பொன்முடி வழக்கில் தேவையற்ற கருத்துக்களை நீக்குக: ஓய்வுபெற்ற நீதிபதி வசந்த லீலா

Published On:

| By Selvam

தனக்கு எதிராக தனி நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்த தேவையற்ற கருத்துக்களை  உத்தரவிலிருந்து நீக்க வேண்டும் என்று அமைச்சர் பொன்முடிக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பளித்த  நீதிபதி வசந்த லீலா சென்னை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

1996- 2001 திமுக ஆட்சிக்காலத்தில் போக்குவரத்துறை அமைச்சராக இருந்த பொன்முடி வருமானத்திற்கு அதிகமாக ரூ.1.36 கோடி சொத்து சேர்த்ததாக பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது.

இந்த வழக்கின் விசாரணை விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. பின்னர் வேலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.

இந்த வழக்கில் கடந்த ஜூன் 28-ஆம் தேதி தீர்ப்பளித்த நீதிபதி வசந்த லீலா, பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் போதுமான ஆதாரங்கள் இல்லாததாலும் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததாலும் இருவரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார். பொன்முடி வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி வசந்த லீலா சில மாதங்களில் ஓய்வு பெற்றார்.

பொன்முடிக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை மேல்முறையீடு செய்யாததால், எம்.பி. எம்.எல்.ஏ-க்கள் மீதான வழக்கை விசாரித்து வந்த சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டார்.

இந்த வழக்கின் விசாரணையின் போது, “பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த அமைச்சர் பொன்முடிக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கு, ஜூன் முதல் வாரத்திலிருந்தே குற்றம் சாட்டப்பட்டவருடைய நட்சத்திர பலன்கள் மாவட்ட நீதிபதி உள்ளிட்ட நீதித்துறை அதிகாரிகளின் ஆசியுடன் நேர்த்தியாக நகர துவங்கியுள்ளது.

அமைச்சர் பொன்முடிக்கு சாதகமாக வழக்கை விசாரித்த மாவட்ட நீதிபதி வசந்த லீலா செயல்பட்டுள்ளார்” என்ற குற்றச்சாட்டை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில், தனக்கு எதிராக தனி நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்த தேவையற்ற கருத்துக்களை உத்தரவிலிருந்து நீக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற பதிவாளருக்கு ஓய்வுபெற்ற நீதிபதி வசந்த லீலா கடிதம் அனுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் அனுப்பியுள்ள கடிதத்தில், “அமைச்சர் பொன்முடிக்கு எதிரான வழக்கானது விழுப்புரம் நீதிமன்றத்திலிருந்து வேலூர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. அதன்பிறகு முறையாக இந்த வழக்கு விசாரணை 40 நாட்கள் நடைபெற்றது. இதுதொடர்பான உத்தரவுகளை பார்க்காமல் தனி நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் எனக்கு எதிராக தெரிவித்த கருத்துக்கள் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. 2021-ஆம் ஆண்டு செங்கல்பட்டில் இருந்து வேலூருக்கு இடமாற்றம் செய்யப்பட்டேன்.

வேலூரிலிருந்து சென்னைக்கு இடமாற்றம் கேட்டு இரண்டு முறை விடுத்த கோரிக்கையை உயர்நீதிமன்றம் பரிசீலிக்கவில்லை. ஜூன் முதல் வாரத்திலிருந்தே குற்றம்சாட்டப்பட்டவருடைய நட்சத்திர பலன்கள் மாவட்ட நீதிபதி உள்ளிட்ட நீதித்துறை அதிகாரிகளின் ஆசியுடன் நேர்த்தியாக நகரப்பட்டது என்ற தேவைற்ற கருத்துக்களை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.

குற்றம்சாட்டப்பட்டவருடைய ஜாதக பலன்கள் என்னுடைய தீர்ப்பில் எந்த ஓரு தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. விளக்கத்தை கேட்காமல் என் மீது தெரிவித்த அனைத்து கருத்துக்களையும் உத்தரவில் இருந்து நீக்க வேண்டும்.

ஏற்கனவே 90 சதவிகித வழக்கு விசாரணை விழுப்புரம் நீதிமன்றத்தில் முடிந்துவிட்டது. கடைசி கட்டத்தை மட்டுமே நான் விசாரித்தேன். முறையாக விசாரித்து தீர்ப்பு வழங்கியுள்ளேன்.

கடந்த 28 ஆண்டுகளாக நீதித்துறையில் பணியாற்றியுள்ளேன். ஒட்டுமொத்தமாக நற்பெயரை கெடுக்கும் வகையில் விளக்கத்தை கேட்காமல் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் குற்றம்சாட்டியுள்ளார். இந்த உத்தரவில் நீதித்துறையில் கட்டிக்காத்த 28 ஆண்டுகள் பணி நேர்மை பறிக்கப்பட்டது. எனவே என் மீது தெரிவித்த தவறான கருத்துக்களின் பகுதியை நீக்க வேண்டும்” என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்துமஸ்: தமிழ்நாட்டுக்கு வரும் சித்தராமையா

கூகுளில் அதிகம் தேடப்பட்ட டாப் 10 சுற்றுலா தலங்கள் இதோ!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share