்தான்‌ இலாகா மாற்றுவதிலும்‌ செயல்பட வேண்டும்‌.

முதல்வரை கேள்வி கேட்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை

ஒரு அமைச்சரின்‌ இலாகாவை ஏன்‌ முதலமைச்சர்‌ மாற்றுகிறார்‌ என்று காரணம்‌ கேட்க ஆளுநருக்கு அதிகாரம்‌ இல்லை. அரசியல்‌ சட்டப்படி உரிமையும்‌ இல்லை. மேலும்‌ அமைச்சர்‌ ஒருவர்‌ விசாரணையை சந்திப்பது அவரது அமைச்சர்‌ பொறுப்புக்கான தகுதியை எந்த வகையிலும்‌ பாதிக்காது என்ற நிலையில்‌, அதனை ஆளுநர்‌ சுட்டிக்காட்டி இருப்பது தேவையற்றது.

minister ponmudi says governor return cm proposal

இவற்றை கருத்தில்‌ கொண்டு, ஆளுநரின்‌ கடிதத்திற்கு உடனடியாக இன்று பதில்‌ அனுப்பி வைக்கப்படுகிறது. அதில்‌ அவரின்‌ முந்தைய கடிதத்திற்கு பதில்‌ அளிக்கப்பட்ட விவரத்தையும்‌. இன்றைய கடிதத்திற்கு தெளிவான சட்ட விவரங்களையும்‌ எடுத்துக்‌ கூறி தான்‌ ஏற்கனவே அளித்த பரிந்துரையை ஏற்று அதற்கு உடனடியாக ஒப்புதல்‌ அளிக்க முதலமைச்சர்‌ ‌ கேட்டுக்‌ கொண்டுள்ளார்.

அரசியல்‌ சட்டப்படி பதவிப்‌ பிரமாணம்‌ செய்து கொண்டு அரசியல்‌ சட்டத்திற்கு விசுவாசமாக இருக்க வேண்டிய ஆளுநர்‌ இப்படி அரசியல்‌ சட்டத்திற்கு விசுவாசமாக இல்லாமல்‌ இருக்கிறார்‌. ஆளுநர் ரவி பாஜக ஏஜெண்டாக செயல்படுகிறார் என்பது அவரது கடிதங்களின் மூலமாக தெரிகிறது” என்று பொன்முடி தெரிவித்துள்ளார்.

செல்வம்

செந்தில் பாலாஜி காவேரி மருத்துவமனைக்கு மாற்றம்!

+1
0
+1
0
+1
0
+1
4
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *