Ponmudi ED investigation completes
செம்மண் குவாரி முறைகேடு வழக்கில் இன்று (நவம்பர் 30) நேரில் ஆஜரான அமைச்சர் பொன்முடியிடம் அமலாக்கத்துறை நடத்திய விசாரணை நிறைவு பெற்றுள்ளது.
2006-2011 திமுக ஆட்சியில் கனிம வளங்கள் மற்றும் சுரங்கத்துறை அமைச்சராக இருந்த பொன்முடி விழுப்புரம் மாவட்டத்தில் செம்மண் குவாரிகளில் அளவுக்கு அதிகமாக செம்மண் அள்ளியதாக புகார் எழுந்தன. மேலும் இதன் மூலம் அரசுக்கு ரூ.28.36 கோடி இழப்பு ஏற்படுத்தியதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.
தொடர்ந்து அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கவுதம சிகாமணி, உறவினர் ஜெயச்சந்திரன் உள்ளிட்ட 7 பேர் மீது கடந்த 2012 ஆம் ஆண்டு விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்தது.
இதனை அடிப்படையாக வைத்து அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கவுதம சிகாமணி உள்ளிட்டோர் தொடர்புடைய இடங்களில் கடந்த ஜூலை மாதம் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர்.
அப்போது பொன்முடி மற்றும் அவரது மகன் கவுதம சிகாமணியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
செம்மண் முறைகேடு தொடர்பாக கிடைத்த தொகை ஹவாலா பரிவர்த்தனைகள் மூலம் வெளிநாடுகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளதாகவும், சோதனையின் முடிவில், முக்கிய ஆவணங்களும், 13 லட்சம் ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் 41.9 கோடி ரூபாய் நிரந்தர வைப்பு தொகை முடக்கப்பட்டுள்ளதாகவும் அமலாக்கத் துறை தெரிவித்திருந்தது.
இந்நிலையில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என அமைச்சர் பொன்முடிக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பியது.
அதன்படி இன்று நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் அமைச்சர் பொன்முடி விசாரணைக்கு ஆஜரானார்.
அமைச்சர் பொன்முடியிடம் அமலாக்கத்துறை நடத்திய விசாரணை தற்போது நிறைவு பெற்றுள்ளது.
கிட்டத்தட்ட 5 மணி நேரம் நடந்த விசாரணைக்குப் பிறகு அமலாக்கத்துறை அலுவலகத்தை விட்டு வெளியேறினார் அமைச்சர் பொன்முடி.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா
வெதர் ரிப்போர்ட்: நடைபயணத்தை ஒத்திவைத்த அண்ணாமலை
எக்ஸிட் போல் பலிக்குமா? 2018 சொல்லும் மெசேஜ்!
‘முடியல’ விஷ்ணுவின் சுயரூபத்தை தோலுரித்து காட்டிய ஹரிஷ் கல்யாண்
Ponmudi ED investigation completes