விஜய்யின் மாநாட்டுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் வரும் நவம்பர் 5,6-ஆம் தேதிகளில் விழுப்புரம் மாவட்டத்திற்கு வருகை தரும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும் என்று திமுக துணை பொதுச்செயலாளரும் வனத்துறை அமைச்சருமான பொன்முடி இன்று (நவம்பர் 2) நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வி.சாலையில் கடந்த அக்டோபர் 27-ஆம் தேதி நடைபெற்றது. இந்த மாநாட்டில் 3 லட்சம் பேர் வரை கலந்துகொண்டிருப்பார்கள் என்று காவல்துறை வட்டாரங்களில் சொல்கிறார்கள்.
மாநாட்டில் பேசிய விஜய் ஆளும் திமுகவை கடுமையாக சாடியிருந்தார். தனது அரசியல் எதிரி திமுக என்றும் மக்கள் விரோத திராவிட மாடல் அரசு என்றும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தார்.
விஜய்யின் இந்த பேச்சுக்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, சபாநாயகர் அப்பாவு, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி உள்ளிட்டோர் எதிர்வினையாற்றியிருந்தனர்.
இந்தநிலையில், தவெக மாநாட்டுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், விழுப்புரம் மாவட்டத்திற்கு வருகை தரும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு வரவேற்பு கொடுக்க வேண்டும் என்று விஜய்யின் பெயரை நேரடியாக குறிப்பிடாமல் பொன்முடி விமர்சித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில், திமுக வடக்கு மாவட்ட ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய பொன்முடி, “விழுப்புரம் மாவட்டத்திற்கு வருகிற நவம்பர் 5,6-ஆம் தேதிகளில் உதயநிதி வருகிறார். ஆயிரக்கணக்கானோர் திரண்டு அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுக்க வேண்டும். அதுதான் இந்தக் கூட்டத்தின் நோக்கம். ஏனென்றால் இந்த மாவட்டத்தில் என்ன நடந்தது என்று உங்களுக்கு தெரியும். ஒருவாரத்திற்கு முன்பாக யார் வந்து போனார்கள் என்று தெரியும். அதற்கெல்லாம் பதிலடி கொடுக்கிற மாதிரி நாம் சிறப்பாக செயல்பட வேண்டும்” என்று தெரிவித்தார்.
அமைச்சர் பொன்முடியின் இந்த பேச்சால் சமூக வலைதளங்களில் திமுக – தவெக நிர்வாகிகள் வார்த்தை மோதலில் ஈடுபட்டு வருகின்றனர்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
குமரியில் கொட்டித் தீர்க்கும் கனமழை… வானிலை மையம் ஆரஞ்ச் அலர்ட்!
தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அறிவிப்பு!